search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிவாஜிக்கு பால்கே விருது - தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?  பாலசந்தர் வெளியிடும் தகவல்கள்
    X

    சிவாஜிக்கு பால்கே விருது - தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? பாலசந்தர் வெளியிடும் தகவல்கள்

    சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.
    சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

    இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.

    1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை.

    இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

    "பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    "எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.

    சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

    இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.

    குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.

    சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.

    சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்.

    அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன். அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள்.

    குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது. மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள்.

    இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.

    நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம்.

    ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது.

    ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. "இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம்.

    கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.

    அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை.

    பின்னர் நான் எழுந்தேன். "இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.

    "சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு. அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.

    வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார்.

    சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.

    இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநíதி'' என்றார்.

    நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.

    மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம்.

    குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.

    இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன்.

    தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.

    தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.

    மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம்.

    ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம். தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி.

    நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ï பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.

    அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.

    நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம்.

    அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.

    பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு.

    அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×