search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியபோது சிவாஜிக்கும் பாடல் எழுதினார் வாலி
    X

    எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியபோது சிவாஜிக்கும் பாடல் எழுதினார் வாலி

    எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.
    எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.

    சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்'' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார்.

    வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார்.

    அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

    "கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி'' என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.

    ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க'' என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார்.

    1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.

    `பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு.

    இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.

    தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.

    சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

    என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?'' என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.

    "உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது'' என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

    பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள். 5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன.

    திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.

    அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

    "அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்'' என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.

    இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை'' படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்:

    "அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?'' என்றேன்.

    "சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்...'' என்றார் எம்.ஜி.ஆர்.

    பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார்.

    உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு...'' என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது. இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார்.

    எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.

    எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.

    எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.

    அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார்.

    அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×