search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினி, கமலுடன் லதா நடித்த படங்கள்
    X

    ரஜினி, கமலுடன் லதா நடித்த படங்கள்

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

    கமல், ரஜினி படங்களில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "கமலுடன் எனக்கு வாய்ப்பு வந்த முதல் படமே "வயநாடு தம்பான்'' என்ற மலையாளப்படம்தான். படத்தை வின்சென்ட் இயக்கினார். இந்தப்படம் மலையாளத்தில் பெரிய `ஹிட்' ஆனது.

    இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த புதிய அனுபவம் மேக்கப் போடாமல் நடித்ததுதான். மலையாளப் படங்களில் பொதுவாகவே மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள். கேரக்டர்கள் இயல்பாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

    தமிழ்ப் படங்களில் மேக்கப் போட்டே பழகிய எனக்கு, `மேக்கப் அவசியமில்லை' என்று டைரக்டர் வின்சென்ட் சொன்னதும் என்னவோ போலிருந்தது. அதன் பிறகு கேரக்டருடன் ஒன்றத் தொடங்கிய பிறகு சரியாகி விட்டது. படத்தைப் பார்த்தபோது, பிரமிப்பாக இருந்தது.

    இந்த அனுபவம், இதற்கு முன்பே மலையாள இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் எம்.ஜி.ஆரை இயக்கிய "நாளை நமதே'' படத்திலும் எனக்கு ஏற்பட்டது. மேக்கப் போட்டாலே அவருக்கு ஆகாதே. "எதற்காக இப்படி மேக்கப் போடவேண்டும்'' என்று கேட்பார். அதுவரை மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், அவரது கேள்வி அந்த நேரத்தில் எரிச்சலாகக் கூட இருந்தது.

    கமலுடன் தமிழில் நான் நடித்த "நíயா'' படம் ரொம்பவே முக்கியமானது. இதில் கமலுடன் சேர்ந்து 5 ஹீரோக்கள்! டைரக்டர் துரை சொன்ன கதையில் என் கேரக்டருக்கு இருந்த முக்கியத்துவம் கருதியும், கமல் ஜோடி என்பதற்காகவும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படமும் பெரிய `ஹிட்.'

    நான் ரஜினியுடன் நடித்த முதல் படம் "சங்கர் சலீம் சைமன்.'' இந்தப்படத்தில் நடிப்பது தொடர்பாக டைரக்டர் பி.மாதவன் என்னை சந்தித்தபோது, "ரஜினின்னு ஒருத்தர் புதுசா வந்திருக்கார். நல்லாவே பண்றார். இந்தப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார். அவருக்குத்தான் நீங்க ஜோடியா நடிக்கறீங்க'' என்றார். நானும் ஒப்புக்கொண்டேன்.

    முதல் நாள் படப்பிடிப்பு ஒரு வீட்டில் நடந்தது. ரஜினி ஸ்கூட்டரில் என்னை ஏற்றிக்கொண்டு போவதாக காட்சி. இந்தக் காட்சி பற்றி டைரக்டர் பி.மாதவன் ரஜினியிடம் விவரித்துச் சொன்னபோது, "லதா மேடம் பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆச்சே! அவங்களை என் ஸ்கூட்டரில் ஏத்திட்டு போறதுன்னா எப்படி?'' என்று தயங்கியிருக்கிறார்.

    இதனால் டைரக்டர் பி.மாதவன் என்னை அழைத்து, "ரஜினி ரொம்ப டென்ஷனாகிறார். `எம்.ஜி.ஆர். சார் கூட நடித்த பெரிய ஆர்ட்டிஸ்ட் நீங்க என்கிற மரியாதை இப்படி அவரை டென்ஷனாக்குகிறது' என்று நினைக்கிறேன்'' என்றார்.

    உடனே நான், "சரி சார்! நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று சொல்லி விட்டு அப்போதே மேக்கப் ரூமில் இருந்த ரஜினியை சந்தித்தேன். "ஹலோ ரஜினி! எப்படி இருக்கிறீங்க?'' என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தேன். நான் சகஜமாக பேசியது அவருக்குள் இருந்த படபடப்பை குறைத்திருக்க வேண்டும். அடுத்து, ஸ்கூட்டர் காட்சியில் இயல்பாக நடித்தார்.

    ரஜினியுடன் அன்று ஆரம்பித்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. இப்போது பார்த்தாலும் அதே நட்பு பாராட்டும் ஒரு நல்ல நடிகர் அவர்.

    ரஜினிக்கு திருமணமாகியிருந்த நேரம். ஒருநாள் மைலாப்பூரில் உள்ள `நீல்கிரிஸ்' கடைக்கு போனேன். அப்போது "லதா மேடம்! லதா மேடம்!'' என்றொரு குரல். திரும்பிப் பார்த்தேன். என்னை நோக்கி வேகவேகமாய் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அருகில் வந்ததும்தான் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் என்பது தெரிந்தது.

    நான் அவரிடம் "எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டேன். அவரோ மூச்சு விடாமல், "என் கணவர் (ரஜினி) உங்களைப்பற்றி ரொம்ப நல்லவிதமாக சொல்வார். உங்கள் மேல் அவருக்கு ரொம்ப மரியாதை'' என்றார். மகிழ்ந்து போனேன். அதுமுதல் லதா ரஜினிகாந்தும் எனக்கு ரொம்ப நெருக்கமான சிநேகிதி ஆகிவிட்டார்.

    இதன் பிறகு ரஜினி வீட்டில் நடக்கும் எந்தவொரு விசேஷத்திற்கும் எனக்கு அழைப்பு வந்து விடும். மகள் திருமணத்திற்கு அழைத்தார்கள். லேட்டஸ்ட்டாக ரஜினி நடித்த `சிவாஜி' படத்தின் பிரத்யேக காட்சிக்கு கூட அழைப்பு வந்தது. நட்பை போற்றுவதில் ரஜினி தம்பதிகள் ரொம்பவே கிரேட்!

    ரஜினியும் நானும் சேர்ந்து நடித்த படங்களில் மறக்க முடியாத ஒரு படம் "ஆயிரம் ஜென்மங்கள்.'' அதில் என் கேரக்டரின் தன்மை இரண்டு விதமாக இருக்கும். ஒன்று: இயல்பான கேரக்டர். அடுத்தது: `ஆவி' புகுந்த கேரக்டர்.

    படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ என்றாலும், எனக்கும் ரஜினிக்கும் எங்கள் நடிப்புக்கு சவால் வருகிற மாதிரியான கேரக்டர்கள். பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடந்தது. ஒரு காட்சியில் நடித்து விட்டு வந்ததும் "லதாஜி! சரியா பண்ணினேனா?'' என்று ஆர்வத்துடன் கேட்பார் ரஜினி. இத்தனைக்கும் அப்போது அவர் `சூப்பர் ஸ்டாராய்' வளர்ந்து விட்ட நேரம்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ரஜினியுடன் நடித்தபோது, "லதாஜி! இந்த கேரக்டர் உங்களை பெரிய அளவில் பேச வைக்கும்'' என்றார். அவர் சொன்னபடிதான் ஆயிற்று. படத்தில் எனது கேரக்டரும் பேசப்பட்டது. அதோடு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டும் எனது நடிப்புக்காக கிடைத்தது. ரஜினியுடன் "முள்ளும் மலரும்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. இது இன்றளவும் எனக்கு வருத்தமே.''

    இவ்வாறு லதா கூறினார்.

    Next Story
    ×