search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிப்பது யார்? - சிவகுமாருடன் விஜயகுமார் போட்டி
    X

    கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிப்பது யார்? - சிவகுமாருடன் விஜயகுமார் போட்டி

    புராணப் படங்களை இயக்குவதில் பெரும் புகழ் பெற்ற ஏ.பி.நாகராஜனின் "கந்தன் கருணை'' படத்தில் முருகனாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாருக்கு வந்து கைநழுவிப் போனது. போட்டியில் சிவகுமார் வெற்றி பெற்றார்.
    புராணப் படங்களை இயக்குவதில் பெரும் புகழ் பெற்ற ஏ.பி.நாகராஜனின் "கந்தன் கருணை'' படத்தில் முருகனாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாருக்கு வந்து கைநழுவிப் போனது. போட்டியில் சிவகுமார் வெற்றி பெற்றார்.

    டைரக்டர் ஏ.பி.நாகராஜன் டைரக்ஷனில் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த "கந்தன் கருணை'' படத்தில், வீரபாகு வாக சிவாஜி நடித்தார். முருகன் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுக இளைஞர் தேவைப்பட்டார். இந்த வேடத்துக்கு நடிகர் சிவகுமாரும், விஜயகுமாரும் முயற்சி

    மேற்கொண்டார்கள்.அந்த அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    "புராணப் படங்கள் என்றால் அது ஏ.பி.நாகராஜன் படம் என்றிருந்த நேரம் அது. என்னுடன் நாடகத்தில் நடித்த ஈ.ஆர்.சகாதேவன், டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் நண்பர். கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க ஒரு புதுமுகம் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, எனக்காக சிபாரிசு செய்யும்படி ஈ.ஆர்.சகாதேவனிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் எனக்காக ஏ.பி.நாகராஜனிடம் பேசினார். "மேக்கப் டெஸ்ட் எடுப்போம். சாரதா ஸ்டூடியோவுக்கு நாளை மாலை வரச்சொல்லுங்க'' என்று ஏ.பி.நாகராஜன் சொல்லிவிட்டார்.

    நான் சாரதா ஸ்டூடியோவுக்கு போனபோது, முருகன் வேடத்தில் நடிக்க "மேக்கப் டெஸ்ட்''டுக்கென இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். அவர் பெயர் சிவகுமார் என்றும் சிவாஜி சார் சிபாரிசில் அவர் வந்திருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன்.

    சிவகுமாருக்கு முதலில் மேக்கப் போட்டார்கள். சிவாஜி சாரின் ஆஸ்தான மேக்கப் மேன் ரெங்கசாமிதான் சிவகுமாருக்கு `முருகன்' மேக்கப் போட்டார். அருகே நடிகர் அசோகன் இருந்தார். மேக்கப் போடுவது பற்றி, அக்கறையுடன் யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

    ஒரு வழியாக சிவகுமாருக்கு மேக்கப் டெஸ்ட் முடிந்து, நான் அழைக்கப்பட்டேன்.

    என் மார்பில் நிறைய முடி இருந்தது. கையில் ஒரு பிளேடை கொடுத்து, எல்லா முடியையும் மழிக்கச் சொன்னார்கள்! சில இடங் களில் பிளேடு பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. எல் லாம் முடிந்து ரத்தம் கழுவி மேக்கப்புக்குஉட்கார்ந்தேன்.

    மேக்கப் மேன் ரெங்கசாமி, எனக்கு அவசரம் அவசரமாக மேக்கப் போட்டு முடித்தார். "போகலாம்'' என்றார்.

    அப்போது ஈ.ஆர்.சகா தேவன் அங்கு வந்தார். `மேக்கப் 'பில் என்னைப் பார்த்தவர் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரிந்தது. "யார் மேக்கப் போட்டது?'' என்று கேட்டார். நான் சொன்னதும் மேக்கப் மேனிடம் "என்ன இப்படி மேக்கப் போட்டு இருக்கிறீங்க?'' என்று கேட்டார். அவரோ, "டைம் ஆகிப் போச்சுங்க'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார்.

    என்னையும் சிவகுமாரை யும் கம்பெனி காரில் மேக்கப் கோலத்தில் அழைத்துச் சென்றார்கள். அதுவரை நானும், சிவகுமாரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், காரில் போகும்போது சிவகுமார் என்னிடம், "நீங்க கேரளாவா?'' என்று கேட்டார்.

    அவர் என்னை கேரளா என்று கேட்டதில், கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டேன். "நான் தமிழ்நாடுதான். தமிழன். சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை'' என்று தமிழனாக என்னை வெளிப்படுத்திய அதே வேகத்தில், "நீங்க எந்த ஊருங்க?'' என்று அவரிடம் கேட்டேன்.

    "நான் ஓவியக் கலையில் தேறி, ஓவியராக இருக்கிறேன். சொந்த ஊர் கோவை. அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்கிறாங்க. சென்னையில் இப்ப இருக்கிறது ஒரு வாடகை வீட்டில்தான்'' என்றார்.

    பதிலுக்கு நான், புரசைவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.மேன்ஷனில் இருப்பதாக சொன்னேன்.

    கம்பெனி வந்ததும் நாங்கள் காரில் இருந்து இறங்கினோம். மேக்கப் டெஸ்ட்டுக்காக நான் சைக்கிளில் வந்த மாதிரி சிவகுமாரும் சைக்கிளில் வந்திருந்தார். அன்றைக்கு தொடங்கிய அறிமுகம், அடுத்தடுத்த சந்திப்பில் எங்களை நண்பர்களாக்கியது. மேக்கப் டெஸ்ட் முடிவு அறிவிக்கப்படும் முன்பே, "முருகன் வேடம் இவருக்கே கிடைக்கட்டும்'' என்று நான் நினைக்கிற அளவுக்கு சிவகுமார் தனது அன்பான நட்பில் என்னைக் கவர்ந்து விட்டிருந்தார்.

    அது 1966-ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்த உறவினர் பிரம்மநாதன் அங்கு நடக்கும் ஒரு விழாவுக்காக அறிஞர் அண்ணாவை அழைத்துச் செல்ல `தேதி' கேட்டு வந்திருந்தார். அப்போது பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்தார். அண்ணா அரசியலில் வளர்ந்து வந்த நேரம்.

    தி.மு.க. அலுவலகம் அப்போது ராஜாஜி ஹாலில் இருந்தது. நாவலர் நெடுஞ்செழியன் மூலமாக அண்ணாவை சந்திக்க என் உறவினர் புறப்பட்டார். அப்போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அண்ணாவை சந்தித்து விட்டு ஆயிரம் விளக்கு வழியாக வந்தபோது, நாவலர் எங்களை கலைஞரிடம் அழைத்துப்போனார். அப்போது முரசொலி அலுவலகம் ஆயிரம் விளக்கில் இருந்தது. நள்ளிரவை நெருங்கி விட்ட 11-30 மணிக்கு கலைஞர் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தேன். என் உறவினரை நாவலர் அறிமுகப்படுத்தியதும், கலைஞரின் பார்வை இப்போது என் மீது இருந்தது. என் உறவினர் அவரிடம் "பையனுக்கு நடிப்பு ஆர்வம். இப்பக்கூட ஏ.பி.நாகராஜன் எடுக்கப்போகிற கந்தன் கருணை படத்தில் முருகன் வேஷத்துக்கு `மேக்கப்' டெஸ்ட் எடுத்திருக்கிறாங்க'' என்று சொல்லிவிட்டார்.

    கலைஞர் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே ஒரு காரியம் செய்தார். போனில் ஏ.பி.நாகராஜன் வீட்டுக்கு பேசினார். "ஏ.பி.என்! நான் மு.க. பேசுகிறேன். பட்டுக்கோட்டை சிவகுமார் (அப்போது என் பெயரும் சிவகுமார்தான்) நம்ம பையன். பார்த்து பண்ணுங்க'' என்றார். ஏ.பி.நாகராஜன் சொன்ன பதிலில் திருப்தியடைந்தவர், "நிச்சயம் கிடைக்கும்'' என்று சொன்னார். சந்தோஷமாய் அவரிடம்

    விடைபெற்றோம்.ஆனால் முருகன் வேடம் கிடைத்தது சிவகுமாருக்குத் தான்.

    இதில்கூட பெயர்க்குழப்பம் தான் பிரதானம். சினிமா வுக்காக நான் என் பெயரை `சிவகுமார்' என்று மாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் மேக்கப் டெஸ்ட் போட்டுக் கொண்டவரும் சிவகுமார்தான். இரண்டு சிவகுமாரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது "சிவகுமாருக்கு'' கிடைத்த வாய்ப்பே! இந்த வகையில் சிவகுமாருக்கு வாய்ப்பு கொடுக்கச் சொல்லி கலைஞர் போன் செய்தபடி, எங்கள் இருவரில் ஒரு சிவகுமாருக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

    மேக்கப் டெஸ்ட் முடிவு எனக்கு தெரியவந்தபோதும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இதுவும் ஒரு காரணம்.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    முருகன் வேடம் கிடைக்காததால், விஜயகுமார் ஊருக்குத் திரும்பினார். விவ சாயம் அல்லது அப்பாவின் ரைஸ்மில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அப்பாவும் "நடிக்க ஆசைப்பட்டே! ஒண்ணு ரெண்டு படத்தில் நடிச்சும் பார்த்திட்டே. சினிமா வை மறந்துட்டு, ஊரோடு இருந்துவிடு'' என்றார்.

    ஊருக்கு வந்து அப்படியும் இப்படியுமாக 6 வருடம் ஓடிவிட்டது. இதற்கிடையே 1969-ம் ஆண்டில் முத்துக்கண்ணுவுடன் திருமணமும் நடந்து முடிந்து விட்டது.

    சென்னையில் சினிமா வாய்ப்புக்காக முயன்ற நாட்களில் விஜயகுமாருக்கு மு.க.முத்து நண்பராகியிருந்தார். விஜயகுமார் சினிமாவே வேண்டாம் என்று ஊருக்கு வந்திருந்த நேரத்தில் மு.க.முத்து நடித்த "பிள்ளையோ பிள்ளை'' படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

    இந்தப் படத்தை பார்த்ததும், தனது நண்பர்களில் ஒருவர் நடிகராகி விட்ட சந்தோஷம் விஜயகுமாருக்கு! அதோடு, `நாமும் சென்னைக்குப் போய், இன்னும் ஒரு தரம் முயன்று பார்த்தால் என்ன?' என்ற எண்ணமும் எழுந்தது. "திருமணமாகிவிட்டதே. இனி ஊரில் இருந்தால்தானே சரியாக இருக்கும்'' என்று மனதின் குறுக்கே ஓடிய கேள்வியை புறந்தள்ளினார். அப்பாவை சந்தித்தவர், "இன்னும் ஒரேயொரு தடவை மட்டும் சென்னைக்கு போய் நடிக்க முயற்சி செய்து பார்க்கட்டுமா?'' என்று கேட்டார்.

    அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:

    "மகன் இனி ஊரோடு செட்டிலாகி விடுவான். தொழிலில் நமக்கு உறுதுணையாக இருப்பான் என்று அப்பா நம்பினார். என் சினிமா ஆசை என்னை விட்டுப் போய் விட்டதை அறிந்த பிறகே திருமணமும் செய்து வைத்தார். இப்போது என் நண்பர் மு.க.முத்து நடிக்க வந்ததும் எனக்குள் இருந்த சினிமா ஆர்வம் பொங்கியெழுந்து விட்டதை புரிந்து கொண்டார்.  "ஒரு வருஷம் மட்டும் கடைசியாக முயற்சி செய்து பார்க்கிறேன். 365 நாள் வரையிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனால், மறுநாள் ஊரில் இருப்பேன். அதன் பிறகு `சினிமா' என்கிற வார்த்தையை கூட உங்களிடம் பேசமாட்டேன் என்றேன்.

    அப்பா என்னை கூர்மையாக பார்த்தார். நேராக வீட்டுக்குள் போனவர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். "நீ சென்னையில் இருக்கிற நாட்களில் பணப்பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காக இதை வைத்துக்கொள். சினிமாவுக்கு கடுமையாக முயற்சி பண்ணு. ஆனால் சொன்னபடி ஒரே வருஷம்தான். சினிமாவில் உன் முயற்சி வெற்றி பெற்றால் உன்னை விடவும் நான் அதிகம் சந்தோஷப்படுவேன்''  என்றபடி என்னை வழியனுப்பி வைத்தார்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார். 
    Next Story
    ×