search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரைமணி நேரத்திற்கு பிறகு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி 181-வது வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதானது.

    கோவை:

    கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கை செலுத்தி சென்றனர்.

    ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதாகவும் தொடங்கி நடந்தது.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் 184-வது வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு எந்திரத்தில் இன்று காலை திடீரென கோளாறு ஏற்பட்டது.

    இங்கு காலையிலேயே வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் எந்திரம் பழுது காரணமாக அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    அரைமணி நேரத்திற்கு பிறகு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு வாக்காளர்கள் வாக்களித்து சென்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி 181-வது வாக்குச்சாவடியிலும் எந்திரம் பழுதானது.

    இதனால் அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு தற்போது வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இதேபோல் போத்தனூர் 59-வது வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது காரணமாக அரைமணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. இதுமட்டுமின்றி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டன. அதனை ஊழியர்கள் உடனுக்குடன் சரி செய்து, வாக்குப்பதிவை நடத்தினர்.

    • கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6ந் தேதி நிறுத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 60 அடிக்கு கீழ் குறைந்தது. மழை நின்று விட்டதால் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் நின்றது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.19 அடியாக உள்ளது. நீர் இருப்பு 3454 மி.கன அடியாக உள்ளது.

    மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீர்பாசனத்துறை அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் வருகிற 22ந் தேதி வரை 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது. அணைக்கு 209 கன அடி நீரு வருகிறது. 105 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறில் மட்டும் 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது.
    • வேதாரண்யம் அடுத்த வடமழை ரஸ்தா நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 50 நிமிடமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது. இதன் காரணமாக 22 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    மற்றொரு சம்பவம்...

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வடமழை ரஸ்தா நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 50 நிமிடமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. பின்பு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு சரி செய்யபட்டு 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

    இதைப்போல் வேதாரண்யம் மறைஞாயநல்லூர் ஆனந்தராசு உதவி நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. பின்னர் 1 மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    • தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம்.
    • சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    சிதம்பரம்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஜான்சிராணியுடன் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினார்.

    பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டை விட இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம். வட இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் 2019-ல் வட இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றார். அதேபோல் இம்முறை வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

    கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பது, மக்களுடைய வாழ்வாதாரம், வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
    • ஜனநாயக கடமை ஆற்றுவது நமது கடமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    சென்னை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓரிரு இடங்களில் தொடக்கத்தில் எந்திர பிரச்சனை வந்தது. அது உடனடியாக சரி செய்யப்பட்டது.

    கண்ட்ரோல் ரூமில் இருந்து 65 விழுக்காடு பதட்டமான வாக்குச்சாவடிகளை கவனித்து வருகிறோம்.

    இன்றைய சிறப்பு என்னவென்றால், நடைபெறும் தேர்தலில் பணிபுரியும் 18 ஆயிரம் பணியாளர்களில் 11 ஆயிரம் பெண் பணியாளர்கள் பெண்கள் தான். 8 ஆயிரம் ஆண்கள் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 57 விழுக்காடு பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    16 பெண்களுக்கென ஒரு பூத் உள்ள நிலையில் 1461 பூத்கள் முழுமையாக பெண்களால் வாக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அடுத்து 6 மணி வரைக்கும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கப்படும்.

    மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்க உதவி செய்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்லில் கடந்த முறை தமிழ்நாட்டில் 73 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவானது. இந்தியாவில் 67 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவானது.

    வாக்களிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல கடமை. ஜனநாயக கடமை ஆற்றுவது நமது கடமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும். பொதுமக்கள் மிகத்திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

    • வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.
    • அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 1932 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 372 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் 670 போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் 800 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.

    மேலும் இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்ட அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் 35 பறக்கும் படைகள், 22 அதிவிரைவு படைகள் அமைக்கப்பட்டு 1065 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 268 மத்திய பாதுகாப்பு படையினர், 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 462 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதே போல் பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2825 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
    • கனிமொழியின் மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தியுடன் சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 7.20 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் குடும்பத்தார்கள் வந்து வாக்குப்பதிவு செய்தனர். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதுவும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆக இருந்த கனிமொழி மீண்டும் எனது 2-வதுதாய் வீடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்கள். அவரது மக்கள் பணி, செயல்பாடுகள், திறமைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

    அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்களையும் விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்து சாதனை படைப்பார் என்பது மட்டும் உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள்.
    • பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

    திருச்சி:

    திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் அமைக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

    தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற நிலை வந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெறுவார்கள்.

    மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறுகிறார்கள் அவ்வாறு எல்லாம் நடக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பெறும்.

    தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள். சேலத்தில் வெற்றி பெறப்போவது செல்வ கணபதி தான்.

    பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி.

    காரைக்குடி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். நட்டாவும், அமித்ஷாவும் காரைக்குடிக்கு வரவில்லை, அவர்கள் வராமல் வருகை ரத்தானதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத் தன்மை காப்பாற்றப்படும். பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக்கத்துறை என்பது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
    • அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    திண்டிவனம்:

    திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    பேட்டியின் போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், பா.ம.க. விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
    • குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் பள்ளியில் தனது வாக்கை இன்று காலை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்றாக இருக்கும்.

    தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்து கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து மதுபாட்டில்களை சப்ளை செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி கொள்கைகளை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

    குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று தெளிவாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம்.
    • எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிக முக்கியமான நாள் இது. என் ஓட்டுரிமையை திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் உங்கள் உடன்பிறந்த சகோதரர் வாழ்த்து தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு எல்லா தொகுதிகளிலும் என் உடன்பிறந்த சகோதரர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு அது முன்னாள் முதல்வரின் கருத்து. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல என்றார்.

    அப்போது சிவகுமார் எம்எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×