search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா 3 முறை தேசிய விருது பெற்றார்
    X

    இளையராஜா 3 முறை தேசிய விருது பெற்றார்

    சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.
    சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.

    அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-

    1. சிந்து பைரவி

    2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')

    3. ருத்ரவீணை.

    இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

    இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.

    ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.

    இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.

    சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.

    தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.

    தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான

    பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.

    தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    Next Story
    ×