search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜயகுமாரை தேடி வந்த எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு
    X

    விஜயகுமாரை தேடி வந்த எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு

    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.
    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.

    "இளைய தலைமுறை'' படப்பிடிப்பின்போது 9 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த விஜயகுமாருக்கு தோள்பட்டை பிசகி, சில நாட்கள் ஓய்வில் இருந்தார். புதிய பட வாய்ப்பு கிடைத்து சத்யா ஸ்டூடியோ சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

    தான் நேசிக்கும் எம்.ஜி.ஆர். எதிரில் வந்ததும் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து விட்டார், விஜயகுமார். "வணங்கிச் செல்வதா? வழி விடுவதா?'' என்று அவர் முடிவெடுத்து செயல்படுவதற்குள் எம்.ஜி.ஆரே அவரை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு நலம் விசாரித்தார்.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    அண்ணன் எம்.ஜி.ஆர். நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் என் கைகளை பற்றிக்கொண்டு, "கை எப்படி இருக்கிறது விஜயகுமார்?'' என்று கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். வார்த்தைகள் உடனடியாக வரவில்லை. இருந்தாலும் பதட்டத்தைத் தவிர்த்து, "பரவாயில்லை. வலி குறைந்து விட்டது'' என்று தெரிவித்தேன்.

    அப்போதும் அவர் போய்விடவில்லை. "சினிமாவில் இந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கக் கூடாது. எந்த வகை அதிரடி காட்சி என்றாலும் அதை ஒரிஜினல் மாதிரி வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

    அதன் பிறகு எந்த மாதிரி சிகிச்சைகள் தரப்பட்டன என்பது பற்றி கேட்டார். சொன்னேன். `பிஸியோதெரபி' சிகிச்சை மூலம், கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பற்றியும் விவரித்தேன்.

    பொறுமையாக கேட்டவர், "எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கிறது. இதற்கு நாட்டு மருந்து நல்ல பலன் தரும். மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. அங்கே `கரியபவளம்' என்ற நாட்டு மருந்து கேட்டால் தருவார்கள். அதை உரசி, சதைப் பிடிப்பு இருக்கிற இடத்தில் போட்டால் தசைப்பிடிப்பில் ஏற்பட்டு இருக்கும் இறுக்கம் சரியாகி விடும். இன்றைக்கே வாங்கி போட்டுப் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.

    அவருக்கும் அன்றைய தினம் சத்யா ஸ்டூடியோவில்தான் படப்பிடிப்பு இருந்தது. அதனால் மதியம் `லஞ்ச் பிரேக்'கின்போது எனக்கு அழைப்பு விடுத்தார். நான் கொஞ்சம் தயக்கத்துடன் போய் சந்தித்தபோது, "என்னுடன் சாப்பிடுங்கள்'' என்று கூறினார். அந்த அன்பை தவிர்க்க முடியுமா? பாக்கியமாக எண்ணிக்கொண்டேன்.

    ஒருவரை பிடித்துவிட்டால், அவர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவது எம்.ஜி.ஆருக்கு உரிய பண்பாடு என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் விஷயத்திலும் பரிபூரணமாய் உணர்ந்தேன்.

    டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் வி.டி.எல்.எஸ். என்ற படக்கம்பெனி "இன்று போல் என்றும் வாழ்க'' என்ற படத்தை தயாரித்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். படம் தொடங்க இருந்த நேரத்தில், திடீரென ஒருநாள் அந்த கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி என்னை சந்தித்தார். "இந்தப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். `சின்னவர்' உங்களை அவரது தங்கை கணவர் கேரக்டரில் போடச் சொன்னார்'' என்றார்.

    எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. `சின்னவர்' என்றால் யார் என்று தெரியாததுதான் இதற்குக் காரணம். அப்புறம் தான் எம்.ஜி.ஆரை எல்லாரும் `சின்னவர்' என்றுதான் சொல்வார்கள் என்று சொன்னார்கள்.

    (எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி `பெரியவர்' என்று அழைக்கப்பட்டார்)

    அப்போது என் சம்பள விஷயம் பற்றி எதுவும் அந்த தயாரிப்பு நிர்வாகி பேசவில்லை. முதல் படத்தில் நான் வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்தான். அதுவும் முதலில் 200. பிறகு 300. பிறகு ரிலீசுக்கு முந்தின நாள் 500 என்று கொடுத்தார்கள்.

    பிறகு தொடர்ந்து படங்கள் வரவர, சம்பளமும் 5 ஆயிரம்,

    7 ஆயிரம் என்று கூடியது. தொடர்ந்த வாய்ப்புகளில் 10 ஆயிரத் தில் நின்று கொண்டிருந்தது.

    சிவாஜி  சாருடன் நடித்த பிறகு 12 ஆயிரம் வாங்கினேன்.

    எம்.ஜி.ஆர். பட தயாரிப்பு நிர்வாகி என்னிடம், "என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "சம்பளம் இருக்கட்டும் சார்! எந்த தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்க. கால்ஷீட் போட்டுக்கலாம்'' என்றேன்.

    நான் என் சம்பள விஷயம் சொல்லத் தயங்குகிறேன் என்பதை புரிந்து கொண்ட அந்த நிர்வாகி, "சரி! இப்ப பத்தாயிரம் ரூபாய் அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' என்று பணத்தை கொடுத்தார்.

    எனக்கு அதிர்ச்சி. அட்வான்சே பத்தாயிரமா? அதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளமே கிட்டத்தட்ட இதே அளவில்தான்!

    எனக்கு 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து என் சம்பளத்தை அதிகமாக்கியவரே அண்ணன் எம்.ஜி.ஆர்.தான்.

    "இன்று போல் என்றும் வாழ்க'' படப்பிடிப்பில் அவரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்தவர், பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். படப்பிடிப்பில் மற்ற எல்லாருமே 50 அடி தூரத்தில்தான் அவருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்.

    அப்போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கியிருந்த நேரம். காங்கிரஸ் ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராக இருந்தார். அவர் "எம்.பி.'' தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்த 40 பேர், படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    அன்று மாலை `பாம்குரோவ்' ஓட்டலில் கட்சி பொதுக்குழுவை கூட்டியிருந்தார். "ஒருவேளை படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டால் என்னை எதிர்பார்க்காதீர்கள். எனக்கு பதிலாக இந்த தம்பியை அனுப்பி வைக்கிறேன்'' என்று என்னை அவர்களிடம் சுட்டிக்காட்டிச் சொன்னார். அந்த அளவுக்கு அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்காக இதைச்      சொன்னேன்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

    Next Story
    ×