search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியை சீரமைத்துக் கொடுத்த ராகவா லாரன்ஸ்
    X

    பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியை சீரமைத்துக் கொடுத்த ராகவா லாரன்ஸ்

    நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், செஞ்சி-பாடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை சீரமைத்து கொடுத்துள்ளார். #HBDRaghavaLawrence
    அமைச்சர் செங்கோட்டையன் ஒரு விழாவில் பேசும் போது, “பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோவில், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்க பள்ளிகள் தான்.

    அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும்” என்று கூறி இருந்தார்.

    அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ - மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று அவர் கோரி இருந்தார்.

    இதனை ஏற்று ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும், செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார்.

    பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்துள்ளார்.



    செஞ்சி அருகிலுள்ள மேல்மலையனூர் அரசாங்க பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை புதுப்பித்து வர்ணம் அடித்து புது கட்டிடம் மாதிரி மாற்றி உள்ளார். ராகவா லாரன்ஸ் பிறந்தநாளான இன்று பள்ளியின் திறப்பு விழா நடக்கிறது.

    லாரன்சின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் லாரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. நடிகை ஓவியா விழாவில் கலந்து கொள்கிறார்.

    இது பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது, “இரண்டு பள்ளிகளோடு நின்று விடப்போவதில்லை... என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்.

    என்னால் தான் படிக்க முடியவில்லை. படிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாக படிக்கட்டும் என்றார். #RaghavaLawrence #HBDRaghavaLawrence #SchoolRenovation

    Next Story
    ×