search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா இசை அமைத்த முதல் படம் அன்னக்கிளி - மகத்தான வெற்றி
    X

    இளையராஜா இசை அமைத்த முதல் படம் அன்னக்கிளி - மகத்தான வெற்றி

    எல்லாப் பாடல்களும் `ஹிட்'இளையராஜா இசை அமைத்த "அன்னக்கிளி'' மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.
    எல்லாப் பாடல்களும் `ஹிட்'இளையராஜா இசை அமைத்த "அன்னக்கிளி'' மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.

    பலருடைய எதிர்ப்பையும் மீறி, "அன்னக்கிளி'' படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் வழங்கினார்.

    படம் வெளிவரும் வரை இளையராஜாவுக்கு சோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, பின்னணி இசை சேர்ப்பு வேலை ("ரீரிக்கார்டிங்'') நடந்தபோதுகூட "இளையராஜாவுக்கு ரீரிகார்டிங் தெரியவில்லை. படத்தைக் கெடுக்கிறார்'' என்று சிலர் கூறினார்கள்.

    பஞ்சு அருணாசலத்துக்கும், டைரக்டர் தேவராஜ×க்கும் இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பிடித்திருந்தது. எனவே, இளையராஜா பற்றி குறை சொன்னவர்களிடம் "உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள். இந்தப்பக்கம் வராதீர்கள்'' என்று கண்டிப்புடன் சொல்லி அவர்களை விரட்டி அடித்தார், பஞ்சு அருணாசலம்.

    பஞ்சு அருணாசலத்தின் தம்பி லட்சுமணன், ஸ்டூடியோவுக்கு வந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம், இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பற்றி குறை கூறியிருக்கிறார். அதற்கு எம்.எஸ்.வி, "அந்தப் பையனை எனக்குத் தெரியும். என் ரெக்கார்டிங்கில் வாசித்து இருக்கிறான். அவனுக்கு இசை பற்றி எல்லாம் தெரியும். தொந்தரவு செய்யாமல் அவனை விட்டு விடுங்கள். படத்துக்கு என்ன வேண்டுமோ அது வந்துவிடும்'' என்று சூடான பதில் கூறியிருக்கிறார்.

    இளையராஜாவின் இயற்பெயர் ராஜையா. அதை "ராஜா'' என்று மாற்றியவர் தன்ராஜ் மாஸ்டர்.

    இப்போது "அன்னக்கிளி'' டைட்டிலில் பெயரை எப்படிப் போடுவது என்று கேள்வி எழுந்தது. கச்சேரிகளில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயர் பிரபலமாகியிருந்ததால், அந்தப் பெயரையே பயன்படுத்தலாம் என்று கூறினார் இளையராஜா.

    "அது, ஆலத்தூர் பிரதர்ஸ், டி.கே.எஸ். பிரதர்ஸ் என்பது மாதிரி ரொம்பப் பழைய ஸ்டைல்!'' என்று பஞ்சு அருணாசலம் கூறினார். சற்று நேரம் யோசித்து விட்டு, "உன் பெயர் ராஜா. ஏற்கனவே, சினிமாவில் ஏ.எம்.ராஜா இருக்கிறார். பின்னணி பாடுவதுடன், சில படங்களுக்கு மிïசிக் டைரக்ஷனும் செய்திருக்கிறார். அவர் பெரிய ராஜா. நீ இளையராஜா! உன் பெயரை இளையராஜா என்று வைத்துவிடுவோம்''

    என்றார்.அவர் சூட்டிய வேளை நல்ல நேரமாகவும், பெயர் ராசியான பெயராகவும் அமைந்தது. ஒருசில நாட்களிலேயே "இளையராஜா'' என்ற பெயர் தமிழக மக்களின் செல்லப் பெயராக அமைந்தது.

    சிவகுமாரும், சுஜாதாவும் ஜோடியாக நடித்த "அன்னக்கிளி'' 14-5-1976ல் ரிலீஸ் ஆயிற்று.

    எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. எனவே, "அன்னக்கிளி''க்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இல்லை. சில ஊர்களில் ஒரே வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள்.

    படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, "படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசை அமைப்பாளர் பாடல்களுக்கு போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன'' என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின.

    இதனால், தியேட்டர்களில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகியது. ஒரே வாரத்தில் படத்தை எடுத்த தியேட்டர்களில், மீண்டும் "அன்னக்கிளி'' திரையிடப்பட்டது.

    15 நாட்களில் "அன்னக்கிளி'' திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு காட்சியும் "ஹவுஸ்புல்'' ஆனது.

    "அன்னக்கிளி'' இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது. "அன்னக்கிளி ஒன்னைத்தேடுது'', "மச்சானைப் பார்த்தீங்களா'', "நம்ம வீட்டுக் கல்யாணம்'' முதலான பாட்டுகள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன.

    "அன்னக்கிளி'' 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.

    "இளையராஜா அனுபவம்

    "அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-

    "அன்னக்கிளி இசைத்தட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. கடைகளில் முன்பதிவு செய்து, இசைத்தட்டை வாங்கினார்கள்.

    அப்போது டெலிவிஷன் கிடையாது. ரேடியோ தான். அந்த சமயம் அன்னக்கிளி பாடலை ரேடியோவில் ஒலிபரப்பினால் ஒரு வீட்டில் பாடலை வைப்பார்கள். அது அடுத்த வீடு, அடுத்த வீடு என்று தொடர்ந்து தெரு முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும். இதை நான் மலயப்பநாயகன் தெருவில் வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன். அதுவும் 6 மாதங்களுக்கு மேலாக நானே நேரடியாக கண்டு இருக்கிறேன்.

    அன்னக்கிளிக்கு நான்தான் இசை அமைத்தேன் என்பது  இரண்டு மூன்று வீடுகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.

    மக்கள் அந்த பாடல்களை கேட்க, கேட்க `எந்த பாடல் நன்றாக இருந்தாலும் அதை ரசிப்பார்கள்' என்று எண்ணினேனே தவிர, கர்வப்படவில்லை. சந்தோஷப்பட்டேன்.

    என் பெயர் வெளியில் பெரியதாக பேசப்பட்டாலும், இன்று ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அவர்களையே சுற்றிவரும் கூட்டம்போல் அன்று

    இல்லை.நானும் பெயர் வந்து விட்டது என்பதற்காக ஜி.கே.வி.யை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று எண்ணவில்லை. கிட்டாரைத் தூக்கிக்கொண்டு, அவர் எங்கு போனாலும் பின்னால் போய்க்கொண்டிருந்தேன்.

    போடிநாயக்கனூரில் ஒரு கச்சேரிக்கு சென்றிருந்தோம். அப்போது நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு என்னைப்பார்க்க அதிகமான கூட்டம். கூட்டம் கலைய வேண்டும் என்றால் நான் வந்து எனது முகத்தை காட்ட வேண்டும் என்று கூறினார்கள்.

    நானும் கூட்டத்தினர் முன்பு வந்து நின்றேன். ஆனால் கூட்டத்தினரோ எனக்கு பின்னால் பார்த்துக்கொண்டு இருந்தனர். `என்னங்க! இன்னமும் இளையராஜாவை காணோம்' என்று ஒருவர் கேட்டார்.

    என் அருகில் இருந்தவர், `இதோ இவர்தான்!' என்று என்னை சுட்டிக்காட்டினார்.

    உடனே கூட்டத்தினர் கையை முகவாய்கட்டையில் வைத்து, "ஹூம்... இந்த பையன்தானா!'' என்று உற்சாகம் குறைந்தவர்களாக, காற்றுப்போன பலூன் மாதிரி ஆனார்கள்.

    பெயருக்கு ஏற்றபடி ஒரு பெரிய அழகான வாலிபனாக எதிர்பார்த்தவர்களுக்கு, சின்னப்பையனாய்... பேண்டும், சட்டையும் கிராப்புமாய் இருந்தவனை `இளையராஜா' என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு ஏமாற்றம்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    Next Story
    ×