search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கேங்ஸ்டராக களமிறங்கிய யுதன் பாலாஜி
    X

    கேங்ஸ்டராக களமிறங்கிய யுதன் பாலாஜி

    பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், மெய்யழகி, நகர்வலம் ஆகிய படங்களில் நடித்த யுதன் பாலாஜி தற்போது கேங்ஸ்டராக நடித்துள்ளார். #YuthanBalaji #VellaRaja
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் தன்னுடைய தனி திறமையால் பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் யுதன் பாலாஜி. இதைத் தொடர்ந்து ‘பட்டாளம்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் பூபதி பாண்டியன் இயக்கிய ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது மட்டுமில்லாமல் சிறந்த நடிகருக்கான அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ‘மெய்யழகி’, ‘நகர்வலம்’ ஆகிய படங்களில் நடித்த பாலாஜி தற்போது, இணைய தொடரில் (வெப் சீரிஸ்) களமிறங்கியுள்ளார்.

    பாலிவுட் பிரபலங்கள் பலரும் தற்போது வெப் சீரிஸில் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அதுபோல் கோலிவுட்டிலும் நடிகர்கள் ஆர்வம் காண்பிக்க தொடங்கி இருக்கிறார்கள். பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி எனத் திரையுலகில் பிசியாக வலம் வரும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ‘வெள்ள ராஜா’ என்ற புதிய இணைய தொடரில் நடித்துள்ளனர். இதில் யுதன் பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்த இணைய தொடரில் போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார். அவருடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யுதன் பாலாஜி நடித்துள்ளார். 



    இணைய தொடரில் நடிப்பது குறித்தும், தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் யுதன் பாலாஜி கூறும்போது, ‘வெள்ள ராஜா’ என்ற இணைய தொடரில் 2வது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இளைஞர்கள் அதிகமாக இணைய தொடரை விரும்பி பார்க்கவும், இயக்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கும் இணைய தொடரில் நடிக்க விருப்பம் இருந்தது. சவாரி படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் ‘வெள்ள ராஜா’ பற்றி சொல்லும் போது எனக்கு மிகவும் பிடித்தது. உடனே நடிக்க சம்மதித்தேன்.

    என்னுடைய முழு திறமையை நிரூபிக்க காத்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘வெள்ள ராஜா’ கிடைத்தது மிகவும் சந்தோஷமான விஷயம். அதுவும் அமேசான் பிரைம் என்ற பெரிய நிறுவனம் தயாரிப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 

    பாபி சிம்ஹாவிற்கு வலது கையாக இதில் நடித்திருக்கிறேன். திரைப்படத்திற்கும் இணைய தொடருக்கும் பெரிய வேறுபாடு எனக்கு தெரியவில்லை. சொல்லபோனால், படத்தை விட இந்த இணைய தொடரை பெரும் பொருட் செலவில் எடுத்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தை விட ஒரு படி மேலேயே வெள்ள ராஜா தொடரை இயக்கி இருக்கிறார்கள். பாபி சிம்ஹா, பார்வதி, காயத்ரி, காளி வெங்கட் ஆகியோருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.



    என்னை இதுவரை கதாநாயகனாக பார்த்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு நிறைய திறமையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் என்னுடைய திறமையையும், முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன். எந்த கதாபாத்திரம் என்றாலும் நான் நடிப்பேன் என்பதை நிரூபிப்பதற்காக இதில் நடித்திருக்கிறேன்.

    பாலாஜி என்றால், துறுதுறுவென இருக்கும் இளைஞன், சிறுவன், சிறப்பாக நடனம் ஆடுவான் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அதை உடைப்பதற்காகவே கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தேன். என்னுடைய திறமையை உணர்ந்து இயக்குனரும் சிறப்பாக என்னிடம் வேலை வாங்கினார். சாதாரண ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த ‘வெள்ள ராஜா’வில் இருக்கிறது’ என்றார்.
    Next Story
    ×