search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தனியார் பஸ் டிரைவர் நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றினார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து பஸ்சை எடுத்து செல்லும்படி கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேப்போல் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பண்ணாரிக்கு செல்லும் தனியார் பஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்லாமல் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி வந்தனர்.

    இதனை பார்த்த அடுத்து செல்ல வேண்டிய அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் பஸ்சை எடுக்கும்படி கூறினர். ஆனால் தனியார் பஸ் டிரைவர் நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றினார். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதலில் ஈடுபட்டதால் மற்ற பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வர முடியாமல் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து பஸ்சை எடுத்து செல்லும்படி கூறினர். இதனையடுத்து வாக்குவாதத்தை கைவிட்டு பஸ்சை எடுத்துச்சென்றனர். இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், வீ.கே. புதூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு போலீசார் வாகன சோதனையின்போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த இடையர்தவனை ஐயப்பன் (வயது 37), தாயார் தோப்பு சேர்மலிங்கம்(50), மோசஸ் ராஜ்குமார்(44), சங்கரன்கோவில் மணிகண்டன்(57), ராஜபாளையம் வீரபாண்டியன்(57) மற்றும் ராஜபாண்டியை சேர்ந்த ராஜேந்திரன்(52) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த அப்போதைய வீ.கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசாருக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
    • வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழக உள் மாவட்டங்களில் 27-ந்தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    23, 24-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி.

    இந்தநிலையில் இன்று காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மன உளைச்சல் காரணமாக கருப்புச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).

    இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • நேற்று 54.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.66 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். தற்போது மேட்டூர் அணைக்கு 100 கன அடிக்கும் கீழ் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 57 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே நிலை நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் நீரை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 54.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 54.66 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 20.87 டி.எம்.சி.யாக உள்ளது.

    • இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் வணிக வளாகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த மாதம் சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    சென்னை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்ட நாட்டில் உள்ள வாத்து பண்ணையில் ஏராளமான வாத்துக்கள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, அப்பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும், அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

    கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே தமிழக கால்நடை துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையில் உள்ள 12 சோதனை சாவடிகளில் அதிகாரிகள் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி (கிளோரின்-டை-ஆக்சைடு) மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு சோதனை சாவடியிலும் ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக பணியமர்த்தப்பட்டு தீவிர சோதனை செய்கின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க களியக்காவிளையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. படந்தாலுமூடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றிவரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு வரும் கோழிப் பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு உள்ள கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை, பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்துள்ளது.

    நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து விஷ தேனீக்கள் திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தது. அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேனீ கூட்டை மர்ம நபர்கள் கல்லால் அடித்ததால், அங்கிருந்த தேனீக்கள் பறந்து நீதிமன்றத்திற்குள் வந்து அனைவரையும் கொட்டியது தெரிய வந்தது.

    • கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஈரோடு:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை ஈரோடு பிடித்துள்ளது. நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி முதல் 2 இடத்தை பிடித்துள்ளது.

    • இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
    • அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

    இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

    அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.

    தேர்தல் பிரசாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்து வாழை மற்றும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இந்த நிலையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 4 டன் மாம்பழம் மற்றும் 3 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ×