search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஈ.வி.சரோஜா டைரக்டர் ராமண்ணாவை மணந்தார்
    X

    ஈ.வி.சரோஜா டைரக்டர் ராமண்ணாவை மணந்தார்

    புகழின் உச்சியில் இருந்தபோது, டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவை ஈ.வி.சரோஜா மணந்து கொண்டார்.
    புகழின் உச்சியில் இருந்தபோது, டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவை ஈ.வி.சரோஜா மணந்து கொண்டார்.

    அதன்பின் "கொடுத்து வைத்தவள்'' என்ற படத்தை ராமண்ணாவும், ஈ.வி.சரோஜாவும் தயாரித்தனர். இந்தப்படத்தில், எம்.ஜி.ஆரும், ஈ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இது வெற்றிப்படம்.

    அதன் பிறகு ஈ.வி.சரோஜா படங்களில் நடிக்கவில்லை குடும்பத் தலைவியானார்.

    ஈ.வி.சரோஜா - ராமண்ணா தம்பதிகளுக்கு ஒரே மகள். பெயர் நளினி. இவருக்கு 1981-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் பெயர் சிவப்பிரகாஷ். துபாயில் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் துணைத் தலைவராக இருக்கிறார்.

    நளினிக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் பெயர் வஷின்யா. மகன் பெயர் ராகுல். இருவரும் கனடாவில் படித்து வருகிறார்கள்.

    துபாயில் கணவருடன் வசித்து வரும் நளினி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சென்னை வந்து இங்குள்ள தனது தாயாருடைய சொத்துக்களை கவனித்துச் செல்கிறார். இவற்றை ஈ.வி.சரோஜாவின் தம்பி ஈ.வி.ராஜன் பொறுப்பேற்று கவனித்து

    வருகிறார்.கடந்த வாரம் சென்னை வந்த நளினி தன் தாயார் ஈ.வி.சரோஜாவின் நினைவுகளை "தினத்தந்தி'' நிருபரிடம் பகிர்ந்து

    கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:- "எனது தாயார் சினிமாவில் நடிப்பதைவிட,நடனம் ஆடுவதையே அதிகம் விரும்புவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களில் நடித்தார். மொத்தம் 50 அல்லது 60 படங்கள் இருக்கும். பெரும்பாலான படங்களில் நடனம் மட்டுமே ஆடியுள்ளார்.

    கதாநாயகியாக நடித்த படங்கள் வெகு சிலவே. சந்திரபாபுவுடன் காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார்.

    எனது தாயார் சினிமாவில் நடிப்பதில் என் தந்தைக்கு விருப்பம் இல்லை. அதனால் எனது தாயார் 26 வயதிலேயே சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, குடும்பத் தலைவி ஆகிவிட்டார்.

    அவர் காலத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் எல்லாம் பிற்காலத்தில் குணச்சித்திர நடிகைகளோ அல்லது அம்மா வேடம் போட்டோ நடிக்க வந்துவிட்டார்கள். ஆனால் என் தாயார் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், மீண்டும் நடிக்கவே இல்லை.

    அவருக்கு நடனத்தின் மீதே அதிக நாட்டம் இருந்ததால், "மனோன்மணியம்'' கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து அந்த நடன நிகழ்ச்சியை இந்தியாவில் உள்ள ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் நடத்தி இருக்கிறார்.

    என் அம்மாவுக்கு குடும்பம்தான் முக்கியம். மிகவும் இளகிய மனம் படைத்தவர். யார் வந்து உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவும் குணம் படைத்தவர். படிப்பதற்கு யாராவது உதவி கேட்டால், தன்னிடம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது படிக்க உதவுவார்.

    எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள் சென்னையிலும் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் பலருக்கு என் அம்மா செய்த உதவிதான் காரணம்.

    இவ்வளவு இளகிய மனம் படைத்தவர், என் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு டீச்சரைப்போல் என்னை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள். அப்போது எனக்கு அது கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்போது அதையெல்லாம் நினைக்கும்போது என் மீது அம்மா தன் உள்ளத்தில் வைத்திருந்த அன்பை உணர முடிகிறது.

    எனக்கு சிறு வயதிலேயே நடனம் கற்றுக் கொடுத்தார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் ஆடினேன். பல பேர் என்னை திரைப்படத்தில் நடிக்க வைக்க, எனது பெற்றோர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இந்த விஷயம் எனக்கு திருமணம் ஆன பிறகு, என் பெற்றோர்கள் என்னிடம் சொன்ன பிறகுதான் தெரிந்தது.

    என்னை கண்ணுக்குள் வைத்து வளர்த்து ஆளாக்கி ஒரு நல்லவரிடம் ஒப்படைத்த எனது பெற்றோர்கள் என் தெய்வங்கள்.

    எனது தாயார் ஊரான திருவாரூரை அடுத்த எண்கண் கிராமத்தில் ஈ.வி.சரோஜா கல்வி நிலையம் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தை எனது தாயார் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.

    அந்தப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. அதை எனது சொந்த செலவில் உயர்நிலைப்பள்ளியாக ஆக்குவதே எனது தாயாருக்கு நான் செய்யும் நன்றியாகும்.

    என்னுடைய 25-ம் ஆண்டு திருமண வெள்ளி விழாவில் கலந்து கொண்ட எனது தாயார் அதற்கு பிறகு ஒரு வாரமே உயிருடன் இருந்தார்கள். 2006 நவம்பர் 3-ந்தேதி காலமாகிவிட்டார்கள். அதை நினைக்கும்போது என் இதயமே வெடித்து விடும் போல் உள்ளது.

    துபாயிலிருந்து இங்கு வந்து வீட்டிற்குள் நுழைந்து, வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது என் தாயாரின் நினைவுதான் எனக்கு வரும்.

    அந்த அளவிற்கு என் தாயாரின் இழப்பு என்னை பாதித்துள்ளது.''

    இவ்வாறு நளினி கூறினார்.

    ஈ.வி.சரோஜாவிற்கு, உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் தன்னுடைய மகள், மருமகன், பேரக்குழந்தைகளுடன் உலகின் பெரும்பா லான நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

    ஈ.வி.சரோஜா, 1974-ம் ஆண்டு "கலைமாமணி'' விருது பெற்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய கணவர் ராமண்ணாவிற்கும், அப்போதுதான் "கலைமாமணி'' விருது கிடைத்தது. கணவன் - மனைவி இருவரும் ஒரே நேரத்தில் "கலைமாமணி'' விருதை, அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கையில் பெற்றார்கள்.

    முத்தமிழ்ப் பேரவை சார்பில் "நாட்டிய செல்வி'' என்ற பட்டம் ஈ.வி.சரோஜாவுக்கு வழங்கப்பட்டது.

    2002-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் "எம்.ஜி.ஆர். விருதை'' அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஈ.வி.சரோஜாவிற்கு வழங்கினார்.

    மு.க.அழகிரியின் பேத்தியின் நடன அரங்கேற்றம் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிதான் ஈ.வி.சரோஜா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதில் கலைஞர் கருணாநிதி பேசும்போது, "நடனத்தில் மிகச்சிறந்த மேதையான ஈ.வி.சரோஜா போன்றவர்கள் வந்து என் கொள்ளுப்பேத்தியை வாழ்த்தியதை நான் பெருமையாக கருதுகிறேன்'' என்றார்.
    Next Story
    ×