search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    உரிமைக்குரல் தயாரானபோது கார் விபத்தில் லதா தப்பினார்
    X

    உரிமைக்குரல் தயாரானபோது கார் விபத்தில் லதா தப்பினார்

    நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். "உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.
    நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். "உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.

    இதுபற்றி லதா கூறியதாவது:-

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்து முடித்த கையோடு எனக்கு எம்.ஜி.ஆருடன் "நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதிலும் என்னுடன் மஞ்சுளா இருந்தார். எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நல்லவராகவும், வைரக் கொள்ளையராகவும் வருவார். வைரக் கொள்ளையராக வரும் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நான் வருவேன்.

    "சச்சா ஜுட்டா'' என்ற இந்திப்படத்தின் `ரீமேக்' இந்தப்படம். தமிழுக்கென சில மாற்றங்களை செய்தார், எம்.ஜி.ஆர். குறிப்பாக படத்தின் கொள்ளையன் ரஞ்சித்தின் பாதை மாறிய பின்னணியை விவரிக்கும் தாய்ப்பாசத்துடன் கூடிய கிளைமாக்சை உருவாக்கினார்.

    அவரது ஸ்பெஷாலிட்டியே இதுதான். தனது கேரக்டரின் தன்மை ரசிகர்களின் உணர்வுகளுடன் கலந்து போவதாக இருக்க வேண்டும் என்பார். ஒரிஜினல் கதையான இந்திப்படத்தில், ரஞ்சித் கேரக்டரை வில்லனாகவே காட்டுவார்கள். பிரபல இந்தி நடிகர் ராஜேஷ்கன்னா நடித்திருந்தார்.

    இந்தப் படத்தில் எனக்கும் மஞ்சுளாவுக்கும் ஒரு நடனப்பாட்டு அமைந்தது. `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலாவுக்குத்தான் நடனமாடும் வாய்ப்பு அமைந்தது. எனக்கு நடன வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், "நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் தீர்ந்தது. "கொள்ளையிட்டவன் நீதானே'' என்ற அந்தப் பாடல் காட்சியை, டிவியில் இப்போது பார்க்க நேர்ந்தாலும் பிரமிப்பு விலகாமல் பார்த்து ரசிப்பேன்.

    தொடர்ந்து பட வாய்ப்புகள். இடைவிடாத படப்பிடிப்பு என வளர்ந்து கொண்டிருந்தேன். "எம்.ஜி.ஆர். ஜோடி'' என்ற முறையில், திரையுலகில் ஒரு தனி மரியாதை இருந்தது. இந்த நேரத்தில்தான் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்தது.

    முக்கோணக் காதல் கதைகளை சொல்வதில் புகழ் பெற்ற ஸ்ரீதர், அதுவரை எம்.ஜி.ஆரின் எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்பதால், இந்த கூட்டணிக்கு அப்போதே ரசிகர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்திலும் நான்தான் நாயகி என்றபோது, என் சந்தோஷம் இரட்டிப்பானது.

    தொடர்ந்து நடிப்பு நடிப்பு என்று போய்க் கொண்டிருந்ததால், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று அம்மா பிரியப்பட்டார். ஒரு அரை நாள் விடுமுறை கிடைத்தால் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வந்து விடலாம் என்று எண்ணினோம். எனவே டைரக்டர் ஸ்ரீதர் செட்டில் தனியாக இருந்த நேரத்தில், "சார்! நாளைக்கு காலையில் அம்மாவும் நானும் திருப்பதி சென்று வரலாம் என்றிருக்கிறோம். அரை நாள் தேவைப்படும்'' என்றேன்.

    "நாளைக்கு முழுக்க உன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. எனவே நாளை முடியாது'' என்றார், ஸ்ரீதர்.

    "அரைநாள் தானே கேட்கிறேன். காலையில் போய்விட்டு மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு அரங்குக்கு வந்து விடுவேன்'' என்று சொன்னேன்.

    அவரோ பிடிவாதமாக `லீவு தரமுடியாது' என்று மறுத்து விட்டார்.

    நானும் விடவில்லை. "அரை நாள் தந்தே ஆகவேண்டும்'' என்ற ரீதியில் அவரை வற்புறுத்திக்கொண்டிருந்தேன்.

    இந்த நேரத்தில் அங்கே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். "என்ன பிரச்சினை?'' என்று பொதுவாக கேட்டார்.

    டைரக்டர் ஸ்ரீதர் சொல்வதற்குள் நான் முந்திக்கொண்டு, "நாளைக்கு திருப்பதி போய்வர அரை நாள் விடுமுறை கேட்டேன். தர மறுக்கிறார்'' என்றேன்.

    உடனே எம்.ஜி.ஆர். ஸ்ரீதரை பார்த்தார். "கோவில் தரிசனம் என்றால் போய்த்தான் ஆகவேண்டும். மதியம் 2 மணிக்கு வந்து விடுவதாக இருந்தால் அதுவரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்'' என்றார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.

    எம்.ஜி.ஆர். தனது "ஏ.சி'' காரையும், டிரைவரையும் அனுப்பி வைத்தார்.

    விடியற்காலை 3 மணிக்கு காரில் புறப்பட்டோம். காலை 10 மணிக்கு சுவாமி தரிசனம் முடித்து, தாமதிக்காமல் சென்னைக்கு பயணம் ஆனோம்.

    திரும்பி வரும் வழியில்தான் சோதனை. கார் ஓடிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் டயர் வெடித்து விட்டது. டிரைவர் சாமர்த்தியமாக காரை நிறுத்தினார். டயரை கழற்றி ஸ்டெப்னி மாட்டி கார் புறப்பட்டபோது, மீண்டும் பிரச்சினை. சித்தூரைத் தாண்டி கார் வந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த `ஸ்டெப்னி' டயரும் வெடித்து விட்டது.

    ஏற்கனவே, ஸ்டெப்னி மாட்டியதில் ஒரு மணி நேர தாமதம். இருந்தாலும் எப்படியும் பிற்பகல் 3 மணிக்கு சென்னை வந்து விடலாம் என்றிருந்த நம்பிக்கையை, மறுபடியும் வெடித்த டயர் கெடுத்துவிட்டது.

    10 மைல் தூரத்துக்கு ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி. பஞ்சர் போடவேண்டுமானால் கூட, 10 மைல் போனால்தான் முடியும். எனக்கு டென்ஷன். டிரைவர் என் டென்ஷனை உணர்ந்தாலும், பஞ்சர் போட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்.

    ஆனால் அவர் திரும்பி வந்தது மாலை 4 மணிக்கு. அதுவும் பஞ்சர் போடும் கடை விடுமுறை என்ற தகவலுடன் வந்து சேர்ந்தார்.

    இனி என்ன செய்வது? எனக்குள் தவிப்பு. இப்போது போல் போன் வசதியெல்லாம் அப்போது கிடையாது. சென்னைக்கு போன் போட வேண்டுமானால் `டிரங்க் கால்' புக் செய்து, காத்திருந்துதான் பேசவேண்டும். அதனால் யாருக்கும் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை.

    வேறு வழியின்றி சித்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட பஸ்சில் அம்மாவும் நானும் சென்னை வந்தோம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் நாங்கள் வந்த பஸ் நின்றபோது இரவு 8 மணி.

    அம்மாவுக்கு இன்னொரு கவலையும் இப்போது சேர்ந்து கொண்டு விட்டது. மதியத்துக்குள்தான் வந்துவிடுவோமே என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்த 3 தம்பிகளுக்கும் தங்கைக்கும் மதிய சாப்பாடு மட்டுமே தயார் செய்து கொடுத்துவிட்டு வந்திருந்தார். இப்போது பிள்ளைகள் வேறு பசியாக இருப்பார்களே என்ற கவலை அம்மாவை வாட்டியது.

    சென்ட்ரலில் இருந்து வாடகைக் காரில் வீடு வந்து சேர்ந்தபோது 9 மணி. ஹாலில் தம்பிகளும், தங்கையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைத்திருந்தவர் யாரென்று நினைக்கிறீர்கள்? எம்.ஜி.ஆரேதான்!

    அதுமட்டுமா? டிபன் கேரியரில் எனக்கும் அம்மாவுக்குமான சாப்பாட்டையும் கொண்டு வந்திருந்தார்.

    அம்மாவுக்கு கண் கலங்கியது. எனக்கும்தான். தாமதத்துக்கான காரணம் பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்ல முயன்றோம். ஆனால், நடந்தது என்ன என்ற தகவல் அவருக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது! "பயணத்தில் இதெல்லாம் சகஜம்தான். கார் டயர் வெடித்தபோது விபத்து நேராமல் இருந்ததே, அதுவே போதும்'' என்று ஒரே வரியில் எங்கள் டென்ஷனை குறைத்து விட்டார்.

    பிள்ளைகளின் பசியறிந்து அமுதூட்டிய எம்.ஜி.ஆரின் அன்பும், அக்கறையும் அம்மாவை ரொம்பவே நெகிழச்செய்து விட்டது. இதன் பின்னர் தனது சொந்த சகோதரர் போல அவரிடம் அன்பு பாராட்டினார் அம்மா.

    எம்.ஜி.ஆருக்கு காடை வறுவல் ரொம்ப இஷ்டம். அம்மா `சமையல் ஸ்பெஷலிஸ்ட்' என்பதை தெரிந்து கொண்டவர், உரிமையுடன் "அம்மா! காடை வறுவல் கொடுத்து அனுப்புங்க'' என்று கேட்டு அனுப்புவார். அம்மாவும் தனது கைப்பக்குவம் மிளிர `காடை வறுவல்' செய்து கொடுத்து அனுப்புவார்.

    எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான `மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனி'லும் நான்தானே நாயகி. இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் எம்.ஜி.ஆரால் நான் உயிர் தப்பியிருக்கிறேன்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள மாளிகையில் நடந்து கொண்டிருந்தது. மாளிகையின் ஹாலில் எம்.ஜி.ஆரும் நானும் 2 அடி இடைவெளியில் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.

    திடீரென "லதா! உடனே இங்கே வா'' என்று அவசரமாக அழைத்தார். நான் எழுந்து அவர் அருகே சென்றேன். சில நொடிகளில் நான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பெரிய சரவிளக்கு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. எம்.ஜி.ஆர். மட்டும் அந்த நேரத்தில் அழைத்திருக்காவிட்டால், அந்த சரவிளக்கு என் தலையில் விழுந்து அப்போதே என் கதை முடிந்திருக்கும்.''

    இவ்வாறு லதா கூறினார்.


    "உரிமைக்குரல்'' படத்தில் "விழியே கதை எழுது'' கனவுக்காட்சியில் எம்.ஜி.ஆர்., லதா.

    "நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் எம்.ஜி.ஆர்., லதா.




    Next Story
    ×