
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தனது புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் ரெனால்ட் குவிட் மாடலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் மாருதி சுசுகி எஸ்.யு.வி. போன்ற வடிவமைப்பு கொண்ட காம்பாக்ட் கார் மாடலின் டீசரை வெளியிட்டுள்ளது. புதிய மாடலில் அதிக இடவசதி மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபியூச்சர்-எஸ் என்ற பெயரில் மாருதி சுசுகி புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய காம்பாக்ட் எஸ்.யு.வி. பிரபலமான விடாரா பிரெஸ்ஸா மாடலின் கீழ் இருக்கும், அந்த வகையில் ஆட்டோமொபைல் சந்தை வளர்ந்து வருவதாக நாங்கள் உணர்கிறோம் என மாருதி சுசுகி நிறுவன நிர்வாக இயக்குனர் சி.வி. ராமன் தெரிவித்துள்ளார். வடிவமைப்பு மற்றும் சமவிகித பாகங்களை பொருத்த வரை இந்த மாடல் புதிய சோதனை போன்று அமைகிறது. காம்பாக்ட் பிரிவில் இது மிகப்பெரும் சவால் ஆகும்.

இந்தியாவில் ரெனால்ட் குவிட் சிறிய கார்களுக்கான பிரிவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உள்புறம் அதிகளவு அம்சங்கள் மற்றும் போட்டியளிக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்ட்டிருப்பதே இத்தகைய வரவேற்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இத்துடன் எஸ்.யு.வி. போன்ற வடிவமைப்பும் இந்த வரவேற்புக்கு காரணமாக கூறப்படுகிறது.
மாருதி சுசுகி வெளியிட்டிருக்கும் டீசரில் புதிய கார் சிறிய ரக பிரெஸ்ஸா போன்ற வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் புதிய கார் மாருதி ஆல்டோவிற்கு மாற்றாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மாருதி ஆல்டோ அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.
புதிய காரினை மாருதி சுசுகி நிறுவனம் 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என்றும் இந்த கார் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கும் போது இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்ய முடியும் என்பதோடு சிறப்பான செயல்திறன் மற்றும் எரிபொருள் சேமிப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த முடியும்.