search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அவமரியாதையாக நடத்தினார் - பறக்கும்படை அதிகாரி மீது நமீதா கணவர் புகார்
    X

    அவமரியாதையாக நடத்தினார் - பறக்கும்படை அதிகாரி மீது நமீதா கணவர் புகார்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை அதிகாரி தங்களை அவமரியாதையாக நடத்தியதாக நமீதாவின் கணவர் வீரா புகார் கூறியுள்ளார். #Namitha #Veer
    பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் புலிக்குத்தி தெருவில் பறக்கும் படை அலுவலர் ஆனந்த யுவனேஷ் தலைமையில் நடிகை நமீதாவின் காரில் சோதனை நடத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கும் நமீதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கு நமீதாவின் கணவர் வீரா விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் வெளியாகின்றன. அதற்கு நான் வருந்துகிறேன். நடந்த சம்பவம் குறித்து எனது சார்பிலும், எனது மனைவி தரப்பிலும் விளக்கம் அளிக்கிறேன்.

    படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நாங்கள் 8 மணி நேரம் காரில் பயணம் செய்தோம். எனது மனைவி நமீதா காரின் பின் இருக்கையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவு 2.30 மணி இருக்கும்.

    இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு பல்வேறு இடங்களில் 3 தடவை காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தோம்.



    சேலம் - ஆற்காடு சந்திப்பை அடைந்த போது பறக்கும் படை அதிகாரி காரை தடுத்து நிறுத்தி எங்கள் அனைவரிடமும் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டார். எங்களை குற்றவாளிகள் போன்று நடத்தினார்.

    எனது மனைவி அசதியில் தூங்கி கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் அவரை எழுப்பிவிடுகிறேன் என்றேன். அதை பொருட்படுத்தாமல் நமீதா காரின் பின்புறம் கதவை திறந்தார். அப்போது அவர் காரில் இருந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் சில சட்ட விரோத பொருட்களை கடத்துவதாக கருதி காரில் சோதனை நடத்தினார். எங்களது அனைவரின் பைகளையும் சோதனை செய்தார்.

    நமீதாவின் பையை சோதனை செய்ய தொடங்கினார். ஆனால் அதை திறக்க நமீதா மறுத்துவிட்டார். எனது பையை பெண் போலீசை வைத்து சோதனை செய்யுங்கள் என்றார்.

    ஏனெனில் அதில் குறிப்பிட்ட சில முக்கியமான பொருட்கள் இருந்தன. பெண் போலீஸ் மூலம் சோதனை செய்தால் தனக்கு வசதியாக இருக்கும் என கருதினார். அதன் பின்னர் பெண் போலீஸ் வந்து பையை சோதனை செய்தார். அவ்வளவுதான் நடந்தது.

    அசவுகரியமான நேரத்தில் பெண் போலீசை அழைப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. ஆனால் இந்த விவகாரம் முழுவதும் வேறு விதமாக ஊதி பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.

    அவர் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் அதுகுறித்து யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர் ஒரு பிரபலமானவர் என்பதால் அனைவரும் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். இதை தவறாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் இருந்து நமது நாட்டு பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Namitha #Veer

    Next Story
    ×