search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடனத்தில் முத்திரை பதித்த ஈ.வி.சரோஜா
    X

    நடனத்தில் முத்திரை பதித்த ஈ.வி.சரோஜா

    மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.
    மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.

    இவரது சொந்த ஊர் திருவாரூரை அடுத்த எண்கண். பெற்றோர்: வேணுபிள்ளை - ஜானகி.

    சரோஜாவுக்கு ஒரு அண்ணனும், 2 தம்பிகளும் உண்டு.

    தனது ஏழாவது வயதிலேயே தந்தையை இழந்தார், சரோஜா.

    சிறு வயதில் இருந்தே இவருக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் அவருக்கு முறைப்படி நடனப்பயிற்சி அளிக்க தாயார் முடிவு

    செய்தார்.இந்தக் காலக்கட்டத்தில், நடனக் கலையில் பெரிய மேதையாகத் திகழ்ந்தவர், வழுவூர் ராமையாப்பிள்ளை. குமாரி கமலா உள்பட பலருக்கு இவர்தான் குரு. அவர் திருவாரூருக்கு வந்திருந்த சமயம், அவரிடம் ஈ.வி.சரோஜாவை தாயார் அழைத்துச் சென்றார். "இவருக்கு நடனம் என்றால் உயிர். நீங்கள்தான் குருவாக இருந்து, நடனம் கற்றுத்தர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    ஈ.வி.சரோஜாவின் தோற்றமும், துறுதுறுப்பும், அழகிய கண்களும் ராமையாப்பிள்ளையை கவர்ந்தன. `இந்தப்பெண் நடனத்தை முறையாகக் கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் சிறந்த நடன நட்சத்திரமாகப் பிரகாசிப்பாள்'' என்று கருதினார். எனவே நடனப் பயிற்சிக்கு, சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

    வழுவூர் ராமையாப் பிள்ளையிடம், பரதநாட்டியத்தை கற்றுக்கொண்ட ஈ.வி.சரோஜா, வெகு விரைவிலேயே நடனத்தில் முழுத் தேர்ச்சி

    பெற்றார்.1951-ல் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில், நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் ஈ.வி.சரோஜாவின் நடன அரங்கேற்றம் நடந்தது. அப்போது அவருக்கு வயது 15.

    சிறந்த முறையில் நடனம் ஆடி, அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் ஈ.வி.சரோஜா பெற்றார்.

    இந்த சமயத்தில், அசோகா பிக்சர்சார் "என் தங்கை'' என்ற படத்தை தயாரித்து வந்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். அவருக்கு ஜோடி கிடையாது! படம் முழுவதும் சட்டை - வேட்டியுடன் வருவார்.

    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கை மீனாவாக நடிக்க, ஒரு பெண்ணை பட அதிபர்கள் தேடிக்கொண்டு இருந்தார்கள். நடன நிகழ்ச்சியில் ஈ.வி.சரோஜாவை அவர்கள் பார்த்தார்கள். "மீனாவாக நடிக்க இந்தப் பெண்தான் பொருத்தமானவர்'' என்று தீர்மானித்து, அவரை ஒப்பந்தம் செய்தார்கள்.

    "என் தங்கை''யில் ஈ.வி.சரோஜாவின் வேடம் மிக மிக முக்கியமானது. அவரைச் சுற்றிதான் கதை பின்னப்பட்டிருந்தது.

    இந்தப் படத்தில், ஈ.வி.சரோஜா பார்வையற்ற பெண்ணாக நடித்தார். ஏழையான எம்.ஜி.ஆர். தன் தங்கை மீது உயிரையே வைத்திருப்பார். நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க படாதபாடு படுவார். "குருட்டுப் பெண்ணுக்கு கல்யாணமா?'' என்று எல்லோரும் கேலியாகப் பேசி மறுத்து விடுவார்கள்.

    கடைசியில் ஒரு மாப்பிள்ளை அமையும்போது, சரோஜா இறந்து விடுவார். சோகத்தின் உச்சிக்கே சென்றுவிடும் எம்.ஜி.ஆர்., தங்கையின் உடலை தோளில் போட்டுக்கொண்டு கடற்கரையில் நடந்து செல்வார்; பிறகு விறுவிறுவென்று கடலுக்குள் இறங்கி விடுவார்.

    உள்ளத்தைத் தொடும் உருக்கமான காட்சிகள் நிறைந்த இந்தப்படம் வெற்றி பெற்றது.

    ஒரே படத்தின் மூலம் புகழ் பெற்றார், ஈ.வி.சரோஜா.

    ஏ.பி.நாகராஜனின் "பெண்ணரசி''யிலும் நடித்தார்.

    பின்னர், டி.ஆர்.ராமண்ணா டைரக்ஷனில் எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி ஆகியோர் நடித்த "குலேபகாவலி'' படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார்.

    "சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்கள் ஜவாப்பு'' என்று சந்திரபாபுவுடன் சேர்ந்து பாடி ஆடிய நடனம், அவரை நாடறிந்த நட்சத்திரம் ஆக்கியது.

    இதன்பின், "நீதிபதி'', "நல்லதங்காள்'' முதலிய படங்களில் சந்திரபாபுவுடன் இணைந்து நடித்தார்.

    எம்.ஜி.ஆர்., பானுமதி, பத்மினி நடித்த "மதுரை வீரன்'' படத்தில் ஈ.வி.சரோஜாவும் இடம் பெற்றார்.

    "வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க'' என்ற பாடலுக்கு ஈ.வி.சரோஜா ஆடிய நடனம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    "மதுரை வீரன்'', 35 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சில ஊர்களில் 25 வாரங்கள் ஓடியது.

    Next Story
    ×