search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரூ.90 லட்சம் பணத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தல் - ஊட்டியில் போலீசார் மீட்டனர்
    X

    ரூ.90 லட்சம் பணத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி கடத்தல் - ஊட்டியில் போலீசார் மீட்டனர்

    ரூ.90 லட்சம் பணத்துக்காக தனது மனைவி கடத்தப்பட்டதாக பவர் ஸ்டார் சீனிவாசனின் போலீசில் புகார் அளித்த நிலையில், ஊட்டியில் வைத்து ஜூலியை போலீசார் மீட்டனர். #PowerStarSrinivasan #Julie
    சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். ‘லத்திகா’, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 6-ந்தேதி பவர்ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் மனைவியிடம் கூறாமல் ஊட்டி சென்றதாகவும், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மனைவி ஜூலி கையெழுத்து போட வேண்டியிருந்ததால் அவரையும் ஊட்டிக்கு வரும்படி அழைத்து சென்றதும் தெரியவந்தது.

    ஜூலி போலீசுக்கு தெரிவிக்காமலேயே ஊட்டிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டபோது ஊட்டியில் நிலம் பத்திரப்பதிவு முடித்து விட்டு சென்னை திரும்பி விடுவதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசனின் மகள் வைஷ்ணவி, தனது தந்தை - தாய் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர்களை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    ஆனால் போலீசார், வைஷ்ணவி பள்ளி மாணவி. அவருக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று சென்னை திரும்பினார். ஆனால் அவரது மனைவி ஜூலி ஊட்டியிலேயே தங்கியிருந்தார்.



    சில வேலைகள் இருப்பதாகவும் வேலை முடிந்ததும் சென்னை வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதனால் பவர்ஸ்டார் சீனிவாசன் பற்றிய பரபரப்பு முடிந்துவிட்டதாக கருதப்பட்டது.

    ஆனால் சென்னை திரும்பியது தொடர்பாகவும், மனைவி ஊட்டியில் இருப்பது தொடர்பாகவும் வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் உடனே போலீஸ் நிலையத்துக்கு வந்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே இதில் மர்மம் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பவர்ஸ்டார் சீனிவாசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3-ந் தேதி சினிமா மக்கள் தொடர்பு அதிகாரி பிரித்தி என்னை தொடர்பு கொண்டு புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக தங்களிடம் பேச வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கோவையில் இருப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து நான் தயாரிப்பாளரை சந்திப்பதற்காக 5-ந் தேதி கோவை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றேன். அப்போது நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு திடீரென வந்த பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஆலம் மற்றும் 9 பேர் கும்பல் நீ கொடுக்க வேண்டிய 90 லட்சம் ரூபாய் பணத்திற்காக ஊட்டியில் உள்ள உன்னுடைய வீட்டை உடனடியாக எனக்கு பத்திரம் செய்து கொடு என்று கூறி என்னை மிரட்டினர். 6-ந் தேதி என்னை காரில் வைத்து ஊட்டிக்கு அழைத்து சென்றனர்.



    உன் மனைவி ஜூலியை போனில் தொடர்பு கொண்டு உடனே ஊட்டிக்கு வரச் சொல் என்றும் கூறினார்கள். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரால் தனியாக வர இயலாது என்று கூறினேன். அவரை கோயம்பேடு பேருந்து நிலையம் வரச் சொல்லி காரில் ஊட்டிக்கு கடத்தி வந்து ஓட்டல் அறையில் அடைத்து சிறைவைத்து உள்ளனர்.

    நான் என்னுடைய பிள்ளைகளை பார்ப்பதற்காக நேற்று சென்னை திரும்பி வந்தேன். கடத்தி வைக்கப்பட்டுள்ள என் மனைவி ஜூலியை பத்திரமாக மீட்டு பிரித்தி, ஆலம், செல்வின் மற்றும் 8 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர் உத்தரவின் பேரில் கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர் தலைமையில் ஜூலியை மீட்க தனிப்படை போலீசார் ஊட்டிக்கு விரைந்தனர். அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்து ஜூலியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

    இந்த நிலையில் ஊட்டியில் சிறைவைக்கப்பட்ட ஜூலியை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். #PowerStarSrinivasan #Julie

    Next Story
    ×