search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா வாழ்க்கைப்பாதை - தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு இசை அமைத்தார்
    X

    இளையராஜா வாழ்க்கைப்பாதை - தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு இசை அமைத்தார்

    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலை யாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.
    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலை யாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.

    இசை அனுபவங்கள் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பழசை நினைத்துப் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. இன்றைக்கு, ஒரு இசையமைப்பாளராக என்னை ரசிகர்கள் அங்கீகரித்துக் கொண்டால்கூட, ஊரில் இருந்து நான் வரும்போது இந்த நம்பிக்கை இருந்ததா என்றால், "இல்லை'' என்பதுதான் என் பதிலாக இருக்கும்.

    "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பாடல்கள் பதிவான நிலையில் ஒரு நாள் அண்ணன் பாஸ்கரிடம் மனம் விட்டுப் பேசினேன். "அண்ணா! நாம் கிராமத்தை விட்டு வரும்போது அம்மா நம்மிடம் `பட்டணத்தில் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். பதிலுக்கு நாம், "அப்படி ஒருவேளை எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என்றால், பிளாட்பாரத்தில் - தெருவில் உட்கார்ந்து ஜனங்கள் முன்பு வாசிப்போம். எங்களுக்கென்ன கவலை!'' என்று சொன்னோமல்லவா! அப்படி வாசிக்கும் நிலைமை ஏற்படவில்லையென்றாலும், கடற்கரையில் உட்கார்ந்து வாசிப்பது போல ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்வோமா?'' என்று கேட்டேன்.

    பாஸ்கருக்கு என் யோசனை பிடித்தது. "போகலாமே'' என்றார்.

    பீச்சுக்குப்போனால் அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்காக கமல் நடிக்க பாரதிராஜா டைரக்ட் செய்து கொண்டிருந்தார்.

    தானாகக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா?

    நாங்கள் பிளாட்பாரத்தில் வாசிப்பது போலவும், கமலும் பாரதியும் எங்கள் பாட்டை கேட்டுக்கொண்டே தரையில் விரித்திருந்த துண்டில் காசு போடுவது போலும் படங்கள் எடுத்துக்கொண்டோம்!

    "சிகப்பு ரோஜாக்கள்'' படம் பின்னணி இசைக்காக என்னிடம் வந்தது.

    பாரதிராஜா தனது தாயாருடன் தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் இருந்தபோது நானும் பாரதியும் அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. காலேஜ் வரை நடந்து போய் வருவோம். சில சமயம் இரவு 9 மணியைக் கடந்து வீட்டுக்குத் திரும்புவோம்.

    இப்படி ஒரு நாள் `வாக்கிங்' போன நேரத்தில், பாரதி ஒரு கதை சொன்னார். அது புகழ் பெற்ற ஆலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் படம் போல இருந்தது.

    நாங்கள் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே பாழடைந்த பங்களா ஒன்று எங்கள் கண்ணில்படும். அதை பார்த்துத்தான் அந்தக் கதை தன் மனதில் உருவானதாக பாரதி சொன்னார். அந்தக் கதைதான், அவரது டைரக்ஷனில் `சிகப்பு ரோஜாக்கள்' ஆகியிருந்தது. பாரதிராஜா என்றால் கிராமத்துக் கதைகளை மட்டுமே டைரக்ட் செய்வார் என்று அப்போது ஒரு பேச்சு இருந்தது. அதற்குப் பதிலடி தருகிற விதத்தில் இந்தப் படம் வந்திருப்பதை ரெக்கார்டிங்கின் போதே தெரிந்து கொண்டேன்.

    பின்னணி இசைக்கு பொதுவாக எல்லாப் படத்துக்கும் 6 கால்ஷீட்டுகள் தேவைப்படும். ஆனால் இந்தப் படத்துக்கோ 4 கால்ஷீட்டுகளே தேவைப்பட்டது. அதாவது மூன்று நாளில் ஐந்தே பேர்தான் இசைக்குழு. நான்காவது கால்ஷீட்டில் 12 வயலின், 2 செல்லோ அவ்வளவுதான்.

    சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பின்னணி இசைக்கு மொத்தப் பில்லும் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.

    இந்தப் படத்தின் வெற்றி, இதை இந்திக்கும் கொண்டு போனது. இந்தி `ரீமேக்'கில் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார்.

    எப்படி இந்த பின்னணி இசையை கிரியேட் செய்தேன் என்று என்னிடம் அவரே கேட்டு வியந்தார்.

    இந்தப் படத்துக்கு அவர் அமைத்த இசையில் சரியான `எபெக்ட்' வராமல் இருந்திருக்கிறது. இதனால் தமிழில் நான் இசையமைத்த "மிïசிக்'' டிராக்குகளை தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம் கேட்டிருக்கிறார், பாரதி.

    கே.ஆர்.ஜி. என்னிடம் வந்து "கொடுக்கலாமா?'' என்று கேட்டார். நான் கே.ஆர்.ஜி.யிடம், "என்னைவிட நன்றாக இசையமைப்பார் என்றுதானே ஆர்.டி.பர்மனிடம் பாரதி போனார்! அவரே போடட்டும். டிராக்குகளை கொடுக்கவேண்டாம்'' என்று கூறிவிட்டேன். டிராக்குகளை கொடுத்திருந்தாலும் டைட்டிலில் என் பெயர் வராதல்லவா!''

    நடிகர் பாலாஜி தயாரிப்பாளராகவும் மாறி, படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார். "தியாகம்'' என்ற படத்தை அப்போது தயாரித்தார். சிவாஜி நடித்த இந்தப் படத்தில், "வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள், கலைந்திடும் கனவுகள்' கண்ணீர் சிந்தும் உறவுகள்'' என்ற கவியரசு கண்ணதாசனின் அற்புதமான சிந்தனையுடன் கூடிய பாடல் இடம் பெற்றது.

    இதே படத்தில் சிவாஜி பாடுவதாக வரும் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு'' என்ற பாடலும் காலத்தில் அழியாதது.

    "நதி வெள்ளம் காய்ந்து விட்டால்

    நதி செய்த குற்றம் இல்லை!

    விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா!

    மனிதனம்மா மயங்குகிறேன்''

    - இப்படி போகும் பாடலில் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக சொல்லியிருந்தார் கவியரசர்.

    தமிழில் சிவாஜி நடித்த "வாழ நினைத்தால் வாழலாம்'', "வட்டத்துக்குள் சதுரம்'' என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில், `வயசு பிடிசிந்தி' என்ற தெலுங்குப் பட வாய்ப்பும் வந்தது. இந்த வகையில் என் முதல் தெலுங்குப்படம் இது.

    இதே சமயத்தில் `வ்யா மோஹம்' என்ற மலையாள படத்துக்கும் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. எனது இசையில் வந்த இந்த முதல் மலையாளப்படம் தமிழில் ஸ்ரீதர் டைரக்ட் செய்த "போலீஸ்காரன் மகள்'' என்ற படத்தின் ரீமேக்.

    தேவர் பிலிம்ஸ் "அன்னை ஓர் ஆலயம்'' என்றொரு படம் எடுத்தார்கள். ரஜினி முதன் முதலாக தேவர் பிலிம்சில் நடித்த படம்.

    இந்தப் படத்துக்கு முன்னால் ஒரு முறை திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம் என்று போயிருந்தேன். பெயர், புகழ் என்று எந்த செல்வாக்கையும் உபயோகிக்காமல் சாதாரண பக்தனாக போய் வந்தேன். என்னுடன் மனைவி, குழந்தைகளும் வந்திருந்தார்கள்.

    அப்படிப் போனபோது தரிசனம் செய்யக்கூட விடாமல், பிடித்துத் தள்ளுவதும், ஆட்கள் நெருக்குவதுமாக மிகவும் வருந்தும்படியான தரிசனமாகியது. அப்போது நான் பெருமாளிடம், "சந்நிதியில் சாதாரணமாக வந்தேன். உன்னை தரிசிக்க இயலவில்லை. இனிமேல் உன்னைப் பார்க்க வரமாட்டேன்'' என்று சபதம் செய்து விட்டு வந்துவிட்டேன்.

    "அன்னை ஓர் ஆலயம்'' படத்தின் இசை அமைப்பாளர் என்ற முறையில் என்னை படத்தின் டைரக்டர் தியாகராஜன் சந்தித்தார். "ராஜா சார்! அன்னை ஓர் ஆலயம்'' கம்போசிங்கிற்கு திருப்பதி போகலாமா?'' என்று கேட்டார்.

    மூகாம்பிகை போய் என் வாழ்க்கை முறை முற்றிலுமாய் மாறியிருந்த நேரம் அது. எனவே வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ எதுவும் சொல்லாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்தேன்.

    "அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமை போகலாமா?'' என்று கேட்டார்.

    அதற்கும் தலையசைப்பில் சரி சொன்னேன்.

    அப்போது திருப்பதியில் ஒரு பத்து காட்டேஜ்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.

    ஐந்து காட்டேஜ்களில் ஒன்றில் நானும், இன்னொன்றில் கவிஞர் வாலியும், என் உதவியாளர்கள் இன்னொன்றிலுமாக இருந்தோம். டைரக்டர் தியாகராஜன், அவரது ïனிட் ஆட்கள் அடுத்த 2 காட்டேஜ்களில் தங்கினார்கள்.

    முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு ராஜதரிசனம் என்று சொல்லி தேவஸ்தானத்தில் இருந்து அழைத்துப் போனார்கள்.

    நானும் போனேன். தரிசனம் நன்றாக நடந்தது. என்னிடம் மட்டும் "என்ன! வரமாட்டேன் என்றாயே... வரவைத்துவிட்டேன் பார்த்தாயா?'' என்று சுவாமி கேட்பது போலிருந்தது.

    நானும் மானசீகமாய்ப் பேசினேன். "நீ தரிசனம் கொடுத்தாலும் நீதான் பெரும் ஆள்! தரிசனம் கொடுக்காவிட்டாலும் நீதானே பெரும் ஆள்! இதில் என் மனம் போல் தரிசனம் கிடைத்தால் என்னைப்பற்றி நான் பெருமைப்பட என்ன இருக்கிறது? நீ கொடுத்தால்தானே கிடைக்கும். கொடுத்தாலும் நீயே. கொடுக்காவிட்டாலும் நீயே!'' என்று மனதுக்குள் கூறிக்கொண்டேன்.

    அங்கிருந்த ஒரு வாரமும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி இருப்பார். தினசரி காலை 4 மணிக்கு எங்களை அழைப்பார். தரிசனம் கொடுப்பார். எங்களை பெருமைப்பட வைப்பார். அதைப் பார்த்து ரசிப்பார்.

    ரெக்கார்டிங் சமயத்தில்தான் இதை வாலியிடம் சொன்னேன். அதிசயப்பட்டார். "யோவ் நீ பெருமாளுக்கு அடியார்யா! அதனால்தான் உன்னை அழைத்து வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.

    Next Story
    ×