search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா
    X

    ஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா

    அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.
    அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.

    பாவலரின் கச்சேரிகளில் பெண் குரலில் பாடி அசத்திய இளையராஜாவை, திடீரென்று "நீ பாடவேண்டாம்'' என்று பாவலர் கூறிவிட்டார். அதற்குக் காரணம் இளையராஜாவின் குரலில் ஏற்பட்ட மாற்றம்தான்.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நாளொரு கச்சேரி, பொழுதொரு ஊர் என்று போய்க்கொண்டிருந்த அந்த உற்சாக நாட்களில், ஆண்களுக்கு பருவ வயதில் வரும் "மகரக்கட்டு'' எனக்கு வந்துவிட்டது. அதாவது குரல் உடைந்து, ஆண் குரலாக மாறுவதை "மகரக்கட்டு'' என்பார்கள். என் குரல் பெண் குரல் போல் இல்லாததால், என்னை விட்டு விட்டு தம்பி அமரனை (கங்கை அமரன்) கச்சேரியில் டூயட் பாட அழைத்துக்கொண்டு போனார், அண்ணன்.

    "படிப்பும் போச்சு; பாட்டும் போச்சு! இதென்ன பெரிய பாடாய்ப் போச்சுதே!'' என்ற வேதனையுடன் பண்ணைபுரம் கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.

    என்னுடன் படித்த நண்பர்கள் மதுரையில் கல்லூரிகளில் சேர்ந்து படித்து லீவு நாட்களில் ஊர் வருவார்கள். ஊரில் இருக்கும் நான், அவர்களை சந்திக்க நேரும்போது படிப்பின் இழப்பைப்பற்றி நினைத்து, மனம் துன்பப்படும்.

    அதே நேரம் அதிகமாக ஊர் சுற்றியதால் கிடைத்த அனுபவத்தில், அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நான் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டு, அவர்கள் பொறாமைப் படுவதைக் காணப் பெருமையாகவும் இருக்கும்!

    எப்படியோ! எப்போதும் நான் தனிதான் என்று இறைவன் எழுதி வைத்து விட்டதால், அதை என்னால் எப்படி மாற்ற முடியும்?

    இந்தத் தனிமையைப் போக்க, "கல்கி''யின் சரித்திர நாவல்கள் எனக்கு உதவின. பள்ளியில் படிக்கும்போது ஏற்கனவே இந்த நாவல்களை படித்திருந்தாலும், என்றைக்குப் படித்தாலும் அன்றைக்குத்தான் எழுதியதைப் போலிருக்கும்.

    இதற்கிடையே கோவையில் கச்சேரிக்கு சென்று வந்த அண்ணன் ஆர்மோனியம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதன் விலை 85 ரூபாய் என்றார். அதை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். யாரும் தொடக்கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.

    இது தெரிந்தும், அவர் வீட்டில் இல்லாத ஒரு நாள் நான் அந்த ஆர்மோனியத்தை எடுத்து சும்மா வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராமல் அந்த நேரத்தில் அண்ணன் வந்துவிட்டார். நான் ஆர்மோனியமும் கையுமாக இருந்ததை பார்த்தவருக்கு, கோபம் வந்துவிட்டது. புறங்கையை நீட்டச்சொல்லி, பிரம்பால் விளாசிவிட்டார்.''

    - இவ்வாறாக இளமைப் பருவத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார், இளையராஜா.

    இளையராஜா இப்படி பிரம்படி வாங்கியிருக்கிறாரே என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏற்கனவே அண்ணனிடம் அடிவாங்கிய அனுபவமும் இருக்கிறது. அதை அவரே கூறுகிறார்:

    "சிறு வயதில் கிணற்றில் நீச்சலடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாதுகாப்புக்கு ஆளில்லாமல் சிறுவர்களாக சேர்ந்து குளித்ததை தெரிந்து கொண்டவர், என்னை வீட்டுத்தூணில் கட்டிப்போட்டார். மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வந்ததற்காக, அம்மாவே என்னையும் பாஸ்கரையும் தூணில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல் கண்ணில் மிளகாயை அரைத்து வைத்தார்கள். அப்புறம் தண்டனையைக் குறைக்க வெங்காயத்தை அரைத்து வைப்பது வழக்கமாயிற்று.

    குறைந்தது மூன்று மணி நேரமாவது இப்படி தூணில் கட்டிப் போட்டிருப்பார்கள். பின்பு பரிதாபப்பட்டு அவிழ்த்து விடுவார்கள்.

    இப்படி தண்டனை வாங்குகிற அன்று இரவு சாப்பாட்டின்போது, கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் போட்டிருக்கிறார்கள். அதுதான் சமயம் என்று நானும் பாஸ்கரும் "இந்த வீட்டைப்போல் எந்த வீடும் இருக்க முடியாது'' என்று ஆரம்பிப்போம்.

    "ஏண்டா அப்படிச் சொல்றீங்க?'' என்று அம்மா திருப்பிக் கேட்பார்.

    "குளிக்கிறதுக்குப் போய் எந்த வீட்டிலாவது அடிப்பாங்களா?'' என்று தொடங்கி "இனிமே தீபாவளி தீபாவளிக்குத்தான் `கங்கா ஸ்நானம்' பண்ணணுமாக்கும்?'' என்று சொல்லும்போதே சிரிப்பு வந்து சிரித்து விடுவோம்.

    ஆர்மோனியத்துக்காகவும் அடி வாங்க நேர்ந்ததால், அதன் பிறகு அண்ணன் வீட்டில் இருக்கும் நேரங்களில் ஆர்மோனியத்தை தொடுவதில்லை. அவர் இல்லாதபோது எடுத்து வாசிப்பது, வருவது தெரிந்தால் எடுத்து மூடி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.

    அம்மா, அண்ணனை கண்டிக்கவும் மாட்டார்கள்; நான் வாசிப்பதை தடுக்கவும் மாட்டார்கள். இதனால் அம்மாவின் மானசீக அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், சீக்கிரமே ஓரளவுக்கு ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டு விட்டேன்.

    ஆர்மோனியம் வீட்டுக்கு வந்த புதிதில், அண்ணனுடன் கச்சேரிக்கு வரும் சங்கரதாசிடம், எனக்கு ஆர்மோனியம் கற்றுத்தரும்படி கேட்டிருக்கிறேன். அவரும் `சரி' என்றார். ஆனால் வாய்ப்பு அமையாததால் அவரிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போயிற்று. ஆனாலும் அவர் வாசிக்கிற பாணியை மனதில் கொண்டு வந்து `இப்படி வாசிப்பாரா? இல்லை, இப்படி வாசிப்பாரா?' என்று வாசித்து வாசித்து, ஓரளவுக்கு என்னால் வாசிக்க முடியும் என்ற தெளிவுடன், அதே நேரம் திருப்தியில்லாமலும் இருந்தேன்.

    இந்த நிலையில்தான் அண்ணனுக்கும், சங்கரதாசுக்கும் ஏதோ மனஸ்தாபம். கம்பத்தில் நடக்கவிருந்த ஒரு கச்சேரிக்கு, முந்தின நாள் தன்னால் வர இயலாது என்று சொல்லியனுப்பி விட்டார், சங்கரதாஸ்.

    அணணன் தவித்துப் போனார். ஒருநாள் இடைவெளியில் வேறு ஒருவரை பார்க்க வேண்டும். அதற்கு மதுரைக்குத்தான் போகவேண்டும். அப்படியே ஆள் கிடைத்தாலும் ஒத்திகை பார்க்க நேரம் வேண்டும்.

    இப்போதும் அம்மாதான் கைகொடுத்தார். அம்மா அண்ணனிடம், "தம்பி ராஜையாவை கூட்டிட்டுப் போகலாமே'' என்றார்.

    அம்மா இப்படிச் சொன்னதும், அண்ணன் ஒருமுறை என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிராக்டீஸ் செய்து வைத்திருப்பதை அவராகத் தெரிந்து கொண்டாரோ அல்லது எனக்குத் தெரியாமல் அம்மாதான் சொல்லியிருந்தாரோ, "சரி, வா!'' என்றார்.

    என் இசை வாழ்வுக்கு போடப்படும் முதல் அஸ்திவாரக்கல் அது என்று தெரியாமல், ஆர்மோனியத்துடன் அண்ணன் கச்சேரிக்கு புறப்பட்டேன்.

    கம்பத்தில் மெயின் ரோட்டில் மேடை போடப்பட்டிருந்தது. ஒரு சிறுவன் (இளையராஜா) அரை டிராயருடன் ஆர்மோனியம்வாசிக்க, பாஸ்கர் தபேலா வாசிக்க, அண்ணன் பாட கச்சேரி தொடங்கியது. என் கைகள் நடுக்கத்துடன் ஆர்மோனியம் வாசிக்க, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, என் வாசிப்புக்கும் கைதட்டல் கிடைக்குமென்று!

    தப்பும் தவறுமாய் வாசித்ததற்கே இவ்வளவு கைதட்டல் கிடைக்கிறதே, இன்னும் சரியாக வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று

    எண்ணினேன்.இதன் பிறகு, வீட்டில் ஆர்மோனியத்தை நான் தொட்டால், அண்ணன் அடிப்பதில்லை.

    Next Story
    ×