search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைமகன் இயேசுவின் சிலுவை மொழிகள்
    X

    இறைமகன் இயேசுவின் சிலுவை மொழிகள்

    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.
    “எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30.

    இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது.

    ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது.

    இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது.

    சுற்றியிருந்த மக்கள் நினைத்தது போலவோ, ஆளும் வர்க்கம் நிறைவேறியது போலவோ இது அவர்களுடைய வெற்றியல்ல.

    ‘எல்லாம் முடிந்தது’ என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் “எல்லாம் நிறைவேறியது” என இயேசு அதை தனது வெற்றியாய் மாற்றி எழுதினார்.

    தந்தை தனக்கு இட்ட பணியை இயேசு நிறைவேற்றி முடித்தார் என்பதே அந்த வாக்கியத்தின் சுருக்கமான விளக்கம்.

    இதன் எபிரேய வார்த்தை ‘டிடிலெஸ்தாய்’ என்பது. அதன் பொருள், ‘கடனை எல்லாம் செலுத்தி முடித்தாயிற்று’ என்பதே. இயேசுவும் பாவங்களுக்கு விலையாகக் கொடுக்க வேண்டிய தன்னுடைய உயிரைக் கொடுத்து இதோ முடித்து விட்டார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இந்த வாக்கியம் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளை விதைக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது.

    முதலாவது, நமது பாவங்களிலிருந்து நாம் விடுதலையாகி விட்டோம். “கிறிஸ்து ரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்” (எபேசியர் 1:7) எனும் இறைவார்த்தை இதை உறுதி செய்கிறது.

    பழைய ஏற்பாட்டில் பாவங்களுக்கு ஏற்பவும், பாவம் செய்யும் நபருக்கு ஏற்பவும், பலிகள் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்த பலிகளையெல்லாம் இறை மகன் இயேசுவின் ஒற்றைப் பலி தேவையற்றதாகிவிட்டது.

    இப்போது நாம் செய்யவேண்டிய பலி விலங்குகளை வெட்டுவதல்ல, நம்மை நாமே வெறுத்து இறைவனிடம் சரணடைவது.

    இரண்டாவது, அவர் சாவை வென்று விட்டார். “நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண் கிறோம்” (எபி 2:9) என்கிறது விவிலியம்.

    வான தூதர்களுக்கு மரணம் இல்லை. கடவுளுக்கும் மரணம் என்பதில்லை. மரணம் இல்லாமல் மீட்பு இல்லை. அதனாலேயே இறைமகன் இயேசு மனிதனாய் பூமியில் வரவேண்டியிருந்தது. அவர் பூமியில் வந்து நிராகரிப்பையும், வலியையும், மரணத்தையும் ஏந்தினார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இயேசுவின் வார்த்தை மரணத்தை வென்ற வார்த்தை. நம்முடைய ஆன்மிக மரணத்துக்கு முடிவு கட்டும் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தை.

    அவரது மரணத்தையும், உயிர்ப்பையும் நம்பி அவரை ஏற்றுக்கொள்பவர்கள் இதன் மூலம் விண்ணக வாழ்வின் அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர்.

    மூன்றாவதாக, இறைவனுக்கும் நமக்கும் இடையேயான நேரடி உறவுக்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறது இயேசுவின் சிலுவை மரணம்.

    பழைய ஏற்பாட்டில் ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் மனிதர்களுக்கு அனுமதியற்ற ஒன்றாகவே இருந்தது. அதன் திரைச்சீலையைக் கடந்து செல்ல தலைமைக்குருவுக்கு அதுவும் ஆண்டுக்கு ஒரே ஒரு முறைமட்டுமே அனுமதி உண்டு. அதை மாற்றி நேரடி உறவை உருவாக்கியது, “எல்லாம் நிறைவேறியது” எனும் இயேசுவின் பணியே.

    “இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் ரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி” என்கிறது எபிரேயர் 10:19.

    இறைவனின் மரணம் நம்மை இறைவனின் அருகில் நெருங்குவதற்கு மட்டுமல்ல, நம்மை அவருக்கு ஏற்புடையவராக மாற்றவும் செய்கிறது.

    “தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்” (எபி 10:14) எனும் வசனம் நமக்கு முழுமையான மீட்பின் நம்பிக்கையாய் இருக்கிறது.

    “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என இறை மகனின் வருகையின் நோக்கத்தை மிகத் துல்லியமாக மார்க் 10:45 விளக்குகிறது.

    நமது வாழ்க்கையை நாம் ஒரு அலசலுக்கு உட்படுத்த இந்த சிலுவை வார்த்தை அழைப்பு விடுக்கிறது.

    “எல்லாம் நிறைவேறிற்று” என மகிழ்ச்சியாக சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோமா?. முழுமையாக இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோமா?. இந்த நேரம் நமது வாழ்க்கை முடிந்தால், என்னிடம் தரப்பட்ட பணிகள் “எல்லாம் நிறைவேறிற்று” என சொல்ல முடியுமா? இல்லை, “ஐயோ இன்னும் நான் தொடங்கவே இல்லையே என பதறுவோமா”.

    இறை சித்தத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதலும், சோதனைகளைத் தாங்கும் மனமும் உள்ளவர்களாக இருக்கிறோமா?

    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.

    சேவியர்
    Next Story
    ×