search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஏவி.எம் தயாரித்த குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம்
    X

    ஏவி.எம் தயாரித்த குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம்

    ஒரு மாதம் கழித்து, ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம்.
    ஒரு மாதம் கழித்து, ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம்.

    விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர். ஏவி.எம். நிர்வாகி வாசுமேனனை சந்தித்தனர்.

    "நாளை உனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப் போகிறோம். நாளைக்கு நீ பேசவேண்டிய வசனம் இந்த பேப்பரில் இருக்கிறது. நன்றாகப் படித்துவிட்டு வா. எப்படி நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் சொல்லித் தருகிறோம்'' என்றார், வாசுமேனன்.

    விஜயகுமாரி, வசனத்தை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு, மறுநாள் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப்போனார். அங்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடந்தது. சிரிக்கச் சொல்லியும், கோபம், சோகம் முதலான முக பாவங்களை வெளிப்படுத்தியும் படம் எடுத்தார்கள்.

    முதல் நாள் கொடுத்த வசனங்களை பேசி நடிக்கச் சொன்னார்கள். அதன்படி பேசி நடித்தார். "பரவாயில்லை; நன்றாக நடிக்கிறாய்'' என்று வாசுமேனன் பாராட்டினார்.

    "இன்னும் இரண்டு நாட்கள் நீங்கள் எல்லோரும் சென்னையிலேயே தங்கியிருங்கள்'' என்று, வாசுமேனன் கூறினார். அதன்படி, பெற்றோருடன் விஜயகுமாரி 2 நாட்கள் சென்னையில் தங்கினார்.

    2 நாட்களுக்குப்பின் ஏவி.எம்.மில் இருந்து கார் அனுப்பினார்கள். அதில் விஜயகுமாரியும், பெற்றோர்களும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றார்கள்.

    இவர்களை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் வாசுமேனன் அழைத்துச் சென்றார்.

    "உனக்குப் பாடத் தெரியுமா?'' என்று விஜயகுமாரியிடம் ஏவி.எம். கேட்டார். "தெரியாது'' என்று விஜயகுமாரி பதில் அளித்தார்.

    "பரத நாட்டியம் தெரியுமா?'', "நாடகங்களில் நடித்திருக்கிறாயா?'' - இப்படி ஏவி.எம். கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விஜயகுமாரி அளித்த பதில் "தெரியாது'', "இல்லை'' என்பதே!

    இந்த பதில்களைக் கேட்டு ஏவி.எம். சிரித்துவிட்டார். "எதுவுமே தெரியாத உன்னிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. ஸ்டூடியோவில் உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு, உனக்கு மாதச் சம்பளம் கொடுக்கப்படும்'' என்று ஏவி.எம். கூறினார்.

    இதற்கான ஒப்பந்தத்தில் விஜயகுமாரியும், அவருடைய அப்பாவும் கையெழுத்துப் போட்டனர்.

    ஏவி.எம். காலில் விழுந்து வணங்கினார், விஜயகுமாரி.

    "நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று ஏவி.எம். வாழ்த்தினார்.

    பின்னர் விஜயகுமாரியிடம் வாசுமேனன், "நீ இனிமேல் சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தினமும் இங்கு வந்து, டான்ஸ், பாட்டு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார். அதன்படி பெற்றோருடன் சென்னையில் குடியேறினார், விஜயகுமாரி.

    தினமும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்று, நடிப்பு, நடனம், வசனம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

    ஏவி.எம். தயாரித்த "குலதெய்வம்'' என்ற படத்தில் விஜயகுமாரி அறிமுகமானார். இதற்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன். அவருக்கும் இது முதல் படம். கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர்.

    எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, எம்.என்.ராஜம், மைனாவதி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்ற ராஜகோபால், பின்னர் "குலதெய்வம் ராஜகோபால்'' என்று அழைக்கப்பட்டார்.

    தன் முதல் திரைப்பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "நான் முதன் முதலில் கால் வைத்த இடம் ஏவி.எம். கலைக்கூடம். முதல் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டபோது, முதன் முதலாக பேசச்சொன்ன வசனம் கலைஞர் அவர்கள் எழுதி- நடிகர் திலகம் சிவாஜி அவர்களால் பேசப்பட்ட வசனம்- "ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்...'' என்பது. இதெல்லாம் எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்கள்.

    "குலதெய்வம்'' என்ற அருமையான படத்தில் என்னை ஏவி.எம். நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தார்.

    எந்தத் தாய் நான் சினிமாவில் நடிப்பதை ஆரம்பத்தில் எதிர்த்தாரோ, அதே தாயார் என் படம் எப்போது வரும் என்று தினமும் ஆவலோடு கேட்டு வந்தார்.

    இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் விதி விளையாடியது. என் தாயாரின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.

    தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்ப்பது, பிறகு ஸ்டூடியோவுக்கு செல்வது என்று நாட்கள் ஓடின.

    "குலதெய்வம்'' படம் முடிவடைவதற்கு முன்பே என் தாயார் காலமாகிவிட்டார்கள். என் அம்மாவை உயிரற்ற உடலாக வீட்டுக்குக் கொண்டு வந்தபோது, என் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்தது. என் அப்பா, நான், பாட்டி, அக்காள், தங்கை, அக்காள் மகள் எல்லோரும் கதறினோம்.

    நாங்கள் சென்னைக்கு புதிது. இங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது. ஆறுதல் சொல்வதற்குக்கூட யாரும் இல்லை.

    இந்த சமயத்தில் எங்கள் அம்மா இறந்த செய்தியைக் கேட்டு எஸ்.எஸ்.ஆர். வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொன்னார். என் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்தார்.

    என் அம்மாவின் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு "குலதெய்வம்'' படத்தில் தொடர்ந்து நடித்து வந்தேன். முன்பெல்லாம் என் துணைக்கு அப்பாவும், அம்மாவும் வருவார்கள். இப்போது அப்பா மட்டும் வந்தார்.

    "குலதெய்வம்'' 1956 செப்டம்பர் 29-ந்தேதி வெளிவந்தது. வெளியிட்ட எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக ஓடி, 100-வது நாள் விழாவை கொண்டாடியது.

    என் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இதைக்காண என் அம்மா இல்லையே என்ற துயரமும் மனதில் நிறைந்திருந்தது.

    எப்படி என் மனதைத் தேற்றினாலும், அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து என்னை வாட்டியது. அழுதுகொண்டே இருப்பேன். அவ்வப்போது, எஸ்.எஸ்.ஆர். என் வீட்டிற்கு வந்து எனக்கு ஆறுதல் சொல்வார். அது எனக்கு மனதில் தெம்பைக் கொடுத்தது.

    ஒருநாள் என் வீட்டிற்கு எஸ்.எஸ்.ஆர். அவர்கள் வந்தார்கள். என்னைப் பார்த்து "உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்'' என்றார்கள். "சொல்லுங்கள்'' என்றேன். "நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார். நான் மவுனமாக இருந்தேன். "மவுனம் சம்மதம்'' என்ற முறையில்.

    எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவில்லை; மாலை மாற்றிக் கொள்ளவும் இல்லை. எங்கள் வீட்டில் அப்போது இருந்த பெரியவர்களுடைய ஆசியைப் பெற்று, அவர்கள் முன்னிலையில் நாங்கள் கணவன் - மனைவியாக இல்வாழ்க்கையைத்

    தொடங்கினோம்.''இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    Next Story
    ×