search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா தொடங்கியது

    எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டனர்.
    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் எடத்துவாவில் பிரசித்த பெற்ற புனித ஜார்ஜியார் ஆலயம் அமைந்துள்ளது. ஜார்ஜியார் கி.பி. 3-ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த புனிதர் ஆவார்.

    எடத்துவாவில் உள்ள புனித ஜார்ஜியார் ஆலயமானது 218 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் பெற்றது ஆகும். அங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு நவநாள் மன்றாட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு ஆலய பங்குத்தந்தை ஜாண் மணக்குந்நேல் திருவிழா கொடியை ஏற்றி வைத்து, விழாவை தொடங்கி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து ஆயர் மார் செபாஸ்டின் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. 10 மணிக்கு அருட்தந்தை இக்னேசியஸ் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது. குமரி மாவட்ட மக்களின் வருகையை கருத்தில் கொண்டு, விழா நாட்களில் வருகிற 7- ந் தேதி வரை தினமும் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். மேலும் நவநாள் மன்றாட்டு புகழ் மாலை, ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறும்.

    வருகிற 6-ந் தேதி காலை 9 மணிக்கு தக்கலை மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமையில் திருப்பலி நடைபெற இருக்கிறது. மாலை 5 மணிக்கு புனித ஜார்ஜியாரின் சப்பர பவனி நடைபெறும்.

    7- ந் தேதி காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலி, திருப்புகழ் மாலை நடைபெறும். தொடர்ந்து சங்கனாச்சேரி உயர் மறை மாவட்ட பேராயர் மார் ஜோசப் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

    பிற்பகல் 3 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஓய்வு பெற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் தமிழில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும்.

    வருகிற 14- ந் தேதி மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். விழாவையொட்டி, கேரள மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருப்பதாக விழா குழுவினர் தெரிவித்தனர். 
    Next Story
    ×