search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பட அதிபர்கள் தந்த ஆனந்த அதிர்ச்சி
    X

    வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பட அதிபர்கள் தந்த ஆனந்த அதிர்ச்சி

    பட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.
    பட அதிபர்களுக்கு, முழு ஒத்துழைப்பு கொடுப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இதன் காரணமாக, சிலர் மனம் மகிழ்ந்து, பேசிய தொகைக்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, மூர்த்தியை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.

    வசனம் பேசிக்கொண்டிருக்கும் போதே இடைச் செருகலாக புதிய வார்த்தைகள் எதையாவது கோர்த்து விடுவார், மூர்த்தி. நாளடைவில் ரசிகர்கள் அதை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு படத்தில் மூர்த்தியைப் பார்க்கும்போதும், இந்தப் படத்தில் அதுமாதிரி புதுசாக என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

    இதுபற்றி மூர்த்தி கூறுகிறார்:-

    "சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் "சுமதி என் சுந்தரி'' படத்தில் சகோதரி ஜெயலலிதா ஒரு சினிமா நடிகையாகவே வருவார். படத்தில் அவருக்கு நான் செகரட்டரி.

    இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, வசனத்தில் புதிதாக எதையாவது சேர்த்து புதுமை செய்யலாம் என்று தோன்றியது. அதற்கான முதல் அடி மட்டும் எடுத்து வைத்தேன். நான் சரியாகச் செய்யவில்லையோ அல்லது ரசிகர்களிடம் என் புதுமுயற்சி சேரவில்லையோ, அந்தப் படத்தில் நான் காட்டிய வித்தியாசம் எடுபடாமல் போய்விட்டது.

    டைரக்டர் மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்தில் அடுத்த முயற்சியைத் தொடங்கினேன். அப்போது தோன்றிய `தம்ரி' என்ற வார்த்தையை மேனரிசத்துடன் செய்தேன். இந்த சவுண்டு `டெவலப்' ஆகி, அதுமுதல் என் புதிய படங்களிலும் அது மாதிரி ஏதாவது செய்தால்தான் ஆயிற்று என்கிற அளவுக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது.

    ஒருகட்டத்தில் இதை விட்டுவிட முடிவுசெய்தேன். ஆனால் படத்தின் டைரக்டர்கள் விடவில்லை. "மூர்த்தி சார்! வழக்கமான உங்கள் ஸ்டைல் வார்த்தைகள் வர்ற மாதிரியும் பேசிடுங்க'' என்பார்கள். கடைசியில் ரசிகர்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமும் என்று இருந்துவிட்டேன்.''

    இவ்வாறு கூறினார், மூர்த்தி.

    மூர்த்திக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருந்தாலும் அவரது மகன் மனோ நடிகர் அர்ஜ×னின் தீவிர ரசிகர். தீவிர சைவரான மூர்த்தி, மகனை மட்டும் இது விஷயத்தில் கட்டுப்படுத்தவில்லை. விளைவு, சென்னையில் உள்ள சைனீஷ் ஓட்டல் ஒன்றில் மனோ நிரந்தர வாடிக்கையாளர். இங்குதான் நடிகர் அர்ஜ×னை சந்தித்திருக்கிறார் மனோ. சாப்பாட்டு வேளை, அவர்களின் நட்பு வேளையும் ஆயிற்று. அர்ஜ×னின் அதிரடி ஆக்ஷன் படங்கள் பார்த்ததில் அர்ஜ×னின் தீவிர ரசிகர் என்ற வட்டத்திலும் மனோ நெருங்கியிருந்தார்.

    இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:-

    "பி.எஸ்.வி. பிக்சர்சின் ஒரு படத்தில் அர்ஜ×னுடன் நானும் நடித்தேன். அப்போது ஏற்பட்ட நட்பில் அர்ஜ×ன் எங்கள் வீட்டுக்கும் வருவார். என் மகனின் பழக்கவழக்கங்கள், அணுகுமுறை என அத்தனையும் அவருக்கு தெரியவர, மனோ மீது அதிகப்படியான அன்பு செலுத்தினார். தனது நண்பர்களிடம், "பிள்ளை வளர்த்தால் மூர்த்தி சார் மாதிரி வளர்க்கணும்'' என்று சொல்கிற அளவுக்கு மனோவின் நட்பும், நடவடிக்கையும் அவருக்கு பிடித்துப்போயிருக்கிறது.

    மகன் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார். மகன் மூலம் இறுகிய எங்கள் நட்பு, தொழிலிலும் எங்களை இணைத்தது. அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சமீபத்திய `வேதம்' படத்தில்கூட எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.''

    இவ்வாறு சொன்னார், மூர்த்தி.

    சினிமாவில் "பிரிக்க முடியாதது எதுவோ?'' என்று சிவபெருமான் - தருமி திருவிளையாடல் பாணியில் கேட்டால் - "நடிகர்களும் சம்பளப் பாக்கியும்'' என்று சொல்லலாம். இந்த பாக்கியை அடுத்தடுத்த படங்களில் கொடுத்து சரி செய்து விடும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். சம்பளம் பாக்கி வரவேண்டியிருக்கிறது என்பதை சொல்லாமலே மோப்பம் பிடித்து தேடி வந்து `பாக்கியை' கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

    மூர்த்திக்கும் இப்படி இரண்டொரு `இன்ப அதிர்ச்சி' இருக்கவே இருக்கிறது. அது பற்றி கூறுகிறார்:-

    டைரக்டர் பாசில் தயாரிப்பாளராகவும் மாறி உருவாக்கிய படம், `அரங்கேற்றவேளை.' இந்தப் படத்தில் நடிக்க பாசிலின் சகோதரர்தான் எனக்கு சம்பளம் பேசினார். சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் வரவேண்டியிருந்தது. டப்பிங் பேசப்போனபோது, பாக்கி பணத்தை கொடுத்துவிட்டார்கள்.

    நான் டப்பிங் பேசி முடித்து டப்பிங் தியேட்டரில் இருந்து புறப்பட்ட நேரத்தில், டைரக்டரும் தயாரிப்பாளருமான பாசில் என்னை அழைப்பதாக பாசிலின் உதவியாளர் சொன்னார். அவரை சந்தித்தேன். "படத்தில் எனக்கு நல்லவிதமாக ஒத்துழைச்சீங்க. அதுக்கு என்னோட சின்ன அன்பளிப்பு'' என்று கூறிய பாசில், சட்டென என் கையில் 5 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டார். சரியாக ஐயாயிரம். எனக்கு இன்ப அதிர்ச்சி. எனக்கு வரவேண்டிய பாக்கியாக இருந்த 5 ஆயிரத்தை கொடுத்திருந்தால், நான் வாங்கிக்கொள்ள முடியாது. கொஞ்சம் முன்னாடிதான் பாக்கி தொகையை வாங்கியிருக்கிறேன். எனவே நான் பதறியபடி, "என்ன சார் நீங்க? எனக்கு சம்பள பாக்கி கிடையாது. டப்பிங்குக்கு வந்ததுமே தரவேண்டியிருந்த 5 ஆயிரத்தையும் கொடுத்து விட்டார்கள்'' என்று சொல்லி பணத்தை அவரிடம் திரும்பவும் கொடுக்க முயன்றேன்.

    ஆனால் பாசிலோ பிடிவாதமாக, "நோ! நோ! இது நானாக உங்களுக்கு கொடுக்கிறேன் சார். படத்தில் உங்கள் ஈடுபாடு பார்த்து பிடித்து நானாகக் கொடுக்கிற இந்த அன்பளிப்பை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று சொல்லிவிட்டார்.

    இவர் மாதிரியே டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் தயாரிப்பாளராக இருந்த "ஏணிப்படிகள்'' படத்திலும் நடந்தது. சிவகுமார் - ஷோபா நடித்த அந்தப் படத்தை டைரக்டர் பி.மாதவன் இயக்கினார். படம் ரிலீசாகப் போகிற சமயத்தில் என்னை வரச்சொல்லி சேதுமாதவன் சந்தித்தார். "நம்ம படம் ரிலீசாகப் போகுது. உங்களுக்கு எங்க தயாரிப்பு நிர்வாகி ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாரா?'' என்று

    கேட்டார்.எனக்கு 3 ஆயிரம் மட்டும் வரவேண்டியிருந்தது. அதைச் சொன்னேன். "இருக்கட்டும் சார்! அப்புறமா வாங்கிக்கறேன்''

    என்றேன்.ஆனால் சேதுமாதவன் விடவில்லை. "உங்கள் விஷயம் என் காதுக்கு வரவில்லை. அதனால்தான் கேட்டு தெரிந்து கொண்டேன். பாக்கி தொகை 3 ஆயிரத்தையும் நீங்கள் பெற்றுக்கொண்டால்தான் படத்தின் தயாரிப்பாளரான எனக்கு சந்தோஷம்'' என்றார். அவரது பெருந்தன்மைக்கு தலைவணங்கி பணத்தை பெற்றுக்கொண்டேன்.

    டைரக்டர் ராம.நாராயணன் இயக்க வந்த புதிதில் `சிவப்பு மல்லி' என்ற படத்துக்கு என்னை அழைத்திருந்தார்கள். சின்ன பட்ஜெட் படம் என கேள்விப் பட்டிருந்ததால் சம்பளத்தை கம்மியாக கேட்டேன். படம் முடிந்த பிறகு ராம.நாராயணன் என்னை அழைத்துப் பேசினார். "ஒரு தயாரிப்பு நிறுவனம் நன்றாக இருக்கணும் என்கிற மனசு உங்களுக்கு இருக்கு. அடுத்து நான் டைரக்ட் பண்ற படங்களில் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. படத்துக்கு படம் உங்கள் சம்பளமும் அதிகமாகும் என்றார். ராம.நாராயணன் இயக்கிய படங்களில் நான் அதிகமாக நடித்த பின்னணியும் இதுதான்.''

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    Next Story
    ×