search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்.
    • ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது.

    மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் தேர்தல் பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

    நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் அம்ரோஹா தொகுதியின் பாஜக வேட்பாளர் கன்வர் சிங் தன்வாரை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) உள்ளவர்கள் பசியுடன் போராடும் போது, இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்" என்று கூறினார்.

    மேலும், " 23- 24 கோடி மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான், 1947-ல் பிரிவினைக்குப் பிறகு உருவானது. இன்று பட்டினியால் வாடுகிறது. இதுவும் ஒரு உதாரணம்.

    பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

    ஒரு பக்கம் பாகிஸ்தான் இவ்வாறு உள்ளது. மறுபுறம், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்கிற வாக்குறுதி.

    ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது- 'மீண்டும் மோடி அரசு' என்று.." என்றார்.

    லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் மேற்கு உத்தரபிரதேசத்தில் எட்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், பேரணியில் ஆதித்யநாத் உரையாற்றினார். அம்ரோஹாவில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடக்கிறது.

    • நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவீதம் வாக்குப்பதிவு.

    18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    அதாவது, தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கார் (1) என 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.

    நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

    நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டுவதால், காலையிலேயே அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் நண்பகல் மற்றும் மதிய நேரத்தில் பல இடங்களில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்டது. மாலையில் மீண்டும் வேகமெடுத்தது.

    இவ்வாறு விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதேநேரம் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

    இந்த முதற்கட்ட தேர்தலில் கடைசியாக கிடைத்த தகவலின்படி 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவீதம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 77.57 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    அதன்படி, நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    • சிக்கிமில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
    • சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடக்கிறது.

    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இம்மாநிலத்தில் 4.65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சிக்கிமில் இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், சிக்கிமில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதியும், பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.

    • இவர்கள் உள்ளூர் கன்னட மக்கள் என்று தெரிவித்த அவர்கள்,
    • தொடர்ந்து நாங்கள் கன்னடத்தில் பேசியது, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னட நடிகை ஹர்ஷிகா பூனச்சா. இவர் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள பிரபலமான இடத்தில் அமைந்துள்ள ரெஸ்டாரன்டில் இரவு உணவு முடித்துவிட்டு காரில் அமர முயன்றபோது, மோசமான வார்த்தைகள் மூலம் அவதூறு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக நடிகை ஹர்ஷிகா பூனச்சா கூறுகையில் "இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஃப்ரேசர் நகர்ப்பகுதிக்கு அருகில் உள்ள புலிகேஷி நகரின் மஸ்ஜித் சாலையில் உள்ள கரமா என்ற ரெஸ்டாரன்டில் நான் எனது குடும்பத்தினருடன் சாப்பிட சென்றிருந்தேன்.

    நாங்கள் காரில் ஏரிய பின்னர் காரை பார்க்கிங் பக்கத்தில் இருந்து வெளியே எடுத்தபோது, திடீரென்று இருவர் டிரைவர் பக்கம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களது கார் கொஞ்சம் பெரியதாக இருந்ததால், சட்டென்று மூவ் ஆனதால் அவர்கள் மீது உரசியிருக்கிறது.

    நாங்கள் காரை சற்று நகர்த்தியபோது, அவர்கள் இருவரும் அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தினர். மேலும், எனது கணவரின் முகத்தில் தாக்க முயன்றனர். இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனக் கூறினர். என்னுடைய கணவர் மிகவும் அமைதியாக இருந்தார்.

    அப்போது திடீரென 30-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் குவிந்து எனது கணவரின் செயினை பறிக்க முயன்றனர். சற்று நேரத்திற்குள் அவர்களை எங்களுடைய காரை சேதப்படுத்தி, எங்களை தாக்க முயன்றனர். இவர்கள் உள்ளூர் கன்னட மக்கள் என்று தெரிவித்த அவர்கள், தொடர்ந்து நாங்கள் கன்னடத்தில் பேசியது, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரில் உள்ள உள்ளூர்வாசிகளான நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? நாம் பாகிஸ்தானில் வசிக்கிறோமா? ஆப்கானிஸ்தானில் வசிக்கிறோமா? என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    • அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.
    • நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

    திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள விடாமல் தடுத்து கொலை செய்ய பா.ஜனதா மற்றும் அமலாக்கத்துறை சதி திட்டம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

    பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷஜியா இல்மி டெல்லி மாநில கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஷஜியா இல்மி கூறியதாவது:-

    அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம். நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

    எந்த அமைப்பும் அல்லது ஜெயில் நிர்வாகமும் அவரது உடல்நலத்தை கெடுத்து, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த ஏன் விரும்பனும்?. யாரும் இதுபற்றி ஏன் யோசிக்கனும்?.

    இதுபோன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இது போன்ற உணர்வுப்பூர்வமான கருத்துகளை ஆம் ஆத்மி கட்சி தவிர்க்க வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்ள அதிகாரிகள் மறுப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் எந்த சிறையிலும் இதைச் செய்ய மாட்டார்கள். நாம் மிகவும் பொறுப்புள்ள ஜனநாயக நாடு. முதலமைச்சர் அல்லது யாராக இருந்தாலும் மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு ஷஜியா இல்மி தெரிவித்துள்ளார்.

    • கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
    • டெல் அவிவ் நகருக்கான விமான சேவை வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கி இருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

    ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது.
    • இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது. அந்த இடங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது பா.ஜனதா பொய்களை அள்ளி வீசியது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சியை போன்று அதிக அளவில் பொய் சொல்ல வேறு கட்சிகள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.

    மேற்கு திசையில் இருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இந்த முறை பா.ஜனதாவை முற்றிலும் அகற்றிவிடுவது போல் உணர்த்துகிறது. இது பா.ஜனதாவின் முதல் நாளின் முதல் ஷோ பிளாப் போன்று உள்ளது.

    பா.ஜனதா திரும்ப திரும்ப சொல்லுவதை பொதுமக்கள் யாரும் கேட்க விரும்பவில்லை. தற்போது வரை அவர்கள் புனைந்துள்ள கதை, யாரும் கேட்க விரும்பாத வகையில் உள்ளது.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • ஈவுத்தொகை வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு.

    இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரக் குழந்தை எக்கிராஹா ரோஹன் தனது ஐந்தாவது மாதத்திலேயே ரூ. 4.2 கோடியை ஈட்டியுள்ளது.

    கடந்த மாதம் நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை தனது பேரக் குழந்தைக்கு பரிசாக கொடுத்தார். இந்த பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ. 240 கோடி ஆகும். சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    அப்போது முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், 2024 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக ரூ. 8 வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

    இந்த முடிவின் காரணமாக இன்போசிஸ் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், எக்கிரஹா ரோஹனின் பங்குகளின் அடிப்படையில் அவருக்கு ரூ. 4.2 கோடி வரை ஈவுத்தொகை கிடைக்கும். 

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், மாலை 5 மணிக்கு 59.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 53.56 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 57.54 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 63.25 சதவீதமும், மகாராஷ்டிராவில் 54.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
    • அவர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றார் மம்தா பானர்ஜி.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பா.ஜ.க.வின் ரகசிய பங்காளிகள்.

    மாநில போலீசாரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்?

    மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடாது என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியா?

    மத்திய அரசு திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

    இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் கூட அதன் பலனைப் பெறமுடியாது.

    ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது.

    நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அவர்கள் (பா.ஜ.க) உங்கள் ஆதார் அட்டையையும், குடியுரிமையையும் பறிப்பார்கள். நான் விடமாட்டேன் என தெரிவித்தார்.

    • வாக்கு இயந்திரம் வாகனத்துடன் படகில் எடுத்துச் சென்றபோது திடீரென வெள்ளம் அதிகரித்தது.
    • படகு கவிழ்ந்த நிலையில் வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்தியா முழுவதும் இன்று 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் லகிம்பூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

    சதியா என்ற இடத்தில் உள்ள அமர்பூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்கு இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் மாற்றும் மெஷின் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த ஊருக்கு வரவேண்டுமென்றால் ஆற்றைக்கடந்து வரவேண்டும். அதிகாரிகள் வாக்கு இயந்திரத்திடன் சொகுசு வாகனத்தில் ஆற்றங்கரையோரத்திற்கு வந்தனர். அந்த வாகனத்தை படகு ஒன்று ஏற்றிச் சென்றது. ஆற்றில் திடீரென வெள்ளம் அதிகரிக்க படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த வாகனமும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

    உடனடியாக அதிகாரிகள் மற்றும் வாக்கு இயந்திரம் பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் வாக்கு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது. அதிகாரிகள் வாகனத்துடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
    • வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின.

    இம்பால்:

    நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

    21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால், தேர்தல் அதிகாரி உடனே வாக்குப்பதிவை நிறுத்தினார். கிழக்கு இம்பாலில் 2 வாக்குச்சாவடியும், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடியும் என மொத்தம் 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின. பிற்பகல் 3 மணி அவரை அங்கு 63 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணிப்பூரில் காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 67.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும், மிரட்டல் சம்பவமும் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    60 சட்டமன்ற இடங்களில் 32 இடங்களை கொண்ட இன்னர் மணிப்பூர் என அழைக்கப்படும் இடத்தில் 71.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அவுட்டர் மணிப்பூர் பகுதியான 28 சட்டமன்ற இடங்களில் 15-ல் 61.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    நாகா மற்றும் குகி மக்கள் வசித்து வரும் சண்டேல் பகுதியில் 85.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    ×