search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
    X

    தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்

    மற்ற மொழிகளில் பல வெற்றிகளை தந்த தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட நடிகர்கள் தமிழில் காலூன்ற தடுமாறி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    தமிழில் கதாநாயகர்கள் குறைவு. விரல் விட்டு எண்ணும் நடிகர்களுக்குத்தான் மார்க்கெட் உள்ளது. அவர்களுடைய படங்கள்தான் வசூலும் பார்க்கின்றன. புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆண்டுக்கு 300 படங்களுக்கு மேல் ரிலீசாகும் நிலையில் மார்க்கெட் இருக்கும் கதாநாயகர்களை கணக்கெடுத்தால் 10 பேர் கூட தேறுவது இல்லை.

    கதை பஞ்சம், கதைகளை தேர்வு செய்வதில் கதாநாயகர்களுக்கு இருக்கும் தெளிவற்ற தன்மை ஆகியவைதான் படங்கள் தோல்விக்கு காரணம் என்கின்றனர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே நல்ல கதைகளை தேர்வு செய்கிறார்கள் மற்றவர்கள் ஏதோ ஒரு மாயையில் சிக்கியதுபோல் தவறான கதைகளை தேர்ந்தெடுத்து மாட்டிக்கொள்கிறார்கள்.



    இதை உணர்ந்த தெலுங்கு, மலையாளம், கன்னட நடிகர்கள் சமீப காலமாக அதிக அளவில் தமிழுக்கு வருகிறார்கள். அப்படி வருபவர்களும் தமிழில் தடுமாறுகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் தமிழில் பிரகாசிக்கின்றனர். ஆனால் பிற மொழிகளில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் தமிழ் பக்கம் வந்தால் வளர்வது இல்லை.

    தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் ‘ஸ்பைடர்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் இப்போது தமிழில் நடிப்பதற்கு யோசிக்கிறார்.



    பாகுபலி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ராணா நான் ஆணையிட்டால் படம் மூலம் தமிழிலும் கால் ஊன்ற திட்டமிட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இப்போது மடை திறந்து என்ற படத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடிக்கிறார். நான் ஈ, புலி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கன்னட முன்னணி நடிகர் சுதீப் முடிஞ்சா இவன புடி படம் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை.

    நானி, சந்தீப் கிஷன் ஆகியோரும் தமிழில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த நிவின் பாலி ரிச்சி படம் மூலம் தமிழுக்கு வர திட்டமிட்டார். அது தோல்வியில் முடிந்தது. துல்கர் சல்மான், காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில் என்று மலையாளத்தில் கொடிகட்டி பறப்பவர்களைக் கூட தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
    Next Story
    ×