search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    யாரும் வருந்துவதை காணச் சகியாதவர் - ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி
    X

    யாரும் வருந்துவதை காணச் சகியாதவர் - ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி

    "யாரும் மனம் வருந்துவதை காணச் சகிக்காத மனித நேயப் பண்பாளர் ரஜினிகாந்த்'' என்று விஜயகுமாரி கூறினார்.
    "யாரும் மனம் வருந்துவதை காணச் சகிக்காத மனித நேயப் பண்பாளர் ரஜினிகாந்த்'' என்று விஜயகுமாரி கூறினார்.

    சென்ற தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த விஜயகுமாரி, இன்றைய இளைய தலைமுறையினருக்கு அம்மாவாக நடிக்கிறார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது பூம்புகார் புரொடக்ஷன் தயாரித்த "பிள்ளையோ பிள்ளை'' என்ற படத்தில் மு.க.முத்துவிற்கு அம்மாவாக நடிக்கும்படி என்னைக் கேட்டார்கள். நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தபோது, அம்மா வேடத்தில் எப்படி நடிப்பது என்று யோசித்தேன்.

    கலைஞர் அவர்கள், கண்ணகி வேடத்தை எனக்கு கொடுத்து என்னை உயர்த்தியவர். அவருக்கு நான் இந்தப் படத்தில் நடிக்காவிட்டால் நன்றி இல்லாதவள் ஆகிவிடுவேன் என்று கருதி, கலைஞருக்காக அந்தப் படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

    மு.க.முத்துவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் லட்சுமி நடித்தார்.

    படம் முடிந்து பிரத்தியேக காட்சி போட்டார்கள். எல்லோரும் வந்து வாழ்த்தினார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் பேசும்போது, "எந்த பாத்திரம் கொடுத்தாலும் அந்த பாத்திரமாகவே மாறி அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து, சுத்தமாக தமிழ் பேசி உணர்ச்சி பூர்வமாக நடிக்கும் ஒரே தமிழ் நடிகை என் தங்கை விஜயகுமாரிதான்'' என்று வாழ்த்தினார்.

    இதை, என் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக நான் கருதினேன்.

    "மெட்டி'' என்ற படம் மகேந்திரன் டைரக்ஷனில் உருவாகியது. இதில் ராஜேஷ், சரத்பாபு, ராதிகா, வடிவுக்கரசி ஆகியோருடன் நான் நடித்தேன்.

    இந்தப் படத்தில் எனக்கு முதல் ஷாட் எடுக்கும்போது டைரக்டர் மகேந்திரனே வந்து "கிளாப்'' அடித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. `உதவி டைரக்டர்கள் தானே கிளாப் அடிப்பார்கள். இவர் ஏன் கிளாப் அடிக்கிறார்'' என்று ஒரு நிமிடம் யோசித்தேன். அப்போது மகேந்திரன், "அம்மா! உங்களுக்கு "காஞ்சித்தலைவன்'' படத்தில் நான்தான் கிளாப் அடித்தேன். அப்போது நான் அந்தப் படத்தின் டைரக்டர் காசிலிங்கத்திடம் உதவி டைரக்டராக இருந்தேன். இப்போது நான் டைரக்டு செய்யும் படத்தில் நீங்கள் நடிப்பதால், நானே கிளாப் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு!'' என்றார்.

    இந்தப் படத்தில் எல்லோரும் மேக்கப் இல்லாமலேயே நடித்திருந்தோம். பாடல்கள் அத்தனையும் மனதில் நிற்கும் அளவிற்கு இருந்தன. ஆனால், படம் சுமாராகத்தான் ஓடியது.

    சத்யா மூவிஸ் தயாரித்த படம் "தங்க மகன்.'' இந்தப்படம் ஏ.ஜெகந்நாதன் டைரக்ஷனில் உருவாகியது. ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம், தேங்காய் சீனிவாசன், ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகருடன் நான் நடித்தேன்.

    இதில் நான் ரஜினிகாந்திற்கு அம்மாவாக நடித்தேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்த் தனியாக அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பார். சில சமயம் எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்.

    ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். "நீங்கள் நடித்த படங்களை பார்த்து இருக்கிறேன். அந்தப் படங்களில் யார் கதாநாயகனாக நடித்தாலும், கதை உங்களை மையமாக வைத்துத்தான் இருக்கும்'' என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு கவனம் செலுத்தி பார்த்திருக்கிறார் என்று வியந்தேன்.

    மற்றொரு நாள் என்னிடம், "நீங்கள் தியானம் செய்யுங்கள்'' என்று சொன்னார். நான் சிரித்தேன்.

    "ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்றார். "எனக்கு தலைக்கு மேல் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறதே!'' என்றேன்.

    அதைக்கேட்டு அவர் சிரித்தார். நான் அவரைப்பார்த்து, "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்றேன். அதற்கு அவர், "தலை இருக்கும் வரை பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதையெல்லாம் மறந்து தியானம் செய்யுங்கள்'' என்றார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் செங்கல் சூளை ஒன்றில் நடந்தது. அப்போது ஒருநாள் நான், ரஜினி மற்றும் உடன் நடித்தவர்களிடம், "நாளைக்கு நான் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரச்சொல்கிறேன். எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்'' என்றேன்.

    "சரி'' என்று எல்லோரும் சொன்னார்கள்.

    அடுத்த நாள் ரஜினிகாந்திற்கு 11 மணிக்கே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. "எனக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டது. நேற்று நீங்கள் கூறியபோது, நான் இன்று உங்களுடன் சாப்பிடுவதாகச் சொன்னேன். சாரி! இன்னொரு நாள் சாப்பிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

    அன்று மத்தியானம் என் வீட்டிலிருந்து சாப்பாடு 2 மணிக்குத்தான் வந்தது. நாங்கள் எல்லோரும் சாப்பிட சென்றோம். அங்கு ரஜினிகாந்த் தரையில் படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்ற சத்தத்தை கேட்டு அவர் எழுந்து விட்டார். "சாரி! சாரி! நான் நன்றாக தூங்கிவிட்டேன் என்று சொல்லிவிட்டு, "சாப்பிடலாமா?'' என்று கேட்டார்.

    சற்று நேரத்துக்கு முன்தான், `இன்று சாப்பிட இயலவில்லை. இன்னொரு நாள் சாப்பிடுகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றவர், இங்கேயே இருந்திருக்கிறார்; சாப்பிடலாமா என்றும் கேட்கிறாரே' என்று எண்ணியபடி வியப்புடன் அவரை நோக்கினேன்.

    "என்ன பார்க்கிறீர்கள்! நான் சாப்பிடாமல் சென்றால் உங்கள் மனசு கஷ்டப்படும். அதனால்தான் இங்கேயே இருந்து விட்டேன்'' என்றார்.

    நான் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு எல்லோருக்கும் நானே பரிமாறினேன். அப்போது நான் நினைத்தேன். `ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட மற்றவர்கள் மனம் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறாரே. இவருடைய உள்ளம் எவ்வளவு உயர்ந்தது!' என்று எண்ணினேன்.

    ஏவி.எம். தயாரித்த "சூரக்கோட்டை சிங்கக்குட்டி'' என்ற படத்தில் பிரபுவுக்கு அம்மாவாக நடித்தேன். நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த நான், அவருடைய வாரிசுக்கு அம்மாவாக நடிப்பதில் அளவு கடந்த ஆனந்தம்.

    அதேபோல், முத்துராமனுடன் ஜோடியாக நடித்த நான், அவருடைய வாரிசு கார்த்திக்கின் அம்மாவாக "வணக்கம் வாத்தியாரே'' படத்தில் நடித்ததும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் "வசந்தகாலம்'', "பூவே உனக்காக'', ராஜ்கிரணின் "அரண்மனைக்கிளி'', "இரணியன்'' - இதெல்லாம் நான் அம்மா வேடத்தில் நடித்த படங்கள்.

    நான் நடித்த "காதல் சடுகுடு'' என்ற படம்தான் நான் கடைசியாக நடிக்கும் படம் என்று கருதி, படப்பிடிப்பு முடிந்தவுடன் என்னுடன் நடித்தவர்களுக்கெல்லாம் என் நினைவாக பரிசுப் பொருட்களைக் கொடுத்தேன்.

    மல்லியம் ராஜகோபால் தயாரித்த முதல் படத்தில் நான்தான் கதாநாயகி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த முதல் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருத்தி நான். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலில் டைரக்ட் செய்த படத்திலும் நான்தான் கதாநாயகி.

    பி.மாதவன் முதலில் டைரக்ட் செய்த படத்திலும் நான்தான் கதாநாயகி. ஏ.சி.திருலோகசந்தரின் முதல் படத்திலும் நான்தான் கதாநாயகி. ஆரூர்தாஸ் டைரக்ட் செய்த முதல் படத்திலும் நான்தான் கதாநாயகி.

    அந்தக்காலத்தில் திரை உலகில் புகழ் பெற்றவர்களின் முதல் படங்களில் எல்லாம் நான் கதாநாயகியாக நடித்ததை இன்னும் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

    இந்த பாக்கியம் எனக்கு மட்டும்தான் கிடைத்தது என்று எண்ணும்போது, பெருமையாக இருக்கிறது.

    இதேபோல திரை உலகில் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி, 1968-ம் ஆண்டு மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள ரசிகர்கள் சிறந்த நடிகையாக என்னை தேர்ந்தெடுத்ததுதான். சிறந்த நடிகராக எம்.ஜி.ஆரை தேர்ந்தெடுத்திருந்தார்கள். இதுவும் என் திரை உலக வாழ்க்கையில் மறக்க முடியாதது.

    சிறு வயதிலேயே என் தாயை இழந்து விட்டேன். அதன் பிறகு இன்று வரை எனக்கு உண்மையான அன்பு எங்கும் எனக்கு கிடைக்கவில்லை. நான் முதன் முதலாக காதலித்த சினிமா மட்டும்தான் எனக்கு ஆதரவாக-துணையாக என்னுடன் வாழ்ந்து வருகிறது.

    ஆம்; எனக்கு இப்போதெல்லாம் காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை டெலிவிஷனில் வரும் சினிமாக்கள்தான் துணையாக இருக்கின்றன.

    சில சமயங்களில் இனம் புரியாத ஏதோ ஒரு வேதனை என்னை வாட்டும். அந்த நேரம் நான் நேராக காரை எடுத்துக்கொண்டு மெரீனா கடற்கரைக்கு சென்று காரில் இருந்தபடியே அங்கு இருக்கும் கண்ணகி சிலையை பார்த்து சந்தோஷப்பட்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு நிறைந்த மனதோடு திரும்புவேன்.

    இன்றும் என்னை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் நினைவு கொள்வது கண்ணகி வேடத்தில் நான் நடித்ததைத்தான். அந்த அளவிற்கு இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். இந்த உலகம் இருக்கும் வரை, எத்தனை தலைமுறைகள் வந்தாலும் கண்ணகி பெயருடன் சேர்த்து, என்னையும் ரசிகர்கள் நினைவு கொள்வார்கள். இது எனக்கு கிடைத்த பெரும் பேறு.

    எனக்கு ரவிக்குமார் என்று ஒரு மகன். அவனுக்கு இரண்டு குழந்தைகள். பேத்தி அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்கிறாள். பேரன் சென்னையில் படிக்கிறான்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமாரி.
    Next Story
    ×