search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை சஞ்சனா சிங்கிடம் செல்போன் பறிப்பு - அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என பேட்டி
    X

    நடிகை சஞ்சனா சிங்கிடம் செல்போன் பறிப்பு - அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என பேட்டி

    சென்னையில் நடிகை சஞ்சனா சிங்கிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்த நிலையில், அந்த சம்பவத்தில் இருந்து தன்னால் மீள முடியவில்லை என்று சஞ்சனா சிங் கூறியுள்ளார். #SanjanaSingh
    சென்னையில் செயின், செல்போன் பறிப்பை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும் ஆங்காங்கே வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

    இந்த நிலையில் ரேனிகுண்டா படத்தில் அறிமுகமாகி அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சனா சிங்கிடம், அண்ணாநகரில் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முகப்பேரில் வசித்து வரும் சஞ்சனா சிங் எப்போதும் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை 6 மணி அளவில் அண்ணா நகரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சைக்கிளிலேயே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் சிந்தாமணி சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றார்.

    இதுபற்றி அண்ணாநகர் போலீசில் சஞ்சனா சிங் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சனா சிங் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர்.

    செல்போனை பறிகொடுத்த சஞ்சனா சிங் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    நான் எப்போதும் வீட்டு அருகில்தான் சைக்கிளில் செல்வேன். தினமும் காலை 5.30 மணியளவில் இருந்து 6.30 மணி வரையில் செல்வது வழக்கம். கொஞ்சம் நீண்ட தூரம் சென்றால் பிட்னஸ் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். கீழ்ப்பாக்கத்தில் உள்ள எனது சகோதரியின் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.



    எனக்கு சரியாக வழி தெரியாததால் செல்போனில் ‘‘கூகுள் மேப்’’ பார்த்தபடியே சைக்கிள் ஓட்டிச் சென்றேன். அப்போது தான் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எனது செல்போனை திடீரென்று பறித்துச் சென்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் திருடன் திருடன் என்று சத்தம் போட்டேன். சத்தம் போட்டுக் கொண்டே சைக்கிளை நான் வேகமாக ஓட்டினேன்.

    ஆனால் செல்போனை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டான். இதனால் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. மயக்கம் வந்தது போல் ஆகிவிட்டது. செல்போன், செயின்பறிப்பு அதிகமாக நடப்பதாகவும், எனவே பொதுமக்கள் சாலையில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் செய்திகளை பார்த்தேன். நான் எப்பொதுமே கவனமாகத்தான் இருப்பேன் காலை 6 மணிக்கு இப்படி நடக்கும் என்று யாருக்கு தெரியும். செல்போனில் உள்ள போட்டோ, வீடியோ எல்லாம் போய்விட்டது. எனவே செல்போனில் பேசிக் கொண்டு செல்பவர்கள் கவனமாக செல்லுங்கள். செயின் அணிந்து செல்பவர்களும் அதனை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு சஞ்சனாசிங் கூறினார்.

    சென்னையில் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீசார் 2 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும் செல்போன் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். #SanjanaSingh

    Next Story
    ×