search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
    • வராஹியை வணங்குபவர்களுக்கு செய்வினையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

    ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களிலிருந்துத் தோன்றியவள்தான் ஸ்ரீ மகா வராஹி எனப்படும் அம்மன். சேனைகளுக்குத் தலைவியாக அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள் வராஹி முகத்துடன் இருப்பதால் வராஹி எனப்படுகிறாள்.

    பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா என்னும் சப்த மாதாக்களில் இவள் 6-வதாக பூஜிக்கப்படுபவள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண்புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப்பகுதிக்கு வராஹியே தேவதையாவாள்.

    ஆனி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரையில் உள்ள ஒன்பதுநாட்கள் வராஹி நவராத்திரி எனப்படுகிறது. இதை ஆஷாட நவராத்திரி என்றும் சொல்வார்கள். ஒரு காலத்தில் அம்பிகை வழிபாடு தாய் வழிபாடாக மிகவும் சீரும் சிறப்புடன் விளங்கியது. நவராத்திரி என்றால் புரட்டாசி நவராத்திரிதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் 12 மாதங்களிலும் அம்பிகையை நினைத்து 12 நவராத்திரிகள் கொண்டாடிய காலமும் உண்டு.

    இப்போது பிரதானமாக நான்கு நவராத்திரிகள் இருக்கின்றன. வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி. இதில் ஆஷாட நவராத்திரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.

    குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் திகழும் பஞ்சமி திதி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ வராஹி தேவியை உபாசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் விரதம் இருந்து ஸ்ரீ மகா வராஹிக்கு அபிஷேகம், அர்ச்சனை பூஜைகள் செய்யலாம். இதனால் சிறந்த பேச்சுத் திறன் கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீமகாவராஹியை வணங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதை ஓட்டியே வராஹிக் காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதம் இருந்து ஸ்ரீ மகா வராஹியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி,

    மஞ்சள் பட்டுத் துணி சாத்தி,

    பஞ்சம்யை நம,

    தண்டநாதாயை நம,

    சங்கேதாயை நம,

    சமயேஸ்வர்யை நம,

    சமய சங்கேதாயை நம,

    வராஹியை நம,

    போத்ரிண்யை நம,

    ரிவாயை நம,

    வார்த்தாள்யை நம,

    மகாசேனாயை நம,

    ஆக்ஞாசக்ரேஸ்வர்யை நம,

    அரிக்ன்யை நம என்னும் 12 மந்திரங்களை சொல்லி சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும். தோல் உரிக்காத கருப்பு, உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வராஹியை நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை செய்பவர்களுக்கு அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் நோய் எதிரி மற்றும் அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

    தஞ்சை பெரிய கோவிலில் எப்போதும் ஆஷாட நவராத்திரி மிக விசேஷமாக கொண்டாடப்படும். இந்த நாளில் நவதானிய அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம், குங்கும அலங்காரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஒன்பது நாட்கள் விரதம் இருந்து தினமும் வீட்டில் பூஜை அறையில் கோலமிட்டு, விளக்கேற்றி, அன்னை வராஹியை வழிபட்டால் எப்பொழுதும் குறைவற்ற செல்வமும் தானிய விருத்தியும் ஏற்படும். மாணவ-மாணவிகள் வராஹி அம்மனை வழிபட சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

    • அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வரும் நாள் மகத்துவமானது.
    • நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.

    இன்று ஆனி அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வருகிறது. மறக்காமல், விரதம் இருந்து முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். பித்ருக்கள் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்கள். இன்று 17.6.2020 சனிக்கிழமை அமாவாசை. ஆனி அமாவாசை.

    வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, மகாளய பட்ச காலம், கிரகண காலம் என்று மொத்தம் 96 தர்ப்பணங்களைச் செய்ய வலியுறுத்துகிறார்கள்.

    மனித வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடும் பித்ரு வழிபாடும் மிக மிக அவசியம். நம்முடைய தலையாயக் கடமை. அமாவாசை முதலான நாட்கள், முன்னோர் ஆராதனைக்கு உரிய நாட்கள். பித்ருக்கள் ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கின்ற தருணம்.

    எனவே எதைச் செய்யாவிட்டாலும் முன்னோர் ஆராதனையை, வழிபாட்டை, வேண்டுதலைச் செய்யவேண்டும். இதனால், நம் குடும்பமும் நம் சந்ததியும் சீரும் சிறப்புமாக வளரும்; நிம்மதியும் சந்தோஷமுமாக இனிதே வாழலாம்.

    இன்று 17-ம் தேதி, அமாவாசை. ஆனி மாத அமாவாசை. சனிக்கிழமையும் கூட. அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வரும் நாள், இன்னும் மகத்துவமானது. எனவே, அமாவாசை தினமான இன்று விரதம் இருந்து பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும்.

    இன்று முன்னோரின் படங்களை சுத்தப்படுத்தி, பூக்களால் அலங்கரிப்போம். முன்னதாக, வீட்டைச் சுத்தம் செய்யுங்கள். தர்ப்பணமோ வேறு என்ன முறையோ அதன்படி, உங்கள் குடும்ப வழக்கப்படி முன்னோரை வணங்குங்கள்.

    முக்கியமாக, காகத்துக்கு உணவிடுங்கள். குறிப்பாக, எள் கலந்த சாதம் வழங்குங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். இதில் குளிர்ந்து போய், உங்கள் வீட்டையே சுபிட்சமாக்கி அருள்வார்கள் முன்னோர்கள்.

    குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் இன்னும் இன்னும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்வார்கள்.

    இன்று 17-ம் தேதி, சனிக்கிழமை, ஆனி அமாவாசை.

    • சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.
    • சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு.

    சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.

    1. நித்திய சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.

    2. பட்ச சிவராத்திரி:

    தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.

    3. மாத சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

    4. யோக சிவராத்திரி:

    சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

    5. மகா சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.

    எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.

    மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

    • முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
    • சிவபெருமானைப் போற்றி வழிபடும் சிவபுராணத்தைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும்.

    இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷம், முருகக் கடவுளுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம் இரண்டும் இணைந்த நாளாக இந்த நாள் விளங்குகிறது.

    வியாழக்கிழமையை குருவாரம் என்று சொல்வார்கள். வியாழ பகவான் தேவர்களின் குரு. எனவே, வியாழனுக்கு உரிய இந்த நாளில் குருவை வணங்குவதன் மூலமும் மகான்களை வழிபடுவதன் மூலமும் பல்வேறு நன்மைகளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. குருவே நம் பிழைகளை மன்னித்து அருள் செய்பவர். அதனால்தான் அருணகிரிநாதர், `குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்று பாடினார்.

    வியாழன் தேவ குரு என்றால் தட்சிணாமூர்த்தி லோககுரு. இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் குருவாக விளங்குபவர். ஞானம் வேண்டுபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தி. சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    இன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவது மேலும் ஒரு விசேஷம். கார்த்திகை முருகப் பெருமானின் நட்சத்திரம். முருகனும் சிவபெருமானும் வேறுவேறல்ல. சிவபெருமானின் அக்னி வடிவமே முருகக் கடவுள். முருகக் கடவுள் தேவர்களின் துயர்தீர்க்க அவதரித்தவர். கருணையே வடிவான வேலினைக் கையிலே கொண்டவர். அதோடு தகப்பன் சாமியாக சுவாமிமலையில் அமர்ந்து அருள்பாலிப்பவர். எனவே, வியாழன் அன்று முருகப்பெருமானை சுவாமிநாத ரூபத்தில் வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்தது.

    இன்று விரதம் இருந்து சிவபெருமானையும் முருகப் பெருமானையும் கட்டாயம் வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும். சிவபெருமானைப் போற்றி வழிபடும் சிவபுராணத்தைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும். ஐந்தெழுத்து மற்றும் ஆறெழுத்து மந்திரத்தை ஜபம் செய்யலாம். மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி வீட்டிலிருக்கும் சிவன் அல்லது முருகனின் படத்துக்குக் கிடைக்கும் மலர்களை சாத்தி வழிபடலாம். நோய்கள் தீரவும் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் இன்று மாலை பிரதோஷ வேளையில் முருகப் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள்.

    • நாளை (புதன்கிழமை) சர்வ ஏகாதசி தினம்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள்.

    புதன் கிழமையும் ஏகாதசியும் இணைந்து வரும் அற்புதமான நாளில், பெருமாளை விரதம் இருந்து வணங்குவோம். ஒரு கை துளசியை பெருமாளுக்கு சார்த்துவோம். நம்மை செம்மையாகவும் சிறப்புடனும் குறைவின்றி வாழச் செய்வார் ஏழுமலையான்.

    பெருமாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் நாம் வரங்களைப் பெறுவதற்கும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றன. புதன் கிழமையும் சனிக்கிழமையும் பெருமாளுக்கு உரிய கிழமைகளாகச் சொல்லப்படுகின்றன.

    அதேபோல், மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.

    ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

    இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    நாளை (புதன்கிழமை) சர்வ ஏகாதசி தினம். புதன்கிழமையில் ஏகாதசியும் இணைந்து வருவது மிகவும் விஷேசமானது. முக்கியமாக, சர்வ ஏகாதசி நாளான நாளை, விரதம் இருந்து பெருமாளை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.

    ஆண்கள், பெண்கள் என 8 வயதுக்கு மேல் 80 வயதுக்குட்பட்ட அனைவரும் ஏகாதசி நாளான நாளை காலை முதல் எந்த உணவும் சாப்பிடாமல் (சக்தியற்றவர்கள் உப்பு, காரம் இல்லாத உணவை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு) இரவில் பகவான் நாமாவைச் சொல்லிக் கொண்டு பகவத் கதையைக் கேட்டுக் கொண்டு ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    உடலில் ஏற்படும் நோய்களும் அஜீரணக் கோளாறு முதலிய நோய்களும் மனதிலுள்ள ஆசை விருப்பு வெறுப்பு போன்றவைகளும் விலகி மகா விஷ்ணுவின் அருளால் தர்மத்துக்கு விரோதமில்லாத விரும்பும் அனைத்தும் கிட்டும்.

    புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். ஒரு கை துளசி பெருமாளுக்கு சார்த்துங்கள். அதேபோல், துளசி தீர்த்தம் பருகுங்கள். எல்லா நல்லதுகளும் தந்தருள்வார் வேங்கடநாதன். இன்னல் என்பதையெல்லாம் இல்லாது போகச் செய்வார் ஏழுமலையான்!

    • இன்று விரதம் இருந்து சிவவழிபாடு செய்வது உத்தமம்.
    • இந்தநாளில், ஞானமும் யோகமும் தந்தருளும் சிவனாரை விளக்கேற்றி வழிபடுவோம்.

    புண்ணியம் நிறைந்த வைகாசி மாதம் என்று ஞானநூல்கள் போற்றுகின்றன. இந்த வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திர நாள் என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள். அதேபோல், வைகாசிச் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த நாள்.

    விசாக நட்சத்திரநாளில் முருக வழிபாடு மிகுந்த விசேஷம். அதேபோல், அம்பிகையை ஆராதிக்க, வாழ்வில் சங்கடங்கள் அனைத்தும் விலகிவிடும். சந்தோஷங்கள் பெருகும்.

    சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். வைகாசி மாதத்தின், திங்கட்கிழமைகள் ஈஸ்வர வழிபாடு ரொம்பவே வலிமையைத் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். திங்கட்கிழமைகளில், விரதம் இருந்து சிவ ஸ்துதி பாராயணம் செய்து சிவபெருமானை தீபாராதனை காட்டி பிரார்த்தனை செய்வது உத்தமம். ருத்ரம் ஜபிப்பது, எதிரிகளையும் தீய சக்திகளையும் அழிக்கவல்லது.

    வைகாசி மாதத்தின் கடைசி சோமவாரம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தநாளில், விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சோம வார நாளில், சோமன் எனப்படும் திங்கள் எனப்படும் சந்திரன் எனப்படும் நிலா உதயமாகும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். முடிந்தால், கிடைத்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். குடும்பமாய் அமர்ந்து சிவநாமம் சொல்லுங்கள். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடுங்கள் அல்லது ஒலிக்கவிடுங்கள். முக்கியமாக, நோய் தீர்க்கும் பதிகங்களைப் பாடி பரமேஸ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    சிவனாருக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஞானமும் யோகமும் தந்தருள்வார் சிவனார்.

    தென்னாடுடைய சிவனே போற்றி.

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    • ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.
    • ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்

    தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரத நாட்களாகும்.

    கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம். தந்தை இல்லாதவர்கள் வாழ்வில் வளம் பெற சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொண்டு இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதனால் இரட்டிப்பு பலன் உங்களுக்கு கிடைக்கும். சனிபகவானின் பாதிப்பு குறைந்து வாழ்வில் நிம்மதி கிடைக்கவும், சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் தீரவும் ஆவணி ஞாயிறு விரதம் அனுஷ்டிக்கலாம்.

    ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

    ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது

    அந்த காலத்தில் விவசாயிகள் ஆவணி மாதத்தில் நன்கு விளைந்து நிற்கும் வயல்வெளிகளில் இருக்கும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி பெண்கள் நாகருக்கு புற்றில் பால் ஊற்றி இந்த நாளில் வழிபாடுகள் செய்வார்கள். அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களும், வேலையில்லாதவர்கள் வேலை கிடைக்க ராகு கேதுவான நாகர் சிலைக்கு பால் ஊற்றி வேண்டிக் கொள்ளலாம்.

    சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். பிறந்த ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் நிச்சயம் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம்.

    தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

    அகத்தியர் ராம பிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும். ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.

    ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் கோவிலுக்கு சென்று நவக்கிரகத்தில் இருக்கும் சூரியனாருக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். அன்றைய நாளில் கோதுமையால் செய்த இனிப்பு வகைகளை நைவேத்யம் செய்யலாம். மேலும் கோதுமையை பக்தர்களுக்கு தானமாக வழங்கலாம். இதனால் ஒவ்வொருவர் குடும்பத்திலும் பிரச்சனைகள் நீங்கி சுபீட்சமான வாழ்வு அமையும்.

    முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்க வேண்டும். அசைவ உணவை சாப்பிடாமல் சூரிய பகவானை நினைத்து விரதம் இருங்கள். ஆயிரம் பலன்களை நமக்கு ஆதவன் அள்ளித்தருவான்.

    • வருதினி ஏகாதசி விரதம் நல்ல அதிர்ஷ்டத்தையும் அமைதியான வாழ்க்கையையும் குறிக்கிறது.
    • வருதினி ஏகாதசி விரதம் அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.

    வைகாசி மாதம் தேய்பிறையில் வருகிற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்ற பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி பாக்கியத்தைத் தரக்கூடியது.

    ஏகாதசி விரதத்தை மாந்தாதாவும், தந்து மாறனும் அனுசரித்து மேல் உலகம் அடைந்தார்கள். பிரம்ம தேவனின் 5-வது தலையைக் கொய்த சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாவவிமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம்.

    வருதினி ஏகாதசி விரதம் நல்ல அதிர்ஷ்டத்தையும் அமைதியான வாழ்க்கையையும் குறிக்கிறது. இந்த விரதம் நோய் மற்றும் துன்பங்களை குணப்படுத்தவும், பாவங்களை தீர்க்கவும், ஒருவரை சக்திவாய்ந்ததாகவும் உற்சாகமாகவும் உணர உதவுகிறது. வருதினி ஏகாதாஷிக்கு நோன்பு நோற்பதன் விளைவாக சூரிய கிரகணத்தின் போது ஒருவர் தங்கத்தை தானம் செய்வதன் மூலம் பெறும் முடிவுக்கு ஒத்ததாகும். இந்த நேரத்தில் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், ஒரு மனிதன் இந்த வாழ்க்கையிலும் பிற்பட்ட வாழ்க்கையிலும் ஆனந்தமாக வாழ்கிறான்.

    வித்யா தானப் பலனை அளிக்கக்கூடியது வருதினி ஏகாதசி விரதம் அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும். பிராமணர்களுக்கு பிச்சை வழங்குவதையும், மில்லியன் ஆண்டுகளாக தியானிப்பதையும், கன்யா தானிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுவதையும் விட வருதினி ஏகாதசி விரதம் பலனளிக்கிறது என்று ஒரு ஆன்மீக நம்பிக்கை உள்ளது. இந்த நாளில் நோன்பு நோற்பதன் மூலம், மதுசூதன் பகவான் மகிழ்ச்சி அடைகிறார். எல்லா துன்பங்களும் முடிவடைந்து நல்ல அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

    நோன்பு நாளில், பஜான்-கீர்த்தனைச் செய்ய வேண்டும். கோபப்படுவதையும், பொய் சொல்வதையும் தவிர்க்க வேண்டும். இந்த நாளில் நோன்பு நோற்பவர் முதலில் பிரம்மச்சாரிய விரத விதிகளை பின்பற்ற வேண்டும்.

    • இந்துக்களின் முக்கியமான வழிபாடுகளில் விரதங்களும் ஒன்று.
    • சகல செல்வங்களையும் அருளும் அற்புதமான விரதங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கௌரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமிவிரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங்களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.

    ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. 'எங்களை நீ பீடிக்காதே!' என்று மூதேவியை வேண்டுவதாகஉள்ள விரதம்.

    தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

    மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம்.

    அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கருப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    • திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார்.
    • வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

    வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்கு உரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.

    வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மஹாபலியின் ஆணவத்தை அடக்கி மூன்று அடி மட்டுமே மண் கேட்டார் வாமனர். பலியும் கொடுத்தவுடன் வாமனர் பிரம்மாண்ட உருவெடுத்தார். பின்னர் மஹா பலியை மன்னித்து பாதாள லோகத்தின் சக்கரவர்த்தியாக நியமித்தார் பரமாத்மா.

    கேரள மக்களை அதாவது தன் மக்களை பார்க்க வருடம் ஒருமுறை பூமிக்கு வருகிறார் மஹா பலி சக்ரவர்த்தி. அதை ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.

    மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான்.

    பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

    திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேறுடன் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று விஷ்ணு புராணம் மற்றும் சிவ புராணங்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள்.

    • கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன்.
    • கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும்.

    விரதம் என்பதற்கு 'ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல்' என்று பொருள். விரத காலங்களில் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. மிதமாக உண்பதும், தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.

    வார விரதம் : செவ்வாய்க்கிழமை விரதம்

    நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்

    திதி விரதம்: சஷ்டி விரதம்

    செவ்வாய்க்கிழமை விரதம் :

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார். கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்' என்று அருள் புரிந்தார்.கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது. விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

    சஷ்டி விரதம் :

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனம் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும். பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும். இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.

    • செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.
    • முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!

    செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன். கோவிலும், பழநியும் கருதப்படுகின்றன. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழநி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை)விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    ×