search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் கைது
    X

    பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் கைது

    சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த மன்சூர் அலிகான் இன்று கைது செய்யப்பட்டார். #Mansooralikhan
     சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.

    ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும். கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது.

    இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று கூறி வடமாநிலத்தை சேர்ந்த பியூஸ் மானுஸ் என்ற இயற்கை ஆர்வலர் சேலத்தில் முகாமிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இவரின் அழைப்பின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த மாதம் 3-ந்தேதி அங்கு சென்றார். கன்னங்குறிச்சியில் மூக்கன் ஏரியை பரிசலில் சென்று பார்த்தார். எட்டு வழிச்சாலை அமையும் இடங்களையும் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சேலத்தில் விமான நிலைய விரிவாக்கமும், எட்டு வழிசாலை அமைக்க முயற்சிப்பதும் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான். பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த திட்டங்களை நிறை வேற்றினால், இயற்கை வளங்கள் அழியும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே மத்திய- மாநில அரசுகள் இந்த திட்டங்களை கைவிட வேண்டும்.

    பொதுவாக தமிழகத்தின் அனைத்து திட்டங்களுமே அழிவை நோக்கியே செல்கின்றன. இந்த சர்வாதிகார ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய-மாநில அரசுகள் கமி‌ஷனுக்காகத்தான் ஆட்சி நடத்தி வருகின்றன. மக்கள் எதிர்ப்பை மீறி இந்த திட்டங்களை அரசு செயல் படுத்தக்கூடாது.

    இந்த திட்டங்களை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன். மக்கள் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டிக் கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்வேன் என்று ஆவேசமாக பேசினார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு நிர்வாகத்தை அச்சுறுத்துதல் உள்பட பல பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்கில் மன்சூர் அலிகானை இன்று காலை சென்னையில் அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை வேனில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சேலம் அழைத்து சென்றனர்.
    Next Story
    ×