search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கமலை நம்பி நாங்கள் இல்லை: ரஜினி ரசிகர்கள் ஆவேசம்
    X

    கமலை நம்பி நாங்கள் இல்லை: ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

    ரஜினியுடன் சேர்வது குறித்து கமல் சொன்ன கருத்துக்கு, அவரை நாங்கள் இல்லை என்று ரஜினி ரசிகர்கள் ஆவேசமாக கூறியிருக்கிறார்கள். #Kamal #Rajini
    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

    ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது. நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் உறுப்பினர்கள் சேர்ப்பதில் ரஜினி ரசிகர்கள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

    2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஊர் ஊராக சென்று உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்கள். பெண்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். எனவே அதிக எண்ணிக்கையில் பெண்களை உறுப்பினர்களாக்கும் முயற்சியிலும் ரஜினி ரசிகர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்து கோவையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவை குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியிலும் போட்டியிடப் போவதாக ரஜினி அறிவித்து இருப்பதால் இப்போதே அவரது ரசிகர் கள் தொகுதிவாரியாக கட்சி பணிகளை தொடங்கி விட்டனர்.



    தமிழ்நாட்டில் அரசியல் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ரஜினி அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே ரஜினியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்று கமலிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் காலம் பதில் சொல்லும் என்று கூறி இருக்கிறார். இதுபற்றி பல்வேறு தரப்பினர் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

    ரஜினி -கமல் இருவரும் சேர்ந்து அரசியல் செய்வார்களா என்பது குறித்து ரஜினி ரசிகர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    ரஜினி, கமல் இரண்டு பேரும் வேறு வேறு சிந்தனை கொண்டவர்கள். ரஜினி மிகவும் நேர்மையானவர். அவர் தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    ரஜினிக்கு எப்போதுமே மக்களிடம் கமலை விட அதிக செல்வாக்கு உண்டு. கட்சி உறுப்பினர் சேர்க்கையின் போது ரஜினி மீது நம்பிக்கை வைத்து ஏராளமான பெண்கள் ஆர்வமாக உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறார்கள். இளைஞர்களும் பெருமளவில் எங்கள் கட்சி உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் தற்போது நேர்மையான ஆட்சி நடை பெறவில்லை. ரஜினி வந்தால் ஒரு நல்ல ஆட்சி கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ரஜினியுடன் இணைந்து அரசியலில் செயல்பட வேண்டுமா என்பதை காலம் முடிவு செய்யும் என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார். அவரை நம்பி ரஜினி இல்லை. ரஜினி செல்வாக்கே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.

    ரஜினி தனது சொந்த செல்வாக்கை நம்பியே அரசியல் களம் இறங்குகிறார். யாரையும் அவர் எதிர்பார்க்க வில்லை. ரஜினியின் ஆன்மீகம் கலந்த அரசியல் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.

    கமல் கடவுள் இல்லை என்ற கொள்கை கொண்டவர். ரஜினி அனைவரையும் அரவணைத்து செல்லும் தன்மை கொண்டவர். எனவே ரஜினியின் கட்சிதான் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்தனர். ஒரு சில ரசிகர்கள் தலைமை என்ன நினைக்கிறதோ அதன்படி செயல்படுவோம். இருவரும் இணைந்தால் நல்லது என்றும் கருத்து தெரிவித்தனர்.
    Next Story
    ×