search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • மோடியின் அலை வீசவில்லை. அதற்கு அவருடைய பொய்தான் காரணம்.
    • 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

    தென்மாநிலங்களில் கடந்த முறையை விட தற்போது அதிகமான இடங்களை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா தீவிர தேர்தல் பணி மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு தென்மாநிலங்களில் கர்காடகாவில் உள்ள 28 இடங்களில் 26 இடங்களிலும், தெலுங்கானாவில் 17 இடங்களில் நான்கிலும் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த முறை இதை தாண்ட வேண்டுமென்றால் கர்நாடகா மாநிலத்தில் அதே 26 இடங்களை பிடிக்க வேண்டும். ஆனால், தற்போது மாநில கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி கடும் சவாலாக விளங்குகிறது. இதனால் பா.ஜனதா 26 இடங்களை கைப்பற்றுமா? என்பதில் சந்தேகம் எழுகிறது.

    இதற்கிடையே மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அது தங்களுக்கு சாதகமாக அமையும் என நினைக்கிறது.

    இந்த நிலையில்தான் கர்நாடகா மாநிலத்தில் மோடி அலை வீசவில்லை, காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "இங்கே மோடி அலை இல்லை. ஏனென்றால் அவருடைய பொய்தான் அதற்கு காரணம். அவருடைய பொய்களை மக்கள் உணர்ந்து விட்டனர். எனவே நாடு முழுவதும் பிரதமர் மோடி வீசவில்லை. எதாவது அலை வீசுகிறது என்றால் அது எங்களுடைய உத்தரவாத அலையாகும்.

    2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 130 புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 2019 முதல் 2023 வரை ஆட்சியில் இருந்த பா.ஜனதா எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை" என்றார்.

    • ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று பஜ்ரங் தள் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

    டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ராமரின் படம் இருக்கும் பேப்பர் தட்டில், பிரியாணி பரிமாறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

    இதை அறிந்த உள்ளூர் மக்களும் பஜ்ரங் தள் உறுப்பினர்களும் கடையைச் சுற்றி, கும்பலாக திரண்டு ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
    • ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலம் சக்தி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான அரசு மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கே வந்துள்ளேன். மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர். கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது.

    டிரோன் புரட்சி விவசாயத்துறையில் மாற்றத்தை கொண்டு வரும். டிரோன்களை இயக்கும் பயிற்சிகளை பெண்கள் பெறுவார்கள். பழங்குடியின பெண் நாட்டின் ஜனாதிபதியாகிய போது, காங்கிரஸ் அவரை இழிவுப்படுத்தியது. நாட்டின் பெரும்பகுதியில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை காஙகிரஸ் அம்பேத்கரின் அரசமைப்பை புறக்கணிக்கும்.

    மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் மோடியின் பாதுகாப்புக் கவசமாக உள்ளனர். யாராலும் அரசமைப்பை மாற்ற முடியாது. அம்பேத்கர் வந்து வலியுறுத்தினாலும் கூட அது நடக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.
    • வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை?

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா தெற்கு தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அமித் ஷா, "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை வழியே ஊடுருவல் தடையின்றி தொடர்கிறது. முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார். அதன் மூலம் இங்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை பெறுவதை அவர் தடுக்கிறார்.

    வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஊடுருவலையும் ஊழலையும் நிறுத்த விரும்பினால், நீங்கள் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

    அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF), வங்கதேச - இந்திய எல்லையை கண்காணிக்கும் நிலையில் அவர் மேற்கு வங்காள மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 26 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 23 இடங்களிலும், அதன் இந்திய கூட்டணிக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி பரூச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இப்பட்டியலில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    • ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பதஞ்சலி நிறுவனம் 67 பத்திரிகைகளில் பகிரங்க மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்.
    • பதஞ்சலி நிறுவனம் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அதே அளவில் தான் மன்னிப்பு கோரப்பட்டதா?

    புதுடெல்லி:

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இதற்கிடையே, ஆச்சார்யா பால்கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

    ஆனால், அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது.

    அதன்பின் ஏப்ரல் 16-ம் தேதி, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆசார்யா பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்? நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2018 முதல் தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பிராமண பாத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    குழந்தைகள், முதியவர்களுக்கான உணவுகள் குறித்து தவறான விளம்பரங்கள் வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொய் விளம்பரங்களில் எங்கே தவறு நடந்தது? - அனைத்து மாநில அரசுகளையும் வழக்கில் இணைக்கவும் மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து, ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பதஞ்சலி நிறுவனம் 61 பத்திரிகைகளில் பகிரங்க மன்னிப்பு கேட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    பதஞ்சலி நிறுவனம் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அதே அளவில் தான் மன்னிப்பு கோரப்பட்டதா? மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    செய்தித் தாள்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் மன்னிப்புக் கேட்டு அதன் துண்டறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 30-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

    • காங்கிரஸ் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது.
    • இதன் அர்த்தம், யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21-ந்தேதி) முஸ்லிம்களுக்கு எதிராக ஊடுருவியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக புகார் கிடைக்கப்பெற்றோம். புகார் பரிசீலனையில் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக பிரதமர் தனது பேச்சியில் கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு அதிகாரத்தில் இருந்தபோது, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது.
    • மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திருடனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா?

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் மோடியின் இந்த பேச்சு தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி கொடுத்துள்ளார். அதில்,

    மல்லிப்பூவில் இருந்து எப்படி அதன் மணம் வெளியே வருமோ அதே போல் தான் மன்னரின் (மோடி ) வாயிலிருந்து அவரின் பேச்சிலிருந்து அவரது அசிங்கம் வெளியே வருகிறது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை முஸ்லிம்கள் என பேசும் போதே மோடியின் அஜெண்டா நமக்கு தெரிகிறது.

    இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது. ஆனால் உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் அது வேகும்.

    ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம் என்று பேசுகிற மன்னருக்கு 2 நாக்குகள் உள்ளன.

    ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொன்று பேசி கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம். இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

    மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திருடனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா? ராமரின் படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள், சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அவர்கள் (தேர்தல் ஆணையம்) வாங்கப்பட்டுள்ளார்கள்.

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் சொல்வது தான் நடக்கும். எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது, யாரும் கேள்வி கேட்கக்கூடாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம், தேர்தலே கிடையாது" என்று அவர் கூறியுள்ளார்.

    • 2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்த நிலையில்,
    • 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 45,774 ஆக அதிகரித்தது.

    பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அதிகமானோர் வரத் தொடங்கினர்.

    2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்த நிலையில் 2022-ம் ஆண்டு 45774 ஆக உயர்ந்தது.

    இதை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ரிஷி சுனக் இதில் உறுதியாக இருந்தார்.

    பணம் பெற்றுக் கொண்டு மக்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்ததாலும், இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புதற்கும் இங்கிலாந்து அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது. அதனால் கடந்த வருடம் இங்கிலாந்துக்கு வருபோரின் எண்ணிக்கை 29,437 என குறைந்தது.

    இந்த நிலையில் குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவேண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று காலை, வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வரும் நபரை கட்டுப்படுத்தும் வகையிலான மசோதா தடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுவரை பாராளுமன்றம் நடைபெறும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் இன்று இந்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம் இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் (ஜூன்) சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் ருவேண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அரசாங்கம் ஏற்கனவே நாடுகடத்தல் விமானங்களுக்கு வாடக விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளது. மேலும் வழக்கறிஞர்களை பணியமர்த்தியுள்ளது. மேல்முறையீடுகளை கையாள நீதிமன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

    • கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது
    • இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது

    தமிழ்நாடு உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.

    இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கண்ணில் பிளாஸ்திரியுடன் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் பாஜக தொண்டர் சனல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, நான் தான் தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் காவல்துறை சனலுக்கு ஜாமீன் வழங்கியது.

    • சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது.
    • சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், நீரிழிவு நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    மேலும் கெஜ்ரிவாலின் கடுமையான நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தினமும் 15 நிமிடங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கோர்ட்டு நிராகரித்தது.

    அதேநேரம் கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா? என்பதை ஆய்வு செய்யவும், அவரது பிற உடல்நல பிரச்சினைகளை பரிசோதிக்கவும் மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 320-ஐ தாண்டியதால் நேற்று இரவு அவருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    சிறைக்கு சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

    இது குறித்து ஆம்ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கலில் தள்ளுவதற்காக, சிறையில் திட்டமிட்ட சதி மூலம் அவருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகு, எய்ம்ஸ் நிபுணர் கெஜ்ரிவாலை பரிசோதித்ததும் அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. இதன்மூலம் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசின் எண்ணம் அம்பலமாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உங்களின் சொத்துக்களை பறித்து தனி நபர்களிடம் அளிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை முன் வைத்தேன்.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.

    ஜெய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் டோங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

    ஒற்றுமையே ராஜஸ்தானின் செல்வம். நாம் பிளவுபடும் போது எல்லாம் நாட்டின் எதிரிகள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான, நேர்மையான அரசு என்ன செய்ய முடியும் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.

    2014-ல் மோடிக்கு சேவை செய்ய நீங்கள் வாய்ப்பு கொடுத்த போது யாரும் நினைத்து கூட பார்க்காத முடிவுகளை நாடு எடுத்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது. அனுமன் மந்திரம் கேட்பது காங்கிரஸ் ஆட்சியில் குற்றமாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் அனுமன் மந்திரம் கேட்ட கடைக்காரர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    2 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை நாட்டின் முன் வைத்தேன். நான் கூறிய உண்மைகளை கேட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன.

    உங்களின் சொத்துக்களை பறித்து தனி நபர்களிடம் அளிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை முன் வைத்தேன்.

    காங்கிரசை அம்பலப்படுத்தியதால் என்னை அவமதிக்கிறார்கள். உண்மையை ஏன் மறைக்கிறார்கள். நீங்களே கொள்கைகளை உருவாக்கி விட்டு தற்போது அதை ஏற்க பயப்படுவது ஏன்? தைரியம் இருந்தால் உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நான் தயார்.

    நாட்டின் அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் நாடகமாடியுள்ளது. அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது உரையில் நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறி இருந்தார்.

    காங்கிரசின் சிந்தனை எப்போதுமே சமாதானம் மற்றும் வாக்கு வங்கி அரசியலாகவே இருந்து வருகிறது. 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவில் எஸ்.சி. எஸ்.டி. இட ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சிப்பதுதான் அதன் முதல் பணியாக இருந்தது.

    இது ஒரு முன்னோடி திட்டமாகும். இதை நாடு முழுவதும் முயற்சி செய்ய காங்கிரஸ் விரும்பியது. 2004 மற்றும் 2010-க்கு இடையில் ஆந்திராவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் 4 முறை முயற்சி செய்தது.

    ஆனாலும் சட்ட தடைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் விழிப்புணர்வு காரணமாக அவர்களால் அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.

    இவை அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படை தன்மைக்கு எதிரானது என்பதை அறிந்துள்ள காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுடைய சொத்துக்களை பகிர்ந்து அளித்து விடும் என்று முஸ்லிம்கள் குறித்து பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் தான் சொன்னது எல்லாம் உண்மை என்று மீண்டும் காங்கிரஸ் மீது மோடி குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×