search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சவுதி அரேபியாவில் எலெக்ட்ரிக் கார் பந்தயம்
    X

    சவுதி அரேபியாவில் எலெக்ட்ரிக் கார் பந்தயம்

    சவுதி அரேபியாவில் முதல் முறையாக எலெக்ட்ரிக் கார் பந்தயம் நடைபெற இருக்கிறது. 2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான எலெக்ட்ரிக் கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் ரியாத்தில் நடைபெறுகிறது. #ElectricCar



    கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. உலகின் பெருமளவிலான பெட்ரோல், டீசல் தேவையைப் பூர்த்தி செய்பவையே வளைகுடா நாடுகள்தான். அப்படிப்பட்ட சூழலில் சவுதி அரேபியாவிலேயே எலெக்ட்ரிக் கார் பந்தயம் முதல் முறையாக நடத்தப்பட உள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான எலெக்ட்ரிக் கார் பந்தயத்தின் முதல் சுற்று போட்டிகள் ரியாத்தில் உள்ள அட் ரியாத் எனுமிடத்தில் நடைபெற உள்ளது. இப்பகுதியானது தலைநகரை ஒட்டிய புறநகர் பகுதியாகும். இங்குதான் எலெக்ட்ரிக் கார் பந்தய போட்டிகளை நடத்த சவுதி அரேபியா அரசருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 

    இதற்காக அரச குடும்பத்தினர் நடத்தும் ஜெனரல் ஸ்போர்ட்ஸ் அத்தாரிடி மற்றும் தேசிய மோட்டார் சம்மேளனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால், அத்தியாவசியமான காரணமும் ஒளிந்திருக்கிறது. 

    அடுத்த 50 ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், அதற்கு மாற்றான எரிபொருளுக்கு பழக்கப்படுத்தி வருகிறார்கள். அதில் மின்சார வாகனங்களே முன்னிலை பெறுகின்றன. மின்சக்தியில் இயங்கும் கார்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என்பதால் மின்சார கார்களும், பஸ்களும் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.



    குறிப்பாக சவுதி அரேபியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் பார்முலா 1 பந்தய கார்களையும், எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி பந்தயம் நடத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இத்தகைய எலெக்ட்ரிக் கார் பந்தயங்களே வருங்காலத்தை ஆட்சி செய்ய இருக்கின்றன என்பதை உணர்ந்தே இந்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருவதாக சவுதி இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி அல் பைசல் அல் சவுத் தெரிவித்துள்ளார்.

    இ-ரேஸ் சாம்பியன் போட்டிக்கான முதல் சுற்று ரியாத்தில் நடத்துவதன் மூலம் இதேபோன்று அடுத்தடுத்த போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. எலெக்ட்ரிக் கார் பந்தயம் போன்று பிற விளையாட்டு போட்டிகளும் சவுதி அரேபியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன.

    எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜாகுவார், ரெனால்ட், ஆடி, சிட்ரோயன், பி.எம்.டபிள்யூ., மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனங்களின் பேட்டரி ரேஸ் கார்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளன. இது பந்தய ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×