search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு பெயர் பெற்ற இந்த பாப்ரி பியோல் பானமானது பால், தண்ணீர், துளசி விதைகள், தேங்காய் போன்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
    ஜம்மு மற்றும் காஷ்மீரில் புகழ்பெற்ற இந்த பானம் வட இந்திய பகுதிகளிலும் பிரபலமானது. துளசி விதைகள் அல்லது சப்ஜா விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் பண்டைய காலம் முதலே புழக்கத்தில் இருந்து வருகிறது. முகலாய பேரரசர் பாபர் தான் இந்த பானத்தை இப்பகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு பெயர் பெற்ற இந்த பாப்ரி பியோல் பானமானது பால், தண்ணீர், துளசி விதைகள், தேங்காய் போன்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது வட்டார மொழியில்,‘கான் சர்பத்’ என்றும் அழைக்கப்படுகிறது, கான் என்பது விலைமதிப்பற்ற நகைகள் என்று பொருள்படும். அதற்கேற்ப விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் போது ஒளி ஊடுருவக்கூடிய முத்துக்கள் போல் மிளிரும்.
     
    தேவையான பொருட்கள்:


    காய்ச்சிய பால் - 500 மி.லி.
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    துளசி விதை அல்லது சப்ஜா விதை - 25 கிராம்
    நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா - 25 கிராம்
    தண்ணீர் - ஒரு கப்
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கு ஏற்ப

    செய்முறை:

    துளசி அல்லது சப்ஜா விதைகளை 1 கப் தண்ணீரில் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். பால் ஆறியவுடன் ஊறவைத்த விதைகளை சேர்க்கவும்.

    பின்பு சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, கிளறவும்.

    துருவிய தேங்காய், குங்குமப்பூ மற்றும் பாதாம், பிஸ்தாவை தூவி 5 முதல் 6 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பின்பு பருகலாம்.

    இதனை குளிர்ச்சியாக சாப்பிடுவது சிறந்தது.
    அரிசி வகைகளிலேயே மிகவும் சத்துள்ளது கருப்பு கவுனி அரிசியாகும். இன்று கருப்பட்டி சேர்த்து கவுனி அரிசியில் சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்
    கருப்பட்டி - 1 கப்
    தேங்காய்ப்பால் -  1 கப்
    நெய் - தேவையான அளவு
    முந்திரி - 10

    செய்முறை

    கருப்பு கவுனி அரிசியைக் கழுவி 6-7 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    பின் 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியைப் போட்டு கரைந்தபின் வடிகட்டி வைக்கவேண்டும்.

    பின் ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு துண்டுகளாக நறுக்கிய முந்திரியைப் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.

    பின் அதே கடாயில் வடிகட்டிய கருப்பட்டியை ஊற்றி நன்கு கொதித்தபின் அதில் கரைத்து வைத்த கவுனி அரிசி கலவையை ஊற்றி குறைந்த தீயில் கட்டியில்லாமல் கைவிடாமல் கிளற வேண்டும்.

    கலவை கெட்டியாகும் போது 1 டேபிள்ஸ்பூன் (இடையிடையே நெய் விட வேண்டும்) நெய் விட்டு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.

    அல்வா பதம் வந்ததும் எடுத்து வைத்த முந்திரியைப் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவேண்டும்.

    ஆரோக்கியமான சூடான சுவையான கவுனி அரிசி அல்வா தயார்.

    வறுத்த முந்திரி, தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
    பீப் பிரியாணியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் குக்கரில் பீப் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள் :

    பீப் (மாட்டுக்கறி)- 1 கிலோ
    பாசுமதி அரிசி - 1/2 கிலோ
    எண்ணெய் - 500 ml
    நெய் - 1/4 கப்
    பிரியாணி இலை - 2
    பட்டை - 2
    ஏலக்காய் - 2
    லவங்கம் - 2
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
    கடைந்த தயிர் - 1 கப்
    மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
    உப்பு - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
    புதினா - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 1 கைப்பிடி
    லெமன் - 1

    செய்முறை :

    குக்கரில் நன்றாக கழுவிய பீப் போட்டு அத்துடன் மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 6 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய், நெய், விட்டு பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பீப் போட வேண்டும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    பின்னர் தயிர், லெமன், புதினா, கொத்தமல்லி, போட்டு நன்கு வதக்கவும்.

    பிறகு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 5 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின் அரிசி போட வேண்டும். குக்கரை மூடி வைத்து 1 விசில் விட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான பீப் பிரியாணி ரெடி.
    கற்றாழையை மேற்பூச்சாக பூசுவதை விட மருந்தாக சாப்பிடும் போது சரும பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், ஒவ்வாமை மற்றும் செரிமான கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
    அனைவரும் விரும்பும் வகையில் சுவையான கற்றாழை ஸ்வீட் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு காண்போம்.

    தேவையான பொருட்கள்

    தோல் நீக்கி அலசப்பட்ட கற்றாழை ஜெல் - 4 தேக்கரண்டி
    பால் - 1 லிட்டர்
    சர்க்கரை - 5 தேக்கரண்டி
    நெய் - 3 தேக்கரண்டி
    பாலில் இருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட கிரீம் - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் - 4
    பாதாம், பிஸ்தா (பொடித்தது) - 2 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை பொன்னிறமாக மாறும் வரை பாகு பதத்தில் காய்ச்சி கொள்ளவும்.

    மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை அரை லிட்டர் ஆகும் வரை மிதமான தீயில் நன்றாக காய்ச்சவும். பின்பு அதில் கற்றாழையை போட்டு 10 நிமிடங்கள் கிளறவும்.

    கலவை கிரீம் பதத்திற்கு வரும் வரை கிளறிய பின்பு அதனுடன் பாலில் இருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட கிரீம் சேர்க்க வேண்டும். இந்த நேரத்தில் பால் லேசாக பொன்னிறமாக மாற தொடங்கும்

    அதில் சர்க்கரை பாகு மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து கலக்கவும். பின்பு கலவையை இறக்கி ஆற வைக்கவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் உருக்கப்பட்ட நெய் 1 தேக்கரண்டி ஊற்றி பாத்திரம் முழுவதும் பரவ விடவும். அதில் ஆறவைத்த கலவையை கொட்டி சமமாக நிரப்பவும்.

    பிறகு விருப்பமான வடிவங்களில் வெட்டி கொள்ளவும்.

    வெட்டிய துண்டுகளின் மீது மீதம் இருக்கும் நெய்யை சமமாக ஊற்றி பொடிக்கப்பட்ட பிஸ்தா மற்றும் பாதாமமை தூவவும்.

    அவற்றை குளிர்சாதனப்பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான கற்றாழை ஸ்வீட் தயார்.
    பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் மலபார் மட்டன் குருமா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 1/2 கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 5 இரண்டாக நறுக்கியது
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மல்லி தூள் - 1 ஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    அரைக்க வேண்டியது:

    தேங்காய் - அரை கப்
    முந்திரி - 10
    சோம்பு - 1 சின்ன ஸ்பூன்
    பட்டை, கிராம்பு - கொஞ்சம்

    அம்மியில் இடிக்க வேண்டியது:

    இஞ்சி - 50 கிராம்
    பூண்டு - 50 கிராம்

    செய்முறை

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் மட்டன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கொஞ்சம் பெரிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு 2 நிமிடம் வதக்கி, வேக வைத்த மட்டன் போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது போட்டு, உப்பு சரி பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றி சரியாக 10 நிமிடம் மட்டும் வைக்கவும்.

    கடைசியாக வதக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேருங்கள்.

    கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி குருமாவின் மேல் ஊற்றி 2 நிமிடம் மூட்டி வைக்கவும்.

    சுவையான மலபார் மட்டன் குருமா தயார்
    சூடான சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இறால் புளிக்குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இறால் - கால் கிலோ
    தக்காளி - 2
    பெ.வெங்காயம் – 2
    பச்சை மிளகாய் – 3
    இஞ்சி பூண்டு விழுது -சிறிதளவு
    மிளகாய் தூள் – தேவையான அளவு
    மஞ்சள் தூள் – சிறிதளவு
    கொத்தமல்லித் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
    புளி – சிறிதளவு
    கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
    உப்பு, எண்ணெய் – தேவைக்கு

    செய்முறை

    இறாலை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள்.

    அதனுடன் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்குங்கள்.

    நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.

    பின்னர் புளிகரைசலை ஊற்றி கிளறிவிடுங்கள்.

    பின்னர் இறால் துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர், போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி வையுங்கள்.

    அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்குங்கள்.

    ருசியான இறால் புளிக்குழம்பு ரெடி.

    பிரான்சு நாட்டைத் தாயகமாகக் கொண்ட ‘மூஸ்’ ரெசிபி, அதன் சுவையால் மற்ற நாடுகளுக்கும் பரவியது. ஆரஞ்சு பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘ஆரஞ்சு மூஸ்’ எவ்வாறு செய்யலாம் என்று இங்கே பார்ப்போம்.
    கோடைக்காலத்தில் வெப்பத்தை சமாளிப்பதற்காக, குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்த வகையில் பழச்சாறையும், ஐஸ்கிரீமையும் கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபி தான் ‘மூஸ்’. பிரான்சு நாட்டைத் தாயகமாகக் கொண்ட ‘மூஸ்’ ரெசிபி, அதன் சுவையால் மற்ற நாடுகளுக்கும் பரவியது. ஆரஞ்சு பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘ஆரஞ்சு மூஸ்’ எவ்வாறு செய்யலாம் என்று இங்கே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள் :

    வெண்ணெய் - 50 கிராம்
    சர்க்கரை - 50 கிராம்
    வெண்ணிலா ஐஸ் கிரீம் - 1 கப்
    ஆரஞ்சுப் பழம் - 1
    பால் - 250 மில்லி லிட்டர்
    ஆரஞ்சு எசென்ஸ் - ½ தேக்கரண்டி

    செய்முறை :

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் சுண்டக் காய்ச்சவும். கலவை கெட்டியானதும் இறக்கி குளிரச் செய்யவும்.

    வெண்ணெய்யை 30 நிமிடங்கள் குளிர்விக்கவும்.

    ஆரஞ்சுப் பழத்தை தோல் மற்றும் விதை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை போட்டு முட்டை அடிப்பான் கொண்டு நன்றாகக் கிரீம் பதத்தில் அடித்துக்கொள்ளவும்.

    அதில் குளிரவைத்தப் பால், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஆரஞ்சுப் பழத்தின் சதைப்பகுதி மற்றும் ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் 1 மணி நேரம் குளிர வைத்து ‘சில்’லென பரிமாறவும்.
    குழந்தைகளுக்கு ரசகுல்லா என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வகையில் இன்று தித்திப்பான ரசகுல்லா புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ரசகுல்லா - 10
    ரசகுல்லா சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
    பால் - ½ லிட்டர்
    கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
    ரோஜா பன்னீர் - 1 டீஸ்பூன்
    நறுக்கிய பிஸ்தா பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    நான்-ஸ்டிக் பாத்திரத்தில் பாதியளவு பாலை ஊற்றவும். பால் சிறிது குறையும் வரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு, எடுத்துவைத்திருந்த பாதி அளவு காய்ச்சாத பாலை ஊற்றி, கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

    இந்தக் கலவையைக் கொதிக்க வைத்த பாலில் ஊற்றி, ரசகுல்லா சிரப் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கட்டிகள் உருவாகாமல் இருக்க தொடர்ந்து கிளறி, மீண்டும் குறைவான தீயில் அடுப்பில் வைத்துக் கிளறவும்.

    ரசகுல்லாவை மென்மையாகப் பிழிந்து பாதியாக நறுக்கி தனியாக வைக்கவும்.

    அடுப்பில் இருக்கும் கலவை கெட்டியானதும், அதில் நறுக்கிய ரசகுல்லா மற்றும் ரோஜா பன்னீரை சேர்க்கவும். மெதுவாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
    இதை 2 மணி நேரம் குளிரூட்டவும்.

    பரிமாறும்போது நறுக்கிய பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும். குளிரவைத்து பரிமாறவும்!
    இடியாப்பத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சிக்கன் சேர்த்து கொத்து இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    இடியாப்பம் - 4
    சிக்கன் - 100 கிராம் (எலும்பில்லாத சிக்கன்)
    சிக்கன் கிரேவி - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    முட்டை - 2
    பச்சை மிளகாய் - 3
    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - அரை ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - கொஞ்சமாக
    நெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:


    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இடியாப்பத்தை உதிர்த்து வைத்து கொள்ளவும்.

    சிக்கனை பொடியாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் நெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள் போட்டு நன்றாக கிளறவும்.

    அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    சிக்கன் நன்றாக வதங்க அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

    சிக்கன் நன்றாக வெந்ததும் முட்டை உடைத்து ஊற்றி கிளறவும்.

    இந்த கலவை வதங்கியதும், அடுத்து அதில் சிக்கன் கிரேவியை ஊற்றி கிளறவும்.

    இது கொஞ்சம் வதங்கியதும், உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து பதமாக கிளறவும்.

    மசாலா நன்றாக சேர்ந்தவுடன் கொத்தமல்லி தழை துவி இறக்கி பரிமாறவும்.
    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் கவலைப்படாதீங்க.. மீந்த இட்லியை வைத்து மாலையில் முட்டை கொத்து இட்லி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி - 8
    முட்டை - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்
    தனியா தூள் - அரை தேக்கரண்டி,
    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இட்லியை உதிர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூர், கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின் முட்டை உடைத்து ஊற்றி உதிர்ந்து வரும் வரை வதக்கவும்.

    பின் உதிர்த்து வைத்துள்ள இட்லி சேர்த்து பிரட்டவும்.

    தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு தீயில் 5 நிமிடங்களுக்குப் பிரட்டவும்.

    இறுதியாக கொத்தமல்லி தூவி அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் சுவையான மதுரை ஸ்டைல் முட்டை கொத்து இட்லி தயார்.
    கொத்து பரோட்டா கேள்விப்பட்டிருப்பீங்க. அது என்ன கொத்து தோசைனு தெரியனுமா. அப்ப இந்த ரெசிபியை பாருங்க...
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கரண்டி
    முட்டை - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    மிளகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.

    முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). முட்டையை உடைத்து, சிறிது உப்பு சேர்த்து அடித்து, தோசை மீது (வேகாத தோசை) ஊற்றவும்.

    பின்னர் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

    வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும்.

    கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் பாதி வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்

    பின்னர் மிளகு - சீரகப் பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சூப்பரான கொத்து தோசை ரெடி.
    சத்து நிறைந்த கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று கேழ்வரகு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 1 கப்
    அரிசி மாவு - கால் கப்
    உளுந்து மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    ஓமம் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு மாவை சலித்து எடுத்து வைக்கவும்.

    உளுந்தை வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு பௌலில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஓமம், பொடித்து வைத்துள்ள உளுந்து மாவு, மிளகாய் தூள் உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.

    பின் ரிப்பன் பக்கோடா செய்யும் அச்சில் மாவு வைத்து, வாணலியை எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ரிப்பன் பக்கோடா பிழிந்து, நன்கு வெந்ததும் எடுக்கவும்.

    இப்போது சுவையான மொறு மொறு ராகி ரிப்பன் பக்கோடா தயார்.

    இந்த பக்கோடா காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் அதே மொறுமொறுப்பு மற்றும் சுவையான மாறாமல் இருக்கும்.
    ×