search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும்
    • இந்நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது

    சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான `Fat Dong Lai' தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

    இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும். மேலும், 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுவதால் அப்போதும் ஊழியர்களுக்கு விடுமுறை தான்.

    இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 7,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 80,878) ஆகும்.

    "எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நாட்கள் உள்ளன, எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள். இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது" என்று நிறுவனர் யூ டோங் லாய் கூறியுள்ளார்.

    2021 ஆம் ஆண்டு சீனாவில் பணியிட கவலை குறித்த கணக்கெடுப்பின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும்.

    உக்ரைன் மீது ரஷியா மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது உக்ரைனில் உள்ள கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையம் மீதான தாக்குதலை உக்ரைனால் எதிர்கொள்ள முடியாமல் போனது.

    நேற்று 8 மாடி கட்டடம் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இத்தாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது உக்ரைன்- ரஷியா போர், இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் ஈரான் தாக்குதல் ஆகியவை குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் ஜி7 நாடுகளில் வெறியுறவுத்துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது "உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும். ரஷியாவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க பேட்ரியாட் ஏர் பாதுகாப்பு ஏவுகனை சிஸ்டம்ஸ் இல்லை என்றால், உக்ரைனில் உள்ள மின்சார் சிஸ்டங்கள் அழிக்கப்படும். எந்தவொரு நாடும் வீடுகளில், தொழிற்சாலைகளில், போரின் முன்னணி களத்தில் மின்சாரம் இல்லாமல் சண்டையிட முடியாது" என்றார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனியோ டஜானி "உக்ரைன் தோல்வியடைந்தால் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் புதின் அமரமாட்டார்" என்றார். மேலும், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைக்கு அழைப்பு விடுத்தார்.

    • ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
    • வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    சீனாவின் நான்ஜிங் வடக்கு ரெயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    மரக்கூரைகள் மற்றும் ஜன்னல் வடிவங்கள் போன்ற பாரம்பரிய சீன கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு நவீனத்துவம் கலந்து இந்த ரெயில் நிலைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள இந்த ரெயில் நிலையம் சீன கட்டிடக்கலையின் தனித்துவத்தை பின்பற்றும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். பிளம் மலர்களால் ஈர்க்கப்பட்டு இந்த ரெயில் நிலையத்தின் வடிவமைப்பு இருப்பதாக சிலர் பதிவிட்டனர். அதே நேரம் இந்த ரெயில் நிலையத்தின் தோற்றம் ராட்சத சானிட்டரி பேட் போல தெரிகிறது. இந்த வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
    • யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் மொன்டானா நகரில் சர்க்கஸ் யானை ஒன்று சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பரபரப்பான சாலையில் நாலாபுறமும் ஓடிய யானையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஜோடான் வேர்ல்ட் சர்க்கசில் இருந்து இந்த யானை திடீரென வெளியேறி உள்ளது. பயோலா என்று அழைக்கப்பட்ட இந்த யானையை குளிப்பாட்டி கொண்டிருந்த போது திடீரென கார் சத்தத்தால் அச்சமடைந்து சர்க்கசில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளது. பின்னர் ஒரு வாலிபர் கையில் தடியை ஏந்திக் கொண்டு யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக போராடிய காட்சிகளும் வீடியோவில் இருந்தது.

    ஆனாலும் அந்த யானையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலின் மேற்கே கலிலீ பகுதியில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் சமூகநல கூடத்தின் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையே இஸ்ரேலின் மேற்கே கலிலீ பகுதியில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் சமூகநல கூடத்தின் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் எல்லையையொட்டி உள்ள லெபனான் நாட்டின் ஐடா ஆஷ் ஷாப் கிராமத்தில் வளாகம் ஒன்றிற்குள் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    • தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஆனிஆஸ்போர்ன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    • வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பழச்சாறுகள் குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், 40 நாட்களாக பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அந்த அனுபவம் அற்புதமாக இருந்தது.

    உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்தேன். இந்த 'மோமோ டயட்' தனது நீண்ட கால உணவு பழக்கத்தோடு ஒத்துப்போகிறது என்று விளக்கி உள்ளார். அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பழங்களை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.


    • அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சீன ஆதரவாளரான முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    மாலே:

    மாலத்தீவு அதிபராக முகமது முய்சு உள்ளார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    முகமது முய்சு கடந்த 2018-ம் ஆண்டு ஊழலில் ஈடுபட்டதாக, நிதி புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவு காவல்துறை தயாரித்ததாக கூறப்படும் அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி முறைகேடுகளில் 10 முக்கியமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அரசியல் ரீதியான நபர்களுடன் தொடர்பு, மோசடி, நிதி ஆதாரத்தை மறைக்க கார்ப்பரேட் நிறுவனங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாலத்தீவில் வருகிற 21-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி மற்றும் மக்கள் தேசிய முன்னணி வலியுறுத்தி உள்ளன.

    ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அதிபர் முகமது முய்சு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

    கடந்த 5 ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியில் இருந்தன. நான் தவறு செய்திருந்தால் அப்போதே வெளியாகி இருக்கும். என் மீது எந்த தவறையும் அவர்களால் கூற முடியாது. முன்பு மேயர் மற்றும் அதிபர் தேர்தலின் போதும் இதே குற்றச்சாட்டை கிளப்பினர். இதை எவ்வளவு காலத்திற்கு பேசினாலும், என் மீது பழி சுமத்த உங்களால் முடியாது என்றார்.

    சீன ஆதரவாளரான முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.

    • எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
    • சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலையானது நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்தது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

    ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. எரிமலை வெடிப்பையடுத்து சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2,378 அடி உயரமுள்ள ருவாங் எரிமலையில் இருந்து குறைந்தது 6 கி.மீ. தொலைவில் இருக்குமாறு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

    மேலும் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலையின் வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது. அதன்பின் மலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து 430 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் போராட்டம்.
    • அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்.

    கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

    இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன், கூகுள் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் என்கிற இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

    இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்ற ஊழியர்களை வேலை செய்யவிடாமல் இடையூறு செய்வது, அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுப்பது நிறுவன கொள்கைகளை மீறும் செயலாகும். இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    அதனால், போராட்டம் செய்தவர்களை அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. அதனால், விசாரணைக்கு பிறகு 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்" என்றார்.

    • அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி, கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார்.
    • ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.

    நேபிடாவ்:

    தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தவர் ஆங் சான் சூகி. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அவர் கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார். இருப்பினும் கிளர்ச்சியாளர்களால் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. இதனிடையே ஆங் சான் சூகிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் உள்பட 3300 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், கஜகஸ்தானிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.
    • கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 66 பேர் பலியானதாக பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துங்குவா மாகாணத்தில் கனமழை, கட்டிட இடிபாடு, மின்னல் விழுந்து சாவு உள்பட 46 பேர் இறந்தனர். கிழக்கு பஞ்சாபில் 21 பேர், பலூசிஸ்தானில் 10 பேர் உள்பட 80 பேர் இறந்தனர்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவே பாகிஸ்தானில் கனமழை வெளுத்து வாங்குவதாகவும் பலூசிஸ்தானில் இயல்பை விட 256 சதவீதம் கனமழை பதிவாகி உள்ளதாகவும், பாகிஸ்தான் முழுவதும் 61 சதவீதம் இயல்பை மீறி மழை பெய்து உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், கஜகஸ்தானிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஊருக்குள் வெள்ளம் புகுந்து 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் செத்தன. 63 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சேதமாகின. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் கனமழை காரணமாக 60 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டிலும் கனமழை பெய்ததால் ஆற்றோரம் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் இருந்து 2 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    ×