search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் புனித அல்போன்சா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கொடியேற்றம் மற்றும் ஆடம்பர கூட்டுத்திருப்பலிக்கு தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமை தாங்குகிறார். பள்ளியாடி பங்குத்தந்தை பெனடிக்ட் அனலின் மறையுரையாற்றுகிறார்.

    21-ந்தேதி பல்வேறு பங்குகளில் இருந்து இளையோர் செப வழிபாடுடன் புனித அல்போன்சா திருத்தலத்துக்கு வந்து சேர்வார்கள். காலை 10.30 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் வழிபாடு பேரருட்தந்தை தோமஸ் சத்தியநேசன் தலைமையில் நடைபெறுகிறது. 22-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் சாலமோன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதே போல் தினமும் காலை திருப்பலி, மாலை புனித அல்போன்சா சிறப்பு நவநாள் வழிபாடு, ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.

    27-ந்தேதி நடைபெறும் எட்டாம் நாள் திருவிழாவை அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிக்கிறார்கள். காலை 9 மணிக்கு பங்குபணியாளர் ஜோசப் தெக்கேத்தலக்கல் சிறப்பு நவநாள் மற்றும் திருப்பலியை நிறைவேற்றுகிறார். இதில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் கலந்து கொண்டு 2017-18-ம் கல்வி ஆண்டில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறார்.

    28-ந்தேதி புனித அல்போன்சாவின் நினைவு நாளையொட்டி மாலை 6.30 மணிக்கு சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்காராயர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    29-ந்தேதி தக்கலை மறைமாவட்ட அருட்பணியாளர்கள் மற்றும் பங்கு மக்கள் அல்போன்சா திருத்தலம் நோக்கி புனித பயணமாக வருகிறார்கள். காலை 9 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் வழிபாட்டை பேரருட்தந்தை தாமஸ் பவ்வத்துப்பரம்பில் வழிநடத்துகிறார்.9.30 மணிக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அவர் ‘உலகம் போற்றும் தியாகச்சுடர் புனித அல்போன்சா’ என்ற தலைப்பில் மறையுரை ஆற்றுகிறார். அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு தேர் பவனியும், 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்தும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் பங்குத்தந்தை தாமஸ் பவ்வத்துப்பரம்பில் மற்றும் துணை பங்குத்தந்தை அஜின் ஜோஸ் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×