search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோதனைகளைத் தாண்டுவோம்
    X

    சோதனைகளைத் தாண்டுவோம்

    நிலையற்ற சோதனைகள் வரும்போது நாம் நிலையான தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அப்போது சோதனைகளைத் தாண்டும் வலிமை கிடைக்கும்.
    பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான மன்னன் தாவீது. அவரது வம்சா வழியில் வந்தவர் தான் இறைமகன் இயேசு.

    ‘தாவீது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையை வாழ்ந்தவர்’ என விவிலியம் குறிப்பிடுகிறது.

    ஆனால் அவரது உயிரைப் பறிக்க சவுல் வீரமாய் முயன்றார். காரணம் சவுல் மன்னனை விட தாவீது அதிகம் புகழ் பெற்றது தான்.

    பொறாமை அவருக்குள் தீய எண்ணங்களை விதைத்தது.

    “...எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற ரத்தத்திற்கு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்?” (1 சாமுவேல் 19:5) என சவுலிடம் அறிவுரை கூறுகின்றனர்.

    புதிய ஏற்பாட்டில் அவரது வழியில் வந்த மீட்பர் இயேசு கிறிஸ்து குற்றமற்றவர். ஆனால் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.

    பிலாத்து அதிகாரம் பொருந்திய தலைவராக அங்கே நிற்கிறார். இயேசுவை விடுவிக்கவும், கொல்லவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

    ஆனால் அவரோ தனது ‘கைகளைக் கழுவி’, ‘எனக்கு இந்த ரத்தத்தோடு பங்கில்லை’ என கூறுகிறார். கை கழுவுவது மிக எளிது. ஆனால், ரத்தப்பழி அவர் மீது விழாமல் இருக்க முடியாது.

    தனது பதினாறாம் வயதில் அரசராய் அமர்ந்து, பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செலுத்திய தாவீதைக் கொல்ல இருபத்தோரு முயற்சிகள் நடந்தன. எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. தன்னைக் காத்துக்கொள்ள அவர் அலைந்து திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    சூழ்ச்சி, ரத்தப்பழியைக் கொண்டு வரும்.

    வீழ்ச்சி, அதன் விளைவாக வரும்.

    சவுலின் வாழ்வில் இருந்த சூழ்ச்சி பொறாமை, சோதனை அனைவருக்கும் பொதுவானது. அதில் யாரும் தப்ப முடியாது. சவுலும் அதற்கு விதிவிலக்கு அல்ல. தாவீதின் வளர்ச்சி அவருக்குள் பொறாமையை விதைத்தது.

    தனது சாயலாய் படைக்கப்பட்ட முதல் மனிதனாலேயே சோதனையை தாண்ட முடியவில்லை. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைத் தின்றனர்.

    ஆபிரகாமும் லோத்தும் பயணித்த போது லோத்தின் முன்னால் நின்ற சோதனை நல்ல செழிப்பான நாட்டை நான் எடுத்துக் கொள்வதா? அல்லது அதை ஆபிரகாமுக்கு விட்டுக் கொடுப்பதா? என்பது. சோதனையில் லோத்து விழுந்து விட்டார்.

    யாக்கோபு, ஏசா வாழ்வில் பசி சோதனையாய் வருகிறது, அதில் வீழ்கிறார் ஏசா. உணவுக்காய் தலைமகன் உரிமையை இழக்கிறார்.

    சவுலும் விதிவிலக்கல்ல, அவரும் சோதனைக்குள் விழுந்து விடுகிறார்.

    கடவுள், சாத்தான் எனும் இரண்டு துருவங்களைப் பற்றிப் பார்க்கும் போது, சாத்தான் கடவுளை வெற்றி கொள்ள நினைக்கிறான். ஆதாம் ஏவாள் எனும் குற்றமற்ற தூய படைப்பு, குற்றமாய் மாறிப்போகிறது. சோதனையை அவர்கள் வெற்றி கொள்ளாததால் வீழ்ச்சியே விளைவாகிறது.

    சோதனையில் விழும்போது பல விளைவுகள் தோன்றுகின்றன.

    1. இறைவனுக்கு முன்னால் நிற்க முடியாத அளவுக்கு எழுகின்ற வெட்கம். தகுதியற்ற நிலை.

    2. உள்ளுக்குள் எழுகின்ற பயம். ஆதாமும் ஏவாளும் ஓடி ஒளிகின்றனர்.

    3. குழப்பங்களும் குற்றச்சாட்டுகளும். ஆதாம் ஏவாளைப் பழி சொல்ல, ஏவாள் பாம்பைப் பழி சொல்ல, எல்லோரும் அடுத்தடுத்து வழுக்குகின்றனர்.

    4. வேதனைகள். அந்த பாவத்தின் விளைவாக இறைவனை விட்டு விலக வேண்டிய சூழல். அது வேதனைகளை விளைவிக்கிறது.

    5. இறைவனால் வரமாய் கிடைத்தவை விலக்கப்பட, வியர்வையால் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலை.

    6. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த அன்னியோன்யமான உறவு முறிகிறது. சக மனிதனோடு இருந்த உறவும் உடைகிறது.

    சோதனையிலிருந்து மனிதன் தப்ப முடியாது, ஆனால் எதிர்க்க முடியும். அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்?

    “நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை. நான் எதையும் ஏற்றுக்கொள்வேன்” என்று சொன்ன எலிசா சோதனையைத் தாண்டினார்.

    “உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்” என அன்பளிப்பை மறுத்த ஆபிரகாம் சோதனையைத் தாண்டினார்.

    “நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?” என சொன்ன யோபு சோதனையைத் தாண்டினார்.

    “திராட்சை ரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது” என்று முடிவெடுத்த தானியேல் சோதனையைத் தாண்டினார்.

    சோதனைகள் என்பவை நிலையானவை அல்ல.

    இறைமகன் தரும் மீட்பே நிலையானது.

    அழகு, செல்வம், பெருமை, சுயநலம், பொறாமை என பல சோதனைகள் நம் வாழ்வில் வரலாம். சோதனைகள் நிலையற்றவை. நிலையற்ற சோதனைகள் வரும்போது நாம் நிலையான தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அப்போது சோதனைகளைத் தாண்டும் வலிமை கிடைக்கும்.

    அருட்பணி,
    வெலிங்டன் ஜேசுதாஸ்
    Next Story
    ×