search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கதாநாயகனாக உயர்ந்தபின் ரஜினியின் முதல் கதாநாயகி ஸ்ரீபிரியா
    X

    கதாநாயகனாக உயர்ந்தபின் ரஜினியின் முதல் கதாநாயகி ஸ்ரீபிரியா

    வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், முதன் முதலாக "பைரவி'' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீபிரியாவுக்கு கிடைத்தது.
    வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், முதன் முதலாக "பைரவி'' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீபிரியாவுக்கு கிடைத்தது.

    ஸ்ரீபிரியாவின் முதல் படமான "முருகன் காட்டிய வழி'' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் கே.பாலசந்தரின் "அவள் ஒரு தொடர்கதை'' படத்திலும்  ஒப்பந்தமானார் ஸ்ரீபிரியா.

    "முருகன் காட்டிய வழி'' படம் 1974 ஜுன் மாதம் ரிலீசானது. இதே ஆண்டில் தீபாவளி தினத்தில் "அவள் ஒரு தொடர்கதை'' படம் வெளியானது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். நடித்து டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய "உரிமைக்குரல்'' உள்ளிட்ட சில பெரிய படங்களும் வெளிவந்தன. இருந்தும் முற்றிலும் புதுமுகங்களை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை'' படம் மகத்தான வெற்றி பெற்றது.

    இதுபற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "அவள் ஒரு தொடர்கதை'' படத்தில் நடிக்கும்போதே டைரக்டர் கே.பாலசந்தர் என்னிடம் "படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் உன் கேரக்டர் தனித்துப் பேசப்படும்'' என்றார். அப்படியே நடந்தது.

    தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்தை தெலுங்கிலும் கே.பாலசந்தர் `அந்துலேனி கதா' என்ற பெயரில் உருவாக்கினார். தமிழில் சுஜாதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஜெயபிரதா நடித்தார். தமிழில் படாபட் ஜெயலட்சுமியும், நானும் ஏற்றிருந்த அதே கேரக்டர்களை தெலுங்கிலும் நடித்தோம். தெலுங்கிலும் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமானேன். தமிழில் என் அண்ணன் கேரக்டரில் ஜெய்கணேஷ் நடித்திருந்தார். தெலுங்கில் இந்தக் கேரக்டரில் ரஜினி நடித்து பிரபலமானார்.''

    இப்படி ரஜினியும், ஸ்ரீபிரியாவும் தெலுங்கில் நல்லவிதமாக அறிமுகமானதைத் தொடர்ந்து `சிலகம்மா செப்பந்தி' என்ற தெலுங்குப் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இது `அடிமைகள்' என்ற மலையாளப் படத்தின் ரீமேக். மலையாளத்தில் சாரதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே.பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.

    இந்த தெலுங்குப் படமும் வெற்றி பெற்றது. இதையே தமிழில் "நிழல் நிஜமாகிறது'' என்ற பெயரில் சில மாற்றங்களுடன் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கேரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கேரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றி பெற்றது.

    தமிழில் பாலசந்தர் கேட்ட தேதிகளை தரமுடியாத அளவுக்கு ஸ்ரீபிரியா பிசியாக இருந்ததால், தமிழில் ஸ்ரீபிரியாவுக்கு பதிலாக ஷோபா நடித்தார்.

    இதுபற்றி ஸ்ரீபிரியா கூறும்போது, "1974-ல் வருஷத்துக்கு ஐந்தாறு படம் என்ற நிலையில் இருந்தேன். ஆனால் அடுத்து வந்த வருடங்களில் வருடத்துக்கு 16 முதல் 18 படம் வரை நடித்தேன்! அந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தேன்'' என்கிறார்.

    வி.சி.குகநாதன் டைரக்ட் செய்த "மாங்குடி மைனர்'' படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் ரஜினி நடித்திருந்தாலும், விஜயகுமார்தான் "மாங்குடி மைனர்!'' ரஜினி, வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.

    இந்தியில் "ராம் கு கா லட்சுமண்'' என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.

    இந்த சமயத்தில்தான் "பைரவி'' படத்தில் ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார், தயாரிப்பாளர் கலைஞானம். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும்படி ஸ்ரீபிரியாவை கேட்டார்.

    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டு பிசியாக இருந்த நிலையிலும், கால்ஷீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து, "பைரவி''யில் கதாநாயகியாக நடித்தார்.

    இதுபற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "அப்போது நான் நிறைய தெலுங்குப் படங்களை கைவசம் வைத்திருந்தேன். நான், கமல், ரஜினி, மூவருமே சம காலத்தில் நடிக்க வந்தவர்கள். டைரக்டர் கே.பாலசந்தர் படங்களில் நடிக்கும்போதே, எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது. ருத்ரையா டைரக்ஷனில் "அவள் அப்படித்தான்'' படத்தில் கமல், ரஜினி, நான் என்று மூவருமே நடித்தும் இருக்கிறோம். ரஜினியுடன் "ஆடுபுலி ஆட்டம்'' போன்ற சில படங்களில் நடிப்பை தொடர்ந்திருக்கிறேன்.

    "அவள் அப்படித்தான்'' படத்தில் என் நடிப்புக்காக தமிழக அரசு "சிறந்த நடிகை'' விருது தந்தது. உண்மையில் இந்தப் படத்தின் கதையை கேட்டதும் நான் நடிக்கத் தயங்கினேன். திருமணமானவரை விரும்பும் பெண் கேரக்டரை ரசிகர்கள் ஏற்பார்களோ, மாட்டார்களோ என்று பயந்தேன். ஆனால் கமல்தான், "நிச்சயமாக இந்த கேரக்டர் உனக்கு பேரும் புகழும் வாங்கித் தரும். நடி'' என்று வற்புறுத்தினார்.

    இப்படி ஒருவர் வளர்ச்சியில் மற்றவர்கள் அக்கறை செலுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தோம்.

    முதல் முதலாக ரஜினி கதாநாயகனாக நடித்த படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்ததும், அப்போது `பத்மாலயா' நிறுவனத்தின் தெலுங்குப் படத்துக்கு கொடுத்திருந்த கால்ஷீட்களை அவர்களிடம் கேட்டு மாற்றிக்கொண்டு, "பைரவி'' படத்தில் நடித்தேன். படமும் வெற்றி பெற்றது'' என்றார், ஸ்ரீபிரியா.

    தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ஆட்டுக்கார அலமேலு'' படம் ஸ்ரீபிரியாவுக்கு மிகவும் புகழ் தேடித்தந்த படம். ஸ்ரீபிரியா நடித்த வேடத்தில், முதலில் படாபட் ஜெயலட்சுமிதான் நடிக்க இருந்தார். அப்போது தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கத்தில் "படாபட்'' நடித்த தெலுங்குப்படம் தமிழில் "சொர்க்கம் - நரகம்'' என்ற பெயரில் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றிருந்தது. இதனால், `படாபட்' ஜெயலட்சுமியை ஆட்டுக்கார அலமேலுவாக நடிக்கச் செய்ய ஏற்பாடு நடந்தது.

    பிறகு எப்படி ஸ்ரீபிரியா "ஆட்டுக்கார அலமேலு'' ஆனார் என்பது ஒரு சுவாரசியமான கதை. 
    Next Story
    ×