search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அம்பேத்கர் புகைப்படத்தை காட்டினாலே கலவரம் நடக்கும் என்று சொன்னார்கள் - பா.ரஞ்சித்
    X

    அம்பேத்கர் புகைப்படத்தை காட்டினாலே கலவரம் நடக்கும் என்று சொன்னார்கள் - பா.ரஞ்சித்

    அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள் என்று பரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பா.ரஞ்சித் பேசியுள்ளார். #PariyerumPerumal
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  



    தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது, “இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.
    Next Story
    ×