search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த புன்னகை மன்னன் - காதல் தோல்வியை ஆழமாக சித்தரித்த படம்
    X

    கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த "புன்னகை மன்னன்'' - காதல் தோல்வியை ஆழமாக சித்தரித்த படம்

    காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''
    1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வெளியான "புன்னகை மன்னன்'' படத்தில், கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

    கமலஹாசனும், ரேகாவும் காதலர்கள். காதல் நிறைவேறாததால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். காட்டுப்பகுதியில் நடந்து செல்வார்கள். அழகிய நீர்வீழ்ச்சியையும், இயற்கை எழிலையும் கடைசி முறையாக ரசித்துவிட்டு மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். இதில், ரேகா மலைப்பாறையில் விழுந்து இறந்து போவார். கமலஹாசன், மரக்கிளையில் மாட்டிக் கொண்டு, உயிர் தப்புவார்.

    படத்தின் தொடக்கக் காட்சியே பிரமாதமாக அமைந்திருந்தது. தற்கொலை செய்யும் காதல் ஜோடி, கடைசி நிமிடத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை தத்ரூபமாக -நெஞ்சைத் தொடும் விதத்தில் காட்டியிருந்தார், பாலசந்தர்.

    படத்தில் ரேவதியும் சிறப்பாக நடித்திருந்தார். படம் எல்லா அம்சங்களிலும் சிறப்பாக அமைந்து, பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு மனதில் உறுதிவேண்டும் (1987), உன்னால் முடியும் தம்பி (1988), புதுப்புது அர்த்தங்கள் (1989) ஆகிய படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    "மனதில் உறுதி வேண்டும்'' படத்தில் விவாகரத்து பிரச்சினையை அலசியிருந்தார். கதாநாயகியாக சுகாசினி நன்கு நடித்திருந்தார்.

    "உன்னால் முடியும் தம்பி'' படத்தில், ஜெமினிகணேசன் அப்பாவாகவும், கமலஹாசன் மகனாகவும் நடித்தனர். ஜெமினிகணேசன், ஒரு இசை மேதை. கமலஹாசனும் இசைக் கலைஞனாக வேண்டும் என்று ஜெமினி விரும்புவார். ஆனால் கமல் அதை ஏற்கமாட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் நன்கு சித்தரிக்கப்பட்ட போதிலும், படம் பெரிதாக ஓடவில்லை.

    ரகுமானும், சித்தாராவும் ஜோடியாக நடித்த படம் "புதுப்புது அர்த்தங்கள்'' (1989).

    1990-ல் "ரெயில் சிநேகம்'', "ஒரு வீடு இரு வாசல்'' ஆகிய படங்கள் பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்தன.

    பேசும் படங்கள் வெளிவந்த தொடக்க காலத்தில், ஒரே படத்தில் இரண்டு மூன்று கதைகள் இடம் பெற்றது உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த "நவீன விக்ரமாதித்தன்'' படத்தில், "புத்திமான் பலவான்'' என்ற இன்னொரு கதையும் இணைந்திருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சௌ-சௌ'' என்ற படத்தில் 3 கதைகள் இடம் பெற்றன.

    அதுபோல், பாலசந்தரின் "ஒரு வீடு இரு வாசல்'' படத்தில் இரு கதைகள் இடம் பெற்றிருந்தன. படத்தின் முடிவில், இரண்டு கதைகளுக்கும் ஒரு இணைப்பு கொடுத்திருந்தார், டைரக்டர்.

    1991-ல் கோவை செழியன் தயாரித்த "அழகன்'' படத்தை டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    ஓட்டல் நடத்தும் மம்முட்டியை 3 பெண்கள் (பானுபிரியா, கீதா, மதுபாலா) காதலிப்பதுதான் கதையின் மையம்.

    கதாபாத்திரங்களை நன்கு வடிவமைத்து, படத்தை மிகப்பிரமாதமாக உருவாக்கியிருந்தார், பாலசந்தர். குறிப்பாக, மம்முட்டியும், பானுபிரியாவும் விடிய விடிய டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்ட, புதுவிதமாக காட்சியை எடுத்திருந்தார்.

    ஒரே ஒரு டெலிவிஷன் சேனல் ("தூர்தர்ஷன்'') மட்டும் இயங்கி வந்த காலக்கட்டம் அது. இரவு 10 மணியுடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்து விடும். அப்போது மம்முட்டியும், பானுபிரியாவும் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில் "சங்கீத ஸ்வரங்கள்'' என்ற அருமையான பாட்டு ஒலிக்கும்.

    காலை 6 மணிக்கு தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். அதுவரை இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள்! அப்போது இருவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக பானுபிரியாவின் முகபாவங்களும், விதம் விதமான சிரிப்புகளும்.... அவர் நடிப்பின் சிகரத்துக்கே சென்றுவிட்டார் என்று சொல்லலாம்.

    பாலசந்தரின் சிறந்த படங்களில் ஒன்று "அழகன்.''
    Next Story
    ×