search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அரசியலில் லதா
    X

    அரசியலில் லதா

    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.
    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

    எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க''வில் இணைந்தார்.

    எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், "லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டார். "ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றேன்.

    ''அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்'' என்றார்.

    ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

    எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், "தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?'' என்று கேட்டேன். "உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்'' என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே "லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்'' என்றார்.

    உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் "சாகுந்தலம்.'' முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

    இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், "லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை'' என்று கூறினேன்.

    எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில்

    இருக்கிறான்.தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

    இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், "தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்'' என்பதுதான்.

    நான் அவரிடம், "நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா' என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்'' என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

    இவ்வாறு கூறினார், லதா.

    எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில்

    ஈடுபட்டார்.1998-ல் நடந்த "எம்.பி'' தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

    திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

    லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

    "திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க' சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த

    30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். "தலைவர்

    (எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு'' என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். "உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா'' என்றார்கள்.

    வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

    சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள "குழாயில் தணணீர் வரவில்லை'' உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், "மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க'', "இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்'' என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

    இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் "ஹாய்! ஹலோ'' சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

    இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

    மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.''

    Next Story
    ×