search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறைகளை குறைப்போம்
    X

    குறைகளை குறைப்போம்

    பிறரில் உள்ள குறைகளை அதிகம் பார்க்க காரணம் மற்றவர்களில் உள்ள குறைபாடு அல்ல. அது என்னில் உள்ள குறைபாடு!. ஆதலால் குறைகளை குறைப்போம்.
    தவக்காலத்தில் நம்மிடமிருந்து அகற்ற வேண்டிய மற்றுமொரு வேண்டாத குணம், குறைகாணுதல். இயேசுவை பின் தொடர்ந்த மக்களை 2 பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவதாக, அவருடைய சொல்லாலும், செயல்களாலும் கவரப்பட்டு அவருடைய போதனைக்காக அவரைத் தொடர்ந்த கூட்டம். மற்றொன்று அவருடைய போதனைகளிலும், புதுமைகளிலும் குறைகாண வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பின்னால் சென்ற பரிசேயர் கூட்டம்.

    இவர்கள் தான் இயேசுவின் இறையாட்சி பணிக்கு தொடக்கம் முதலே ஒரு தடைக்கல்லாக இருந்தனர். அவரை எப்படி ஒழிக்கலாம் என்று வழிவகைகளைத் தேடி, அவருடைய போதனைகளில் குற்றம், குறைகளை, கண்டுபிடித்தனர். முடக்குவாதனை குணமாக்குதல் (மத்தேயு 9:1-8), ஓய்வு நாளில் கதிர்களை கொய்தல் (மத்தேயு 12:1-8), கைசூம்பியவர் குணமடைதல் (மத்தேயு 12:9-14), சீசருக்கு வரி செலுத்துதல் (மத்தேயு 22: 15-22) ஆகிய இடங்களில் இதை காணலாம்.

    தங்களை சார்ந்தவர்கள் பேய்களை ஓட்டுவது, கடவுள் வல்லமையால் என்றும், இயேசு பேய்களை பேய்களின் தலைவனைக் கொண்டு ஓட்டுகிறார் என்றும் சொல்லிய பரிசேயர்களின் இரட்டை நிலைப்பாட்டை இயேசு வெளிச்சமிட்டு காட்டுகிறார். இந்த மனநிலை நம்மிடம் இல்லையா? நல்ல காரியங்களை நான் செய்யும் போது என்னை நல்லவன் என அழைக்கிறேன். ஆனால் அதே நல்ல காரியங்களை பிறர் செய்யும் போது மற்றவர்களின் பாராட்டை பெறவே இவ்வாறு செய்கின்றனர் என சொல்வதில்லையா?

    பிறர் குறைகளை கண்டுபிடிக்கும் எனக்கு இறைவாக்கினர் பட்டம். அதையே பிறர் செய்யும் போது “சிடு மூஞ்சி, எப்பொழுதும் குறை கண்டுபிடிப்பவன்” என்ற பட்டம் கொடுப்பதில்லையா? நான் தினமும் ஆலயத்திற்கு வந்தால் நான் புனிதன், அதையே அடுத்தவன் செய்தால் அவன் “பெரும் நடிகன்”. உழைக்காமல் நான் உண்டால் அதற்கு பெயர் “சாமர்த்தியம்,” அதையே மற்றவர்கள் வாழ்ந்தால் “ஏமாற்றுக்காரன்”. பிறரில் உள்ள குறைகளை அதிகம் பார்க்க காரணம் மற்றவர்களில் உள்ள குறைபாடு அல்ல. அது என்னில் உள்ள குறைபாடு!. ஆதலால் குறைகளை குறைப்போம்.

    - ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய இளங்குரு மடம், கும்பகோணம்.
    Next Story
    ×