search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா லண்டனுக்குச் சென்று பதிவு செய்த சிம்பொனி இசை
    X

    இளையராஜா லண்டனுக்குச் சென்று பதிவு செய்த சிம்பொனி இசை

    இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை ("சிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.
    இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை ("சிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.

    இந்த நிகழ்ச்சி, 1993 ஜுலை மாதத்தில் நடந்தது.

    "சிம்பொனி'' என்றால் என்ன?

    வெளிநாடுகளில், அந்தந்த காலத்திய இசைக் குழுவினர் வாசிப்பதற்காக, இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசைத் தொகுப்புகளை உருவாக்கினார்கள். இந்த இசைத் தொகுப்புகளுக்கு "சிம்பொனி'' என்று பெயர்.

    சாஸ்திரிய முறைப்படி பழுதற்ற உயர்ந்த இசை வடிவங்களை, 15-ம் நூற்றாண்டில் இருந்தே விவால்டி, கேன்டல், பீதோவான் போன்ற இசை மேதைகள் உருவாக்கித் தந்தார்கள்.

    இளையராஜாவின் இசைத் திறமை பற்றி, லண்டனில் உள்ள "ராயல் பில் ஹார்மனி'' என்ற இசைக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இந்த இசைக்குழு, ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்குவதாகும்.

    இந்த இசைக்குழுவினர் மைக்கேல் டவுன்எண்ட் என்பவரை சென்னைக்கு அனுப்பி, இளையராஜாவின் இசையைப் பற்றி நேரில் அறிந்துவர ஏற்பாடு செய்தனர்.

    சென்னையில் ஒரு படத்துக்கு இளையராஜா இசை அமைத்துக் கொண்டிருந்ததை டவுன்எண்ட் பார்த்தார். இளையராஜாவின் இசைத் திறமையை வெகுவாகப் புகழ்ந்து, லண்டனுக்கு தகவல் அனுப்பினார்.

    இதைத்தொடர்ந்து, இளையராஜாவுக்கு "ராயல் பில் ஹார்மனி'' இசைக்குழு அழைப்பு அனுப்பியது.

    "1993 ஜுலை 6-ந்தேதி அவர்கள் இளையராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், "வருகிற 19 முதல் 21-ந்தேதி வரை தங்கள் இசையை (சிம்பொனி) பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். எலிசபெத் ராணி அவர்களின் ஆதரவில், இது உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவாக இருந்தபோதிலும், ஆசியாவின் எந்த இசை அமைப்பாளரின் இசையையும் இதுவரை பதிவு செய்தது இல்லை. ராயல் பில்ஹர்மோனி இசைக்குழுவில் உள்ள அனைவரும் தங்கள் இசையை பதிவு செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையைப் பதிவு செய்தார்.

    அகில இந்திய திரை இசையின் பிதாமகன் என்று போற்றப்படுகிறவர் நவுஷாத். அகில இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய "ரத்தன்'', "அன்மோல்கடி'', "ஆன்'', "மொகல்-ஏ-ஆஜாம்'' முதலிய படங்களுக்கு இசை அமைத்தவர்.

    அவர் ஒரு சமயத்தில், "இளையராஜாவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு உடல் நிலை சரியாக இருந்து நேரமும் இருக்குமானால், இந்த இளைஞனிடம் உட்கார்ந்து கற்றுக் கொள்வதற்கு நான் தயங்கமாட்டேன்'' என்று குறிப்பிட்டார்.

    இதுபற்றி இளையராஜா கூறுகையில், "இசை என்றால் என்னவென்றே அறியாத இந்தப் படிக்காத பட்டிக்காட்டானிடம் இசையை கற்றுக்கொள்ளலாம் என்று கூறிய - என் முன்னோடிகளில் மூத்தவரான நவுஷாத் அவர்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்துவதற்கு பதிலாக - சிறிய புழுவாக்கிவிட்டது'' என்று சொன்னார்.

    புகழ்ச்சி, சிலரை கர்வப்பட வைக்கும். இளையராஜாவை நாணப்பட வைத்தது.

    இளையராஜா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

    "நான் படித்தவன் இல்லை. முறையாக சங்கீதம் கற்றவனும் இல்லை. எனக்குள் இருப்பது, என்னில் இருந்து மாறுபட்ட ஒன்றாகத் தோன்றுகிறது.

    சில இசை உருவாக்கங்களை, படைப்புகளைச் செய்துவிட்டு, பிறகு நிதானமாக ஆராயும்போது, `இதைச் செய்தது நான்தானா?' என்று தோன்றுகிறது. `இதைப் படைத்தது நானில்லையோ' என்று தோன்றுகிறது. இதுபோல் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

    இந்தப் பிறவியில் உருவான ஒன்றாகவும் இது தோன்றவில்லை. இது என்னுடையது இல்லையோ, இதை என்னால் சிந்திக்க முடியுமா என்றும் தோன்றுகிறது.''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×