search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வெண்ணிற ஆடைக்குப்பின் அடுத்த வாய்ப்புக்கு நீண்ட காலம் காத்திருந்த மூர்த்தி
    X

    வெண்ணிற ஆடைக்குப்பின் அடுத்த வாய்ப்புக்கு நீண்ட காலம் காத்திருந்த மூர்த்தி

    வெண்ணிற ஆடை படம் 1965-ல் வெளியானது. படத்தில் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த் என அமைந்த அறிமுகப்பட்டியலில் மூர்த்தியும் இருந்தார்.
    வெண்ணிற ஆடை படம் 1965-ல் வெளியானது. படத்தில் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த் என அமைந்த அறிமுகப்பட்டியலில் மூர்த்தியும் இருந்தார்.

    இந்தப்படம் மூலம் நிர்மலா, `வெண்ணிற ஆடை நிர்மலா'வாகவும், மூர்த்தி, `வெண்ணிற ஆடை மூர்த்தி'யாகவும் மாறிப்போனார்கள். படத்தின் பெயர், இருவரிடமும் இணைபிரியாமல் ஒட்டிக்கொண்டு விட்டது.

    வக்கீலுக்குப் படித்த மகன், அதற்காக பிராக்டீஸ் செய்வதை தவிர்த்து, விற்பனைப் பிரதிநிதியாக மாறி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்ததுதான் அப்பாவுக்குத் தெரியும். அதன்பிறகு ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' படம் மூலம் காமெடி நடிகராக தமிழ் ரசிகர்களிடம் அறியப்பட்ட மூர்த்தி, படம் வெளிவரும்வரை பெற்றோரிடமும்கூட சொல்லவில்லை.

    படம் வெளிவந்த பிறகும் மறைத்தால் சரியாக இருக்காது. யாராவது அப்பாவிடம் தவறாக சொல்லி அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நாமே சொல்லி விடுவது என முடிவு செய்தார், மூர்த்தி. ஊருக்கு வந்து அப்பாவை சந்தித்த அவர், பேச்சினூடே தனக்கு கிடைத்த நடிப்பு வாய்ப்பு பற்றியும், நடிப்பிலும் எதிர்காலப் பிரகாசம் இருப்பது பற்றியும் நாசூக்காக சொல்லிவிட்டார். சொல்லி முடித்த பிறகு அப்பாவிடம் இருந்து பெரிய பிரளயத்தை எதிர்பார்த்தார். ஆனால் பலவீனமான அப்பாவிடம் இருந்து வெளிப்பட்டது அவரது உதடுகளில் இருந்து புன்னகைக்கீற்றுதான். "நல்லது கெட்டது தெரிஞ்சுக்கிற வயது உனக்கு வந்தாச்சு. எதில் ஆர்வமோ அதில் சாதிக்கப்பார்'' என்று சொன்னார் அப்பா.

    ஆனால் மூர்த்தியின் அப்பாவால் மகன் நடித்த `வெண்ணிற ஆடை' படத்தை பார்க்க இயலவில்லை. உடல் நலம் குன்றி அக்டோபரில் காலமாகி விட்டார். அம்மாவும் அப்போது அந்தப் படத்தை பார்க்காமலே இருந்து விட்டார். அதன் பிறகு டிவியில் ஒளிபரப்பியபோது மகனை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

    `வெண்ணிற ஆடை' வெற்றிப்பட பட்டியலில் நிச்சயம் சேரும் என்று நம்பினார் டைரக்டர் ஸ்ரீதர். ஆனால் கதைக்காக "ஏ'' சர்டிபிகேட் பெற்ற படத்தில், ரசிகர்கள் `எதிர்பார்த்த அம்சங்கள்' இல்லாததால் ஆரம்பத்தில் சரியாக ஓடவில்லை. பிறகு `பிக்அப்' ஆகி, நூறு நாட்கள் ஓடியது.

    வெண்ணிற ஆடை படம் ரிலீசாகி 6 மாதம் ஆகியும் மூர்த்தியை தேடி ஒரு தயாரிப்பாளர்கூட வரவில்லை. இதனால் தவறான பாதையில் அடியெடுத்து வைத்து விட்டோமோ என்று மூர்த்தி கூட கலக்கமுற்றார். உள் மனதில், பேசாமல் "சீனியர் வக்கீல் யாரிடமாவது ஜுனியராக சேர்ந்து விடுவோமா?'' என்றுகூட யோசித்தார். பிறகு எப்போதுதான் அடுத்த பட வாய்ப்பு வந்தது! அதுபற்றி `வெண்ணிற ஆடை' மூர்த்தி கூறியதாவது:-

    டைரக்டர் டி.என். பாலு அப்போது கதாசிரியராக இருந்தார். அவர் எழுதிய `காதல் படுத்தும்பாடு' கதையை டைரக்டர் ஜோசப் தளியத் படமாக எடுக்கிறார் என்பதை அறிந்தேன். படத்தில் தங்கவேலு சாருடன் கூடவே வருகிற ஒரு கேரக்டரில் நடிக்க ஆள் தேடிக்கொண்டிருப்பதை தெரிந்து கொண்டேன். இதனால் டைரக்டர் ஜோசப் தளியத்தை சந்தித்து பேசினேன்.

    நான் ஏற்கனவே டைரக்டர் ஸ்ரீதர் சாரின் படத்தில் நடித்திருப்பதை சொல்லி `சான்ஸ்' கேட்டேன். அவர் என்னிடம் "அந்தப்படத்தில் நீ நடித்த காமெடி போர்ஷனை மட்டும் வாங்கி வர முடியுமா?'' என்று கேட்டார். (விசிடி வராத காலம் அது) நான் ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது அவர்களும் பெருந்தன்மையாக நான் நடித்த ரீலை கொடுத்து அனுப்பினர்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் ஜோசப் தளியத், என் நடிப்பில் திருப்தியடைந்து அவரது படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார். தங்கவேலு சாருடன் வருகிற அந்த ஜாலி கேரக்டரும் எனக்கு பெயர் வாங்கித் தந்தது.

    டைரக்டர் ஜோசப் தளியத் ரொம்பவே பெருந்தன்மையானவர். படத்தை தயாரிப்பதும் அவரே என்பதால் சகல விஷயத்திலும் அவரது நேரடிப் பார்வை இருக்கும். சின்னவொரு விஷயத்தில்கூட அவரது அணுகுமுறை நமக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும். செட்டில் தங்கவேலு சாருடன் நடித்துக் கொண்டிருந்தேன். `லஞ்ச் பிரேக்' வந்தது. தங்கவேலு சாரை தனியறைக்கு சாப்பிட அழைத்துப் போனார்கள்.

    என்னையோ கம்பெனி ஆட்கள் சாப்பிடுகிற இடத்துக்கு அழைத்துப்போனார்கள். இதை பார்த்துவிட்ட டைரக்டர் ஜோசப் தளியத் தனது தயாரிப்பு நிர்வாகியை உடனடியாக அழைத்து, "மூர்த்தியை நடிகர் தங்கவேலு சாப்பிடப்போகும் அதே அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிட வையுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். நடிப்பில் வளரும் முன்பே எனக்கு அவர் மூலம் கிடைத்த இந்த மரியாதை என்னை நெகிழச் செய்தது.''

    இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

    படத்தில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கொண்டிருந்தாலும், மூர்த்தியை நாடக உலகமும் கவர்ந்திழுத்தது. `சித்ராலயா' கோபுவுடன் சேர்ந்து நாடகங்களையும் நடத்த ஆரம்பித்தார். கோபுவுடன் சேர்ந்து `காசேதான் கடவுளடா', `வீட்டுக்கு வீடு', `ஸ்ரீமதி' போன்ற நாடகங்களை நடத்தினார். இதில் ஒரு ஆங்கில புத்தகத்தில் மூர்த்தி படித்த ஒரு கதையை கோபுவிடம் சொல்ல, அவர் அதையே நாடகமாக்கினார்.அதுவே"காசேதான் கடவுளடா'' நாடகம்.

    இந்த "காசேதான் கடவுளடா'' நாடகம், பார்ப்பவர்கள் அத்தனை பேரையும் விலா நோகச் சிரிக்க வைத்தது. மனம் விட்டுச் சிரித்தவர்கள் மறுபடி மறுபடி நாடகம் பார்க்க வந்தார்கள்.

    ஒருநாள் இந்த நாடகத்தை பார்க்க ஏவி.மெய்யப்ப செட்டியார் வந்தார். நாடகம் பிடித்துப்போக, அதை படமாக்கும் முடிவுக்கு வந்தார். கோபு உள்ளிட்ட பலருக்கும் அப்போது அட்வான்ஸ் கொடுத்தார். எல்லோரும் உற்சாகத்தில் துள்ளினார்கள்.

    இந்தப்படத்தில் மூர்த்திக்கும் இடம் கிடைத்தது. படத்தில் நடித்ததற்காக 5 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இது மூர்த்தியை ரொம்பவே உற்சாகப்படுத்தியது.

    காரணம், அதுவரை படங் களுக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் தான் வாங்கினார். செட்டியார் உபயத்தில் 2 ஆயிரம் உயர்ந்தது.

    ஆனால் "காசேதான் கடவுளடா'' நாடகம் பல தடவைகள் மேடையேறியதால், நாடகத்தின் மூலமாக மட்டும் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பளமாக கிடைத்தது, மூர்த்திக்கு.

    Next Story
    ×