search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒப்புரவாக்கும் சிலுவை
    X

    ஒப்புரவாக்கும் சிலுவை

    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம்.
    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம். தேவனுடைய சாயலிலே படைக்கப்பட்ட மனிதன் பாவத்தின் மூலமாக தேவனோடு இருந்த நெருங்கிய உறவை இழந்து பாவியானான். ஆபிரகாமின் மூலமாக வரக்கூடிய சந்ததியின் மூலமாக முழு உலகையும் தேவன் ரட்சிக்கவும், பரிசுத்தமுள்ள ஒரு சந்ததியை உருவாக்கவும் விரும்பினார். மனிதனிடம் பரிசுத்தமுள்ள வாழ்வை எதிர்பார்த்த தேவன் மோசேயின் மூலமாக சீனாய் மலையிலே வைத்து இஸ்ரவேலருக்கான நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.

    நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதமும், நியாயப்பிரமாணத்தை மீறினால் தண்டனையும், ஆக்கினை தீர்ப்பும் வரும் என்றும் மோசேயின் மூலம் கூறினார். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு பரிசுத்த ஜாதியாக இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்தாலும் மாமிச பலவீனத்தினால் அநேகரால் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ள இயலவில்லை.

    நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டாலும் ஒன்றிலே தவறினாலும் அவர்கள் குற்றவாளிகளாகவும், தேவனுடைய தண்டனைக்குரியவர்களாகவும் மாறினர். நியாயப்பிரமாணத்தைக் காத்து நடந்து தேவனைக் கிட்டிச் சேர வேண்டிய இஸ்ரவேலர்கள் நாளுக்கு நாள் பிரமாணங்களை மீறி தேவனுக்கு தூரமானார்கள். ஆனால் மாமிச பலவீனத்தினால் இஸ்ரவேலர் செய்ய முடியாததை கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றி, தம் சொந்த மாமிசத்தினாலே தேவனையும் ,தூரமாயிருந்த தேவ ஜனங்களையும் ஒப்புரவாக்கினார்.

    எபே:2:13-16-ல் முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் ரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இரு திறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாமிசத்தினாலே ஒழித்து, இரு திறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இரு திறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் என்று பைபிளில் கூறுவது போல சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் ரத்தம் எல்லோருக்குமான மீட்கும் பொருளாக மாறி எல்லோரையும் தேவனோடுகூட ஒப்புரவாக்கியது. நாமும் அந்த மேன்மையான ரத்தினால் நம் பாவங்கள் கழுவ ஒப்புக்கொடுத்து நாமும் தேவனோடு ஒப்புரவாவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    - போதகர்.அமல்ராஜ்
    Next Story
    ×