search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இலக்கிய சாம்ராட் பட்டம் பெற்ற கோவி.மணிசேகரனின் திரை உலக அனுபவங்கள்
    X

    இலக்கிய சாம்ராட் பட்டம் பெற்ற கோவி.மணிசேகரனின் திரை உலக அனுபவங்கள்

    இலக்கிய உலகில் பெரும் சாதனையாளரான கோவி.மணிசேகரன், டைரக்டர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து, சினிமா நுட்பங்களைக் கற்றறிந்தார்.
    இலக்கிய உலகில் பெரும் சாதனையாளரான கோவி.மணிசேகரன், டைரக்டர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து, சினிமா நுட்பங்களைக் கற்றறிந்தார்.

    1,000-க்கு மேற்பட்ட சிறுகதைகள்; 200 நாவல்கள்; 10 ஆயிரம் கவிதைகள்; 10 நாடகங்கள் எழுதியவர் கோவி.மணிசேகரன்.

    இவரது சொந்த ஊர் வேலூர். தந்தை கோவிந்தன். தாயார் பட்டம்மாள்.

    இவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படுவதற்கு முன்பே உதயமானது, சினிமா ஆசை.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய "சண்டமாருதம்'' என்ற சினிமா பத்திரிகையில் இவர் பணியாற்றியபோது, சினிமா ஆசை அதிகரித்தது. அப்போது, இப்பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியவர் கண்ணதாசன்.

    தவிரவும், அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.ï.சின்னப்பா ஆகியோர் பாடிய பாடல்களை அப்படியே பாடக்கூடிய அளவுக்கு இசை ஞானமும், குரல் வளமும் பெற்றிருந்தார், மணிசேகரன்.

    (பிற்காலத்தில் முறைப்படி இசை பயின்று, பட்டம் பெற்றார்)

    இந்தக் காலக்கட்டத்தில், கலைஞர் மு.கருணாநிதி கதை - வசனத்தில் உருவான "மந்திரிகுமாரி'' வெளிவந்தது.

    அந்த வசனங்களைக் கேட்டதும், "தமிழில் இப்படியும் எழுத முடியுமா!'' என்று பிரமித்தார். அதுபோல் தானும் வசனகர்த்தா ஆகவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    24 வயதானபோது, டி.எஸ்.பாலையா கூட்டுறவோடு எம்.எல்.பதி தயாரித்த "நல்லகாலம்'' என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா.

    வசனம் எழுதுவதற்கு, கோவி.மணிசேகரனுக்கு கொடுக்கப்பட்ட அட் வான்ஸ் 101 ரூபாய். அதற்கு பிறகு பணம் எதுவும் கிடைக்கவில்லை. காரணம் - படம் சரியாக ஓடவில்லை!

    இதன் பிறகு, 1958-ல் ஜெமினிகணேசன், அஞ்சலிதேவி நடிக்க, அசோகா பிக்சர்ஸ் தயாரித்த "பூலோக ரம்பை'' படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதினார். இசை அமைத்தவர் சி.என்.பாண்டுரங்கம். கோவி.மணிசேகரனுக்குக் கிடைத்த தொகை ரூ.1,000. அக்காலத்தில் இது பெரிய தொகை.

    மணிசேகரன் எழுதிய பாடல்களை ஏ.எம்.ராஜாவும், ராதா - ஜெயலட்சுமியும் பாடினார்கள். இதில் ஒரு சுவையான தகவல் என்னவென்றால், வேலூரில் நரசிம்மலு நாயுடு என்ற சங்கீத வித்துவானிடம் ஏ.எம்.ராஜாவும், கோவி.மணிசேகரனும் ஒன்றாக இசை பயின்றவர்கள்!

    இதற்கிடையே, பத்திரிகைகளில் கதை - கட்டுரைகள், தொடர்கதைகள் எழுதி, பெரும் புகழ் பெற்றார். "இலக்கிய சாம்ராட்'' முதலான பட்டங்களைப் பெற்றார்.

    இலக்கியத்தில் பெரும் வெற்றி கண்ட போதிலும், உள்ளத்தின் அடியில் சினிமா ஆசையும் கனன்று கொண்டிருந்தது.

    1969-ல் "நான்கு திசைகள்'' என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அடுத்த ஆண்டு "ஜாதிமல்லி'' என்ற நாடகம் மேடை ஏறியது.

    இரண்டு நாடகங்களுக்கும் இசை அமைத்தவர்: இளையராஜா.

    இடையிடையே, சில பட அதிபர்கள் கோவி.மணிசேகரனை அழைத்து, சினிமாவுக்கு கதை கேட்டார்கள்.

    சினிமாவுக்கு கதை சொல்வது என்பது தனிக்கலை. கதையை நன்றாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்களுக்கு, கதை சொல்லத் தெரியாது. இந்த நìயதிப்படியே, மணிசேகரனின் கதைகள் சினிமா அதிபர்களிடம் "ஓகே'' பெறமுடியவில்லை.

    தீவிரமாக சிந்தித்த மணிசேகரன், ஒரு குருவின் மூலம் சினிமா கலையை கற்றறிய முடிவு செய்தார்.

    அவர் தேர்வு செய்த குரு - இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்!

    இதுபற்றி கோவி.மணிசேகரன் கூறுகிறார்:-

    "யாரிடம் உதவியாளராக சேருவது என்று ஒரு மாதம் வரை ஓயாமல் சிந்தித்தேன்.

    இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நாடகங்களை நடத்தி வந்த காலம் முதல், அவரை ஓரளவு அறிவேன். அவரிடம் உதவியாளராகச் சேர முயற்சி செய்தால் என்ன?

    அவருடைய திரைப்படங்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. திரை அறிஞர் அவர். "வெள்ளி விழா'' படம் வெளியாகி இருந்த நேரம் அது. அடுத்து "அரங்கேற்றம்'' படம் பண்ணப்போவதாக அறிந்தேன். நமக்கும் இது அரங்கேற்றமாக இருக்கட்டுமே!

    சாதிக்க முடிந்தால் சாதிப்போம். இயலாது போனால், இலக்கியங்களைப் படைப்போம் என்று எண்ணினேன்.

    ஓர் ஆயுத பூஜைக்கு முந்திய நாள், இயக்குனர் சிகரத்தை சந்தித்தேன்.

    என்னைக் கண்டதும், "வாங்க, மணிசேகரன்! ஏது, இந்தப்பக்கம்?'' என்றார்.

    "இமயமலையைப் பார்க்க, பரங்கிமலை வந்திருக்கிறது!'' என்றேன்.

    அவருக்குப் புரியவில்லை. "பரங்கிமலையா? நீங்களா?'' என்றார். "திரை உலகைப் பொறுத்தமட்டில் நான் பரங்கிமலைதான். அதைவிடச் சின்னமலையை நான் அறிந்ததில்லை!'' என்றேன்.

    அவர் கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்தார்.

    "திரைக்கலை நுணுக்கம் பயில, ஆசானைத் தேடி னேன். உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்றேன்.

    "நீங்கள் பெரிய இலக்கியவாதி. என்னிடம்...'' என்று அவர் இழுக்க, நான் இடைமறித்து, "இது விஷயத்தில் உங்கள் முன் நான் `ஏ.பி.சி.டி' மாணவன்'' என்று இதமாகச் சொன்னேன், ஆங்கிலத்தில்.

    அவர் கை விரலில் சுழன்று கொண்டிருந்த சாவிக்கொத்து, நழுவி விழுந்தது. அதுவாக விழுந்ததோ அல்லது அவராகவே நழுவ விட்டாரோ என்னவோ! நான் உடனே அதை எடுத்து, அவரிடம் பணிவுடன் கொடுத்தேன். மீண்டும் ஒரு கணம் என்னை நோக்கியவர், "விஜயதசமியன்று நீங்கள் என்னிடம் விஜயம் செய்யலாம்'' என்றார்.

    நாளை மறுநாள் விஜயதசமி. நாடி நரம்புகள் வீணை போல் நாதம் எழுப்ப, நான் எழுந்தேன்; வணங்கினேன்; விடைபெற்றேன்.''
    Next Story
    ×