search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஆனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார்.
    • குலாம் நபி ஆசாத் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின், தனிக்கட்சி தொடங்கினார். அவர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் அனந்த்னாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் போட்டியிடவில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக சலீம் பர்ரே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிபி கட்சி தலைவர் மெஹபூபா முப்தி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார்.

    "சில விசயங்களை குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார். அதன்பின் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என அக்கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் ஆசாத் கட்சி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் தைரியம் இருந்தால் தன்னை எதிர்த்து பாரமுல்லா தொகுதியில் போட்டியிடட்டும் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

    அதற்கு உமர் அப்துல்லாவை ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா பயணி என அழைத்தார். அவர் கோடைகாலத்தை லண்டனிலும், குளிர்காலத்தை வெப்பமான இடங்களிலும் கழிக்கிறார் என விமர்சித்திருந்தார்.

    • மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் கூச்பெஹர் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறவேண்டாம் என தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவுறுத்தியது.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

    மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 3 தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    இதற்கிடையே, மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் நாளை கூச் பெஹர் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கவர்னரின் இந்தப் பயணம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. நன்னடத்தை விதிகள் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, கவர்னருக்கும் பொருந்தும் என்பதால் கவர்னர் இதனை மீறக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    • உயிரிழந்த 10 பேரும் காரில் பயணம் செய்தவர்கள் ஆவார்கள்.
    • விபத்து காரணமாக 93 கிலோ மீட்டர் நீள எக்ஸ்பிரஸ்வே சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குஜராத் மாநிலம் வதோதரா- அகமதாபாத் எக்ஸ்பிரஸ்வேயில் டிரக் மீது மாருதி சுசிகி எரிடிகா கார் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேரும் காரில் பயணம் செய்தவர்கள் ஆவார்கள். சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து காரணமாக 93 கிலோ மீட்டர் நீள எக்ஸ்பிரஸ்வே சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    டிரக் பழுதாகி இடது புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வேகமாக வந்த கார் டிரக் மீது பயங்கரமாக மோதியது. டிரைவர் பிரேக் பிடித்தும் பயன் அளிக்கவில்லை என விசாரணையில் தெரிய வந்தது.

    • ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து,
    • 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?.

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 22 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மற்றும் எழுச்சியை வைத்து 40-க்கும் 40-ஐ நாம்தான் வெல்லப் போகிறோம் என்பதை சொல்கிறேன். 40-ஐயும் நமது கூட்டணிதான் ஆளப்போகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் சர்வாதிகர மனப்பான்மை. மாநிலங்களை நசுக்கிற எதேச்சதிகாரம். ஒற்றுமையாக வாழுகின்ற மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன மதவாத பேச்சு. எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்ற பாசிச எண்ணம்.

    ஹேமந்த் சோரன், அரவிந்த் ஜெக்ரிவாலை சிறையில் அடைத்துள்ளார். தேர்தல் களம் சமமாக இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வங்கி கணக்குகளை முடக்கும் தீய செயல்களில் ஈடுபட்டார்.

    மக்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட்டர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என சிந்தித்து திட்டங்களை தீட்டியதில் விலைவாசி உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

    ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா?. இல்லை. கேள்வி கேட்ட இளைஞர்களை பகோடா சுடச் சொன்னவர்தான் மோடி.

    தற்போது நடுநிலை வாக்காளர்களும் பாஜக-வின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டு வெறுக்க தொடங்கிவிட்டார்கள்.

    ஊழல் பத்திரம் மோடியின் க்ளீன் முகத்தை கிழித்து மோடியின் ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. உடனே தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள தேர்தல் பத்திரம் வந்த உடன்தான் யார்? யாருக்கு? நிதி அளித்தார்கள் என்பது தெரியவந்தது என வடை சுட ஆரம்பித்தார்.

    நாடு எத்தனையோ பிரதமரை பார்த்திருக்கிறது. இதுபோன்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரதமரை பார்த்தது இல்லை. கொரோனாவில் கூட பிரதமர் கேர் நிதி வசூல் வேட்டை நடத்தினார். ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி கட்டி அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டுமென்றால் அதற்கு பொருத்தமான நபர் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்.

    இப்போது ஊழலுக்கு உத்தரவாதம் கொடுக்கிற Made in BJP. வாஷிங் மெஷின் வைத்து ஊழல் கறை படிந்ததை சுத்தப்படித்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்களே. நடுநிலையாளர்கள் கேள்வி கேட்கிறார்களே என்ற எந்தவிதமான மான உணர்ச்சி இல்லாமல் திரும்ப திரும்ப அதே செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.

    பா.ஜனதா ஒரு மாநிலத்தில் வளர்ச்சி அடைய தேடுவது மத பிரச்சனையைத்தான். அங்கு பிரச்சனை இல்லையென்றால் எப்படி தூண்டலாம் என ரூம் போட்டு யோசிக்கின்ற கலவர கட்சிதான் பாஜக.

    பாஜனதா குறித்து பேசினால் நம்மை ஊழல் கட்சி, குடும்ப கட்சி எனக் குறை கூறுகிறார்கள். தேய்ந்து போன டேப் ரெக்கார்டு மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்தே சோர்ந்து போனோம்.

    நிறையபேர் தனியாக இருந்து இரவு 12 மணிக்குக்கூட பேய் படும் பார்த்து விடுவார்கள். ஆனால் மோடி இரவு டி.வி.யில் பேசப்போகிறார் என்றால், பலரின் நெஞ்சு படபடத்துவிடும். அந்த அளவிற்கு நாட்டு மக்களை மன ரீதியான அளவிற்கு பயத்திற்கு ஆளாக்கியிருப்பவர்தான் பிரதமர் மோடி.

    திடீரென ஒருநாள் டி.வி.யில் வந்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறினார். எந்தவிதமான திட்டமிடுதல் இல்லாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அதன்பின் தினந்தோறும் விதி (Rule) போட்டார். கேட்டால், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என வசனம் பேசினார். மக்களும் அதை நம்பி சொன்னதையெல்லாம் செய்தார்கள்.

    கருப்பு பணம் ஒழிந்ததா? 99 சதவீத பணம் திரும்பி வந்ததாக ரிசர்வ் வங்கி சொன்னது. முதலில் ஆதரிவித்தவர்கள் பின்னர் கடுமையாக விமர்சித்தார்கள். அதோடு விடாமல் புதிதாக அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். அந்த பணமும் 97 சதவீதம் திரும்பி வந்துள்ளது. அப்போ கருப்பு பணம் ஒழிப்பு என்ன மோடி மஸ்தான் வித்தை எதற்கு? பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் ஏழை மீதான முதல் தாக்குதல்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

    • ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.
    • முதல் கட்டமாக மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தலானது ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    தமிழ்நாடு, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகள் உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகள் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 21 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
    • வருகிற 23-ந்தேதி வரை கெஜ்ராவலுக்கு நீதிமன்றம் காவல் அளிக்கப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 15-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்ற காவல் மூலமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும், இது போன்று மனுக்கள் தாக்கல் செய்யக் கூடாது எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் திறமையான டெல்லி அரசை நடத்த ஜெயிலில் இருந்து அரவிந்த கெஜ்ரிவால் டெல்லி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேபினட் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான தவறான, பரபரப்பான தலைப்புகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதைத் தடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்தியாவின் அரசமைப்பு அல்லது எந்தவொரு சட்டமும் முதல் மந்திரிகள், பிரதமர் மந்திரிகள் உள்ளிட்ட மந்திரிகள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்த நடத்த தடைவிதிக்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம், ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது.
    • மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டில் ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    பாலக்காடு:

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 26-ந்தேதி பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, பட்டம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் பாஜக மற்றும் காங்கிரசை குற்றம்சாட்டி பேசினார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்து பல வாக்குறுதிகளை அளித்தார். இதை யாராவது நம்புவார்களா? வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். "மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம், ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது". மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டில் ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    பாஜக தேர்தல் அறிக்கையில் சிஏஏ குறித்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மீண்டும் மௌனம் காத்து வருகிறது என்றார்.

    பினராயி விஜயனின் கட்சியான கம்யூனிஸ்டும் மற்றும் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் கேரள மாநிலத்தில் இரு கட்சிகளும் எதிர்எதிரே களம் காண்கின்றன.

    • விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சனைகளை பிரதமர் கண்டுகொள்ளவில்லை.
    • இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார் பிரியங்கா காந்தி.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் சகாரன்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    அட்டூழியங்களுக்கும் அநீதிக்கும் எதிராக மக்கள் நிற்கிறார்கள். இதற்கு இந்த மாபெரும் கூட்டமே சான்று. தேர்தல் பத்திரம் ஒரு வெளிப்படையான திட்டம் என பிரதமர் மோடி கூறுகிறார். பிறகு ஏன் நன்கொடையாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டது? விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சனைகளை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஊழல் செய்யாமல் தேர்தல் நடத்தினால் பா.ஜ.க. 180க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என கூறினார்.

    • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
    • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

    இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

    இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது.
    • இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சிஏஏ மற்றும் என்ஆர்சி ரத்து செய்யப்படும். அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விரும்பவில்லை.

    அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சி 126 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

    • உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என நம்புகிறேன்.
    • சமாஜ்வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் சமாஜ்வாதி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சமாஜ்வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

    மக்கள் இடங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியபோது காங்கிரசுக்கு இவ்வளவு சீட் ஏன் கொடுத்தீர்கள் என்றார்கள்?

    கூட்டணியில் வரவேண்டும் என்பதனால் காங்கிரசுக்கு 17 இடங்கள் கொடுத்துள்ளேன்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று நம்புகிறேன்.

    அவர்கள் (பா.ஜ.க.) 400ல் வெற்றி பெறப் போவதில்லை. தோற்கப் போகிறார்கள்.

    அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும் என கனவு காண்பவர்களை 400 இடங்களில் தோற்கடிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • கடந்த முறை ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
    • தற்போது அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த வருடம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காந்தி குடும்பத்திற்கு பாரம்பரியமான அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி கண்டார். வயநாட்டில் வெற்றி பெற்றார்.

    இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வருகிற 26-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் மீண்டும் அமேதி தொகுதியில் போட்யிடுவீர்களா? என கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

    அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கட்சியின் எந்த உத்தரவை நான் பெற்றாலும் அதற்கு கட்டுப்படுவேன். எங்களுடைய கட்சியில் இதுபோன்ற முடிவுகள் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில்தான் எடுக்கப்படும்.

    ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். தற்போது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகிறது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது, வருகிற வெள்ளிக்கிழமை (நாளைமறுதினம்) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    ×