search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    போலீசுக்கு எதிராக இயக்குனர் கவுதமன் குற்றச்சாட்டு
    X

    போலீசுக்கு எதிராக இயக்குனர் கவுதமன் குற்றச்சாட்டு

    ஐ.பி.எல். எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமன், போலீசுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக கூறியிருக்கிறார்.
    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த 10-ந்தேதி ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதமன், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவதற்காக தடுப்புகளை தாண்டி சென்ற போது போலீசார் தடியடி நடத்தினர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசாரும் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷ் என்ற வாலிபர் மறுநாள் கைது செய்யப்பட்டார். அவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இவர் சினிமா டைரக்டர் கவுதமனின் கார் டிரைவர் என்பது தெரிய வந்துள்ளது.

    கவுதமனின் காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போராட்டம் நடந்த போது டிரைவர் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாகவும் கவுதமன் குற்றம் சாட்டியுள்ளார்.



    போராட்டம் முடிந்த மறுநாள் (11-ந்தேதி) சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் பேட்டி அளிக்க சென்ற போதுதான் எனது டிரைவர் சந்தோசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனது காரையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் நான் முறையிட்டேன். ஆனால் என்னை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் டிரைவரை கைது செய்துள்ளனர். எனது காரையும் பிடுங்கி வைத்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.

    போராட்டம் நடந்த போது டிரைவர் சந்தோஷ் வடபழனியில் இருந்தார். அதற்கான வீடியோ ஆதாரத்தையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளேன். தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.

    இவ்வாறு கவுதமன் கூறினார்.
    Next Story
    ×