search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சந்தோஷ் சிவன் ட்விட்டால் சர்ச்சை - தயாரிப்பாளர்கள் கொந்தளிப்பு
    X

    சந்தோஷ் சிவன் ட்விட்டால் சர்ச்சை - தயாரிப்பாளர்கள் கொந்தளிப்பு

    தயாரிப்பாளர்களை விமர்சித்து ட்விட் பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார். #SanthoshSivan #Producers
    பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ரோஜா, தளபதி, இருவர், உயிரே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘‘செக்கச் சிவந்த வானம்’’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

    சந்தோஷ் சிவனின் சமீபத்திய ட்விட் பதிவு தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டை மீம்ஸ் வடிவில் பதிவிட்டிருக்கிறார். அதில் இரண்டு நாய்கள் இடம்பெற்றுள்ளதோடு நடிகைகளின் சம்பளத்தை சந்தோ‌ஷமாக கொடுக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கடுகடுவென கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.



    இதற்குத் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் பதிவிட்டனர். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இது குறித்து கடுமையாக விமர்சித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார். தயாரிப்பாளர் சங்கம் வரை இந்த பிரச்சினை சென்றது.

    தயாரிப்பாளர் தேனப்பன் இதுபற்றி கூறும்போது ‘‘எனக்கு இப்படியொரு மீம்சை பார்த்தவுடன் மிகவும் கோபம் வந்தது. ஏனென்றால், திரையில் பி.சி.ஸ்ரீராமுக்கு பிறகு, வியந்து ரசிக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அவர் இப்படியொரு மீம்சை வெளியிட்டாரா என்று ஆதங்கப்பட்டேன்.

    அவர், அதிகமாக மணிரத்னம் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் படங்களிலும் வேலை பார்த்திருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் எந்த மொழியைச் சேர்ந்த தயாரிப்பாளரை குறிப்பிடுகிறார் என்ற சந்தேகம் இருந்தது.

    யாரைச் சொல்லியிருந்தாலும் தயாரிப்பாளரை சொல்லி இருக்கிறாரே என்று எண்ணி வருத்தப்பட்டேன். இதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்பதைவிட சந்தோஷ் சிவனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடம் பேசினேன். ‘’நான் எந்தப் போஸ்டையும் போடவில்லை. ரீ ட்விட் மட்டுமே செய்தேன். என்ன வென்று தெரியவில்லை. நிறைய நண்பர்கள் போன் செய்தார்கள். உடனே நீக்கிவிடுகிறேன்’’என்று சொன்னார். அவருடைய பதில் என்னை ஆறுதல் படுத்தியது’’ என்று தெரிவித்தார்.



    ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நேற்று தனது சர்ச்சைக்குரிய ட்விட்டை நீக்கி உள்ளார். தனது ட்விட்டை நீக்கிய அவர், ‘‘நல்ல தயாரிப்பாளர்கள் பலருக்கு அந்தக் கருத்து ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் இருந்ததால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன். நான் முன்பு தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார். #SanthoshSivan #Producers

    Next Story
    ×