search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாரதிராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    பாரதிராஜா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

    சமூக வலைத்தளங்களில் பாரதிராஜா வீட்டை முற்றுகையிடப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சென்னையில் கடந்த 10-ந்தேதி ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடைபெற்றது.

    இதில் செந்தில்குமார் என்ற போலீஸ்காரர் கடுமையாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த போராட்டத்தில் டைரக்டர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரதிராஜாவே போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.

    இந்த நிலையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பெயரில் பாரதிராஜா வீட்டை முற்றுகையிடப் போவதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து கொட்டி வாக்கம் கபாலீஸ்வரர் நகரில் உள்ள பாரதிராஜாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தேனாம்பேட்டையில் உள்ள பாரதிராஜாவின் கூத்துப்பட்டறை அலுவலகம், தி.நகரில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகம் ஆகியவற்றிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்.
    Next Story
    ×