iFLICKS தொடர்புக்கு: 8754422764
விருச்சகம்

இன்றைய ராசி பலன்கள்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்தவொரு காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தில் விரிசல்கள் ஏற்படலாம். கடன்சுமை கூடும். 

வார பலன்கள்

ஜூலை 17-7-2017 முதல் 23-7-2017 வரை:- விருச்சிகத்திற்கு வாரம் முழுவதும் உங்களை நீங்களே புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு புதிரான வாரமாக இது இருக்கும். அனு‌ஷம் நட்சத்திரத்திற்கு துயரங்கள் விலகத் தொடங்கி கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும் சம்பவங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. சனி கொடுக்கும் அனுபவங்கள் அனைத்தும் நாற்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு எதிர்கால நன்மையைத் தரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நெருக்கடியான நேரமாக இருந்தாலும் எதையும் இழக்க மாட்டீர்கள். இழந்தாலும் சனி முடிந்ததும் இரு மடங்கு சம்பாதிப்பீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் ரேஸ் லாட்டரி போன்றவைகள் கை கொடுக்காது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம். தங்களின் திறமையை முதலீடாகக் கொண்டவர்கள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இந்த வாரம் நல்ல வருமானங்களும், மனது சந்தோ‌ஷப்படும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.17,20,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 21ம்தேதி அதிகாலை 4.10 மணி முதல் 23ம்தேதி அதிகாலை 4.28 மணி வரை சந்திரன் எட்டில் மறையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் உங்களுக்கு தெளிவற்ற மனநிலை இருக்கும். இந்த நாட்களில் எவ்வித புதிய ஆரம்பங்களும், முயற்சிகளும் செய்ய வேண்டாம். 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி செல்:8870998888

தமிழ் மாத ஜோதிடம்

ஜூலை 17-ந்தேதி முதல் ஆகஸ்டு 16-ந்தேதி வரை

இந்தமாதம் முதல் விருச்சிகராசிக்கு சனியின் கெடுபலன்கள் குறைந்து நல்ல பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும். எதையும் சமாளிப்பீர்கள். கணவன்மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்தமாதம் சில நல்ல அனுபவங்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். உங்களில் சிலருக்கு இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.

பணம் வரும் நேரங்களில் சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. இந்த மாதம் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஜென்மராசியில் இருக்கும் சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.

நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.

ஆதித்ய குருஜி செல்:8870998888

ஆண்டு பலன் - 2017

கடந்த நான்கு வருடங்களாக விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேதனைகளும், துயரங்களும் மிக அதிகம் என்பதை என்னுடைய ராசிபலன்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை கணவன், மனைவி, அல்லது குழந்தைகளாக வீட்டினில் கொண்டவர்கள் என்பதையும் அடிக்கடி எழுதியிருக்கிறேன்.

கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் நான் உள்ளே நுழைந்ததும் பார்க்கின்ற முதல் ஜாதகர் நிச்சயம் விருச்சிக ராசிக்காரராகத்தான் இருப்பார். நிறைய முறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நுழைந்ததுமே நீங்கள் விருச்சிகம்தானே என்று எத்தனையோ பேரைக் கேட்டிருக்கிறேன்.

பனிரெண்டு ராசிகளில் விருச்சிகத்திற்கு மட்டுமே ஏழரைச் சனியாக சனிபகவான் ஆரம்பிக்கும் போதே உச்சநிலையில் வருவதால் சனியின் ஆரம்பத்திலேயே கெடுபலன்கள் விருச்சிகத்திற்கு நடக்கத் தொடங்கி விடுகின்றன. இந்தமுறை விருச்சிகத்தினர் எதையும் சமாளிக்க முடியாமல் திணறித்தான் போனீர்கள்.
2017-ம் வருடம் விருச்சிகத்தின் வேதனைக்கு முடிவு கட்டும் வருடமாக இருக்கும். கடும் இழப்பு, நெருங்கியவரின் பிரிவு, துயரம், கடன், ஆரோக்கிய குறைவு, மன அழுத்தம், வேலையில், தொழிலில் சிக்கல், வழக்கு போன்ற எல்லாவிதமான கெடுபலன்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்துடன் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும்.

வருட இறுதியில் அக்டோபர் மாதம் 26 ம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி மூலமாக உங்களுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்தே உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளும் குறைய ஆரம்பித்து வருட முடிவில் தீர்வு கிடைக்க ஆரம்பிக்கும்.

இதுவரை எதையும் சமாளிக்க முடியாமல் குழப்பத்திலும், கடுமையான மன அழுத்தத்திலும் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எந்த பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாக எதிர் கொண்டு சிக்கல் இல்லாமல் தீர்த்துக் கொள்ள ஆரம்பிப்பீர்கள்.

புது வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி இம்முறை ராகுபகவான் தனக்குப் பிடித்த வீடான கடகத்திற்குப் பெயர்ச்சியாவதும், கேது நன்மைகளைச் செய்யும் வீடான மூன்றாமிடத்திற்கு மாறுவதும் நல்ல பலன்களைத் தரும் என்பதால் வருடத்தின் பிற்பகுதியில் இருந்தே உங்களின் கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும்.

செப்டம்பர் 12 ம் தேதி மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை தர இயலாது போனாலும் வருடத்தின் முடிவில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் ஜென்மச்சனி விலகுவதால் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த அத்தனை சிக்கல்களும் இந்த வருட பிற்பகுதியில் இருந்தே விலகும் என்பது உறுதி.

உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகி தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும். அதேநேரத்தில் வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பெரிய அளவில் பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது. ஜென்மச்சனி இந்த வருடத்தின் இறுதியில்தான் விலகுகிறது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது நன்மை தரும் காலம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள். குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும்.

அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும். பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைக் கவனமாகச் செய்யுங்கள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கடன் வாங்குவதால் பிரச்சனைகள் தீராமல் இன்னும் அதிகமாகவே செய்யும். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவது சட்டியிலிருந்து தப்பித்து அடுப்பில் விழுந்த கதை ஆகிவிடும்.

சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் அதனை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். இதுவரை தாமதமாகி வந்த வங்கிக்கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார். ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும்.

யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது.

பெண்களுக்கு இந்த வருடம் நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்

எனவே எப்படிப் பார்த்தாலும் உங்களின் எதிர்கால நன்மைக்கு அச்சாரம் போடும் வருடமாக புது வருடம் அமையும் என்பது உறுதி. வருடத்தின் இறுதியில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியில் இருந்து வாழ்வில் வசந்தம் காண்பீர்கள்.

ஹே விளம்பி வருட பலன்

கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக விருச்சிக ராசிக்கு மட்டும் தனிக்கவனம் எடுத்து ராசிபலன்களை எழுதிக் கொண்டும், தொலைக்காட்சிகளில் சொல்லிக் கொண்டும் வருகிறேன்.

விருச்சிகத்தினர் படும் துயரம் அந்த அளவிற்கு இருக்கிறது. பனிரெண்டு ராசிகளிலும் விருச்சிகத்தினர் மட்டும்தான் அதிக அளவில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். வலுவான பிறந்த ஜாதகத்தைக் கொண்ட சிலருக்கு மட்டும்தான் துன்பங்கள் இல்லை. மற்றவர்கள் நிலைமை துயரம்தான்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் 80 சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள், அல்லது விருச்சிகத்தினை கணவன், மனைவி, மகன், மகள் போன்ற உறவினர்களாக வீட்டில் கொண்டவர்கள் என்பதனை ஒவ்வொரு முறையும் எழுதுகிறேன்.

சென்ற ஆண்டிற்கு முன்பு வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வந்து கொண்டிருந்தார்கள், தற்போது கேட்டை நட்சத்திரக்காரர்கள் அதிகமாக வருகிறீர்கள் என்பதைத் தவிர மாற்றம் ஒன்றும் இல்லை. கடந்த சில மாதங்களாக தினமும் அலுவலகத்தினுள் நான் நுழைந்ததும் முதலில் ஜாதகம் பார்க்கும் நபர் கேட்டை நட்சத்திரக்காரராகத்தான் இருப்பார்.

விருச்சிகத்திற்கு மட்டும் எப்படி பிரச்சினைகளைத் தரலாம் என்று சனிபகவான் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறாரோ, உலகில் இப்படியெல்லாம் பிரச்சினை வருமா? என்று நினைக்கும் அளவிற்கு விருச்சிகம் வேதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது.

ஒரு வீட்டில் இன்னொருவரும் விருச்சிகமாகவோ, மேஷமாகவோ இருந்தால் அந்த குடும்பம் பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளை சொல்லிமாளாது. ஜாதக வலுவுள்ள சில ஆசீர்வதிக்கப்பட்ட விருச்சிகத்தினர் மட்டுமே தொல்லைகள் இன்றியும் அல்லது சமாளிக்கக்கூடிய அளவிற்கு அல்லல்களை சந்தித்தும் இருக்கிறீர்கள். பெரும்பாலான விருச்சிகத்தின் நிலைமை சங்கடத்திலும் சங்கடமான ஒன்றுதான்.

போனதெல்லாம் போகட்டும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு ஒரு மிகப்பெரிய விடியலையும், விடுதலையும் தந்து உங்களை மீட்டெடுக்கும் ஆண்டாக இருக்கும். வருடம் பிறந்த முதல் வாரத்தில் இருந்தே விருச்சிகத்தின் கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

வருடத்தின் ஆரம்ப நாளில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருப்பது ஒரு நல்ல அமைப்பு. மேலும் தற்போது சனிபகவான் அதிசார அமைப்பில் உங்களின் ராசியில் இருந்து விலகி இருப்பதும் ராசிநாதன் செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக ராசியையே பார்ப்பதும் விருச்சிக ராசிக்கு நன்மைகளை தரக்கூடிய ஒரு அமைப்பாகும்.

வருடத்தின் பிற்பகுதியில் சனிபகவான் ஜன்மச் சனி அமைப்பிலிருந்து முழுக்க விலகுவதும், இதுவரை இருந்துவந்த பகை வீட்டிலிருந்து மாறி, தனக்கு மிகவும் பிடித்த வீடான குருவின் வீட்டில் அமர்வதும் விருச்சிகத்திற்கு நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பு.

சனி விலகுவதால் சொந்த வாழ்வில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர் மரணம், பிரிவு, வேலையிழப்பு, ஆரோக்கியக் குறைவு, வேலை, தொழில், பிரச்சினைகள், வழக்குகள், கடன் தொல்லைகள் போன்றவைகளால் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து அனைத்தும் விலகி சந்தோஷம் தரக்கூடிய அமைப்புகள் உருவாகும்.

இந்த வருடம் நடக்க இருக்கும் மற்ற பெயர்ச்சிகளான ராகுகேது, குருப்பெயர்ச்சிகள் கூட விருச்சிகத்திற்கு சாதகமான அமைப்பில்தான் இருக்கின்றன. எனவே எப்படிப் பார்த்தாலும் விருச்சிக ராசியின் அனைத்துப் பிரச்னைகளையும், மன அழுத்தத்தையும் தீர்த்து, மற்றவர்களைப் போல சகஜமான வாழ்க்கைக்கு உங்களை வர வைக்கின்ற வருடமாக இது இருக்கும்.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போது வாங்க முடியும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள்.

இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் உங்கள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச்சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல் முயற்சி பலிதமாகும்.

அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல் துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர் களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.

பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு பணிகளில் சிலர் புகழ் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பின ருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களையே தரும்.

பெண்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லபலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன்மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

விருச்சிகம் விடியலை உணரும் வருடம் இது.

ஆதித்ய குருஜி
செல்: 8870 99 8888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிக ராசிக்கு இதுவரை விரையச்சனியாக உச்சநிலையில் இருந்து மிகுந்த தொல்லைகளையும், வேதனைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் தற்போது ஜென்மச்சனியாக மாறி ராசிக்கு இடம் மாறுகிறார். தம்முடைய ஜோதிட மூலநூல்களில் ஜென்மச்சனி என்பது மிகவும் கடுமையான எதிர்மறை விளைவுகளை தரும் சோதனையான காலகட்டம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆயினும் இந்த விதி தற்போது விருச்சிக ராசிக்குப் பொருந்தாது.

ஏனெனில் விருச்சிகராசிக்கு மட்டுமே சனிபகவான் ஏழரைச் சனியாக ஆரம்பிக்கும் போதே உச்சநிலையில் வருவார். அதன்படி கடந்த மூன்று வருட காலமாக விருச்சிகராசிக்காரர்கள் அனுபவித்து வரும் தொல்லைகள் எழுத முடியாதவை. ஏழரைச்சனியின் இரண்டரை வருடங்களான மூன்று பிரிவு கால கட்டங்களில் ஏதேனும் ஒரு பகுதியோ அல்லது நடுப்பகுதியான ஜென்மச் சனியோதான் மிகுதியான துன்பங்களை தரும்.

விருச்சிகராசிக்கு மட்டும் சனிபகவான் வரும் போதே உச்சமாவதால் ஆரம்பத்திலேயே கடும் துன்பங்களை கொடுத்து விடுவார். பிற்பகுதியான மீதி ஐந்து வருடங்களுக்கு பெரிய அளவு கொடுமைகளை செய்யமாட்டார். ஏனென்றால் உங்களின் ஜென்மராசியான விருச்சிகத்தில் அவர் பகைநிலை பெற்று வலுவிழப்பார் என்பதால் வலுவிழந்த சனியால் கெடுதல்கள் தரமுடியாது.

தீயவைகளைத் தரும் சக்தி சனிக்கு கிடையாது என்பதால் இனிமேல் ஏழரைச்சனியில் விருச்சிகராசிக்கு கெட்டபலன் இருக்காது என்பதோடு ஏற்கெனவே நடந்து முடிந்த கெடுபலன்களுக்கும் ஒரு தீர்வு இப்போது கிடைத்து சகஜமான நல்லவாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி. ஆயினும் இவை அனைத்தும் சம்பவங்களுக்கும், செயல்களுக்கும்தான் பொருந்தும் என்பதால் இனிமேல் கெட்ட செயல்களும், கெட்ட சம்பவங்களும் உங்களுக்கு நடக்காது.

அதே நேரம் இவை தொழிலுக்கோ, வேறுவகையான அமைப்புகளுக்கோ பொருந்தாது என்பதால் இந்த காலகட்டத்தில் அவசரப்பட்டு நிறைய பணமுதலீடுகள் செய்து புதிதாக தொழில் ஆரம்பிப்பது, இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவது, போன்ற விஷயங்களை செய்யக் கூடாது. மேலும் கெடுதல்கள் நடக்காது என்றுதான் சொல்கிறேனே தவிர நல்லது நடக்கும் என்று சொல்லவில்லை. நல்லவை நடப்பது என்பது ஏழரைச்சனி முடிந்தபிறகுதான் என்பதால் நீங்கள் நிச்சயமாக எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் அக்கறையுடனும் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வோடும் நடந்து கொண்டே ஆகவேண்டும்.

ராசியில் சனி இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் எந்த நேரமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை இருக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் வீண்அரட்டை, மேலதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக கீழ்நிலைப் பணியாளரிடம் விலகியே இருங்கள்.

சனி என்பவர் வேலைக்காரனைக் குறிப்பவர் என்பதால் அவருடைய காரகத்துவங்களில் இருந்துதான் பிரச்சனையை ஆரம்பிப்பார். இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகளை நீங்களே வீணடித்துக் கொள்வீர்கள். நம்பக் கூடாதவர்களை நம்பி மோசம் போவீர்கள். சரியான நேரத்தில் நல்லமுடிவு எடுக்க முடியாதபடி கோட்டை விடுவீர்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு துறை சார்ந்த நெருக்கடிகள் இருக்கும்.

மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும். வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். உங்கள் ராசிக்கு சுபர் மற்றும் யோகரான குருவின் உச்ச பார்வையால் வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக வரன் பார்த்து அலைந்தும் திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வைத்து செலவு செய்ய வைப்பார் சனிபகவான்.

வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. தொழில் ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

அதனால் சிக்கல்கள் வரக்கூடும். அவசியமற்ற ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள். எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு விடும். கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதால் அனைத்திலும் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.

இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும். நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்றுங்கள். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம் வீண் விரோதங்கள் வரலாம். பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும்.

அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. மொத்தத்தில் இந்தக் சனிப்பெயர்ச்சி கெடுதல்கள் எதுவும் இல்லாமல் சுமாரான பலன்களைத் தரும். மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச் சின்ன சிக்கல்கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

பனிரெண்டு ராசிக்காரர்களில் விருச்சிகராசிக்கு பலன் எழுதும் போது மட்டும் கூடுதல் கவனம் தேவைப்படும் அளவிற்கு விருச்சிகராசியின் நிலைமை இருக்கிறது. கடுமையான ஏழரைச்சனியின் ஆதிக்கத்தினால் உங்களில் பெரும்பாலோர் மனஅழுத்தத்திலும் மனஉளைச்சல்களிலும் இருந்து வருகிறீர்கள்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவிகிதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை வீட்டினில் கொண்டவர்கள் என்பதை ஒவ்வொரு வருட ராசிபலன்களிலும் குறிப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லோரையும் விட விருச்சிகத்திற்கு இழப்புக்கள் அதிகம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பெரும்பாலான அனுஷ நட்சத்திரக்காரர்கள் பட்ட துன்பங்கள் எழுத முடியாதவை. இந்த வருடம் பிறந்ததிலிருந்து அனுஷத்தின் பிரச்சினைகள் குறைய ஆரம்பித்து தற்போது கேட்டை நட்சத்திரக்காரர்கள் மன உளைச்சல்களில் இருக்கிறீர்கள்.

பிறந்த ஜாதகவலு உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட மிகச்சில விருச்சிகராசிக் காரர்களுக்கு மட்டுமே கஷ்டங்கள் எதுவும் இல்லை. மற்றவர்கள் யாரும் நன்றாக இல்லை. விருச்சிகத்தின் வேதனைகள் இந்தக் குருப்பெயர்ச்சி முதல் படிப்படியாக விலக ஆரம்பித்து அடுத்தவருடம் தீபாவளி முதல் பிரச்சனைகள் எதுவும் இல்லாத வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பும்.

விருச்சிகத்திற்கு மட்டும் ஏழரைச்சனி ஆரம்பிக்கும்போதே சனி உச்சமாக வலிமையுடன் இருப்பதால் ஆரம்பத்திலேயே சனி கடுமையான பலன்களைத் தரத் துவங்கி, முதல் ஐந்துவருடங்களில் ஏழரைச்சனியின் அனைத்துக் கெடுபலன்களையும் தந்து பிற்பகுதி இரண்டரை வருடங்கள் வேதனை எதுவும் தராமல் விட்டுவிடுவார், எனவே இனிமேல் உங்களுக்கு அனைத்துமே நல்லபடியாக நடந்து விரைவில் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி.

சென்ற ஆண்டு உங்கள் ராசிக்குப் பத்தில் குரு இருந்ததாலும் உங்களின் வேலை, தொழில் விஷயங்களில் நல்லபலன்கள் இல்லாமல் இருந்தது. சென்ற வருடத்தில் வேலை இழந்தவர்கள், வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள், காரணம் சொல்லப்படாமலேயே வேலையை விட்டு வெளியேற்றபட்டவர்கள் என விருச்சிகத்தின் வேதனைகள் அதிகம்.

அதேபோல சொந்தத்தொழில் செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் கடந்த காலங்களில் சுணக்கமான நிலையே இருந்து வந்தது. இப்போது நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும் மனக்குறை அனைத்தையும் தீர்க்கும் என்பதால் வீருச்சிகத்தின் வேதனை விலகும் குருப்பெயர்ச்சியாக இது இருக்கும்.

பதினொன்றாமிடத்தில் லாபகுருவாக இருக்கும் குருபகவான் இனிமேல் உங்களின் தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்களை தருவார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, நபர் அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குரு பகவான் நல்ல செய்திகள் கிடைக்க வைப்பார்.
கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.
பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். லாபஸ்தானத்தில் இருக்கும் குருபகவான் தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசிக்கு மூன்று ஐந்து ஏழாமிடங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த இடங்கள் மிகவும் வலுப்பெற்று உங்களுக்கு நல்ல பலன்களை செய்யும்.

குருபகவானின் மூன்றாமிடப்பார்வையால் இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்துவிட்டது. மூன்றாமிடம் கழுத்துப்பகுதியை குறிக்கும் என்பதால் இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் விரும்பியவாறே அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற அனைத்து உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். ஆனால் தேர்வு நேரத்தில் ஏதோ ‘மாய மந்திரம்’ செய்து பாசாகி விடுவீர்கள்.

இதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறை குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும். மொத்தத்தில் விருச்சிகராசிக்கு இந்தக் குருப்பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நல்ல யோகங்களையும் தரும் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

விடா முயற்சியால் விரைவில் வி.ஐ.பி.யாக மாறும் விருச்சிக ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ‘தைரியகாரகன்’ என்று வர்ணிக்கப்படுபவர். எனவே எந்தக்காரியத்தையும், தன்னம்பிக்கையோடு செய்து சாதனையாளராக திகழ்வீர்கள். மூளை பலம்தான், உங்களுடைய மூல பலம். பணத்தாலும், பொருளாலும் உங்கள் மனதை யாராலும் மாற்றிவிட முடியாது. ஆனால் பாசத்தாலும், நேசத்தாலும் மாற்றிவிடலாம்.

உரக்கப் பேசினாலும், இரக்க சிந்தனை உங்களுக்கு உண்டு. பிறக்கும் குழந்தையின் எதிர்காலத்தைக் கூட எடை போடும் ஆற்றலைப் பெற்ற நீங்கள், மறக்க முடியாத சம்பவங்கள் பலவற்றை மனதில் பதித்து வைத்திருப்பீர்கள். பதவிக்கும், பணத்திற்கும் மயங்காமல், உதவிக்கும், உண்மைக்கும் உறுதுணை புரிவீர்கள். 24 மணி நேரமும் தெய்வ சிந்தனையிலே திளைப்பதால் தான் அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பிற்கு ஆளாகிறீர்கள். இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொடுக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

தொழிலை வளப்படுத்தும் பத்தாமிடத்து ராகு,
பூமி சேர்க்கைக்கு அஸ்திவார மிடும் நான்காமிடத்து கேது!

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளி பயணத்தில் 8–1–2016 அன்று பின்னோக்கி வந்து, உங்கள் பிரச்சினைகள் தீர வழி வகுக்கப் போகிறார்கள். சிம்ம ராகு செல்வ வளம் பெருக்கும், கும்ப கேது கொள்கை பிடிப்போடு செயல்பட்டு வெற்றியை வரவழைத்துக் கொடுக்கும்.

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பலவிதங்களிலும் நன்மைகள் வந்து சேரப் போகிறது. இனி கவலை என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியில் இருந்து அகன்றுவிடும். தொல்லை கொடுத்தவர்கள் எல்லோரும் இனி தோள் கொடுத்து உதவுவார்கள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். சனிப்பெயர்ச்சியால் ஏற்பட்ட சஞ்சலங்களை இந்த ராகுப்பெயர்ச்சி ஓரளவு மாற்றியமைக்கும்.

பத்தாமிடம் பிழைக்கும் வழியை உறுதிப்படுத்தும் இடமாகும். எனவே, தொழிலில் மிகப் பெரிய வளர்ச்சியை காணப்போகிறீர்கள். குறைவான முதலீடு செய்து அதிக லாபமும் கிடைக்கும். அதிக முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய நண்பர்கள் தொழில் பங்குதாரர்களாக வந்து சேர வாக்களிப்பர். அங்ஙனம் பங்கு சேருகின்ற போது, அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து, உங்களுக்குரிய தொழில் ஸ்தானமும், அவர்களுக்குரிய தொழில் ஸ்தானமும் ஒத்துவரு கிறதா? தன ஸ்தானம் ஒன்றாக இருக்கிறதா? தசா புத்தி நன்றாக இருக்கிறதா? என்பதைப் பார்த்து சேர்த்துக் கொள்வது நல்லது.

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு சகலவிதங்களிலும் நன்மையை வழங்கப் போகின்றார்.‘வெற்றி’ என்ற மூன்றெழுத்து உங்கள் வீடு தேடி வரப் போகிறது. அரசியல் மற்றும் பொது நலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அரசியல் பிரமுகர்கள் முதல் அனைத்து பிரபலங் களும் உங்கள் குரலுக்கு செவிசாய்க்க முன் வரும் நேரமிது.

கீர்த்தி தரும் நான்காமிடத்து கேது!

நான்காமிடத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, குறிப்பிட்ட காலத்திற்கு குருவின் பார்வையும் கேது மீது பதிகிறது. எனவே, சுகங்களும், சந்தோஷங்களும் கூடுதலாக கிடைக்கும். வீண் குழப்பங்கள் அகலும். வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். பழைய வாகனங்கள் பழுது செலவுகளை கொடுக்கிறதே என்று புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்கும் பொழுது யார் பெயரில் வாகனம் வாங்குகிறீர்களோ அவர்களுக்கு ஏற்ற அதிர்ஷ்டம் தரும் எண்களின் ஆதிக்கத்தில், வாகனங்களுக்குரிய எண்கள் அமைவது நல்லது. ஒரு சிலருக்கு இட மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். நாடு மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் யோசித்து செய்வது நல்லது.

ஜென்ம சனியின் ஆதிக்கம் இருப்பதால் சனிக்கிழமை தோறும் அதிகாலையிலேயே ஆனைமுகப் பெருமானை வழிபடுவது நல்லது. குறிப்பாக 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ராகு–கேதுக்கள் இருந்தால் யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தி பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் சகல யோகங்களும் உங்களுக்கு வந்து சேரும். தன வரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்ல முடியும்.

நான்காமிடத்து கேது நன்மை தரும் என்றாலும், சுப விரயங்களையும் அதிகரிக்கச் செய்யும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அலர்ஜி போன்ற நோய்கள் அணுகும்போது ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனையை பெற்றால் சீரான உடல்வாகு அமையும். குடும்பத்திற்கு தேவையான மின் சாதனப்பொருட்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி மகிழும் நேரமிது. தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கும் வாய்ப்பு உருவாகும். வீடு கட்டும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பிறர் வியக்கும் அளவிற்கு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இளமையிலேயே உங்கள் மனதில் உருவாகும். செவ்வாய் பலம் பெற்றிருந்தால் மாபெரும் மாளிகை கட்டி குடியேறலாம். செவ்வாய் பலம் சற்று குறைவாக இருந்தால் பிறர் கட்டிய வீட்டில் குடியேறலாம். நாகரிகமாக கட்டிய வீட்டை விலைக்கு வாங்கி குடியேறும் முயற்சியில் வெற்றி கிட்டும். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் விளங்குவதால் இயற்கையிலேயே உங்களுக்கு பூமி யோகம் அதிகம். அதிலும் இதுபோன்ற காலங் களில் பூமி சேர்க்கையும், பூர்வீக சொத்துக்களால் லாபமும் கிடைக் கும்.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்

ராகு பகவான் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): எண்ணற்ற நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரப்போகிறது. புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். அரசு வழியில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். கவுரவ பதவிகளும், பொறுப்புகளும் கூட சிலருக்கு வந்து சேரலாம். அதிகாரிகளின் ஆதரவோடு நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நேரமிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடியே ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வந்து சேரலாம். சூரிய வழிபாட்டை இக்காலத்தில் முறையாக மேற்கொண்டால் காரியங்கள் அனைத்திலுமே வெற்றி கிடைக்கும்.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): வரன்கள் வாயில் தேடி வரும், வளர்ச்சி கூடும். திருமண பேச்சுகள் முடிவாகி இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். வீடு, வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலைப்பளு குறையும். சொத்துக்களால் அதிக லாபம் கிடைத்து மகிழ்ச்சி கொள்வீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முன் வருவர். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை: வழிபாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தும்பிக்கையான் மீதும், துர்க்கையின் மீதும் நம்பிக்கையோடு வழிபாடு செய்யுங்கள். அனுகூலமான நாள் பார்த்து சகல யோகங்களும் தரும் ஆலயத்தை தேர்ந்தெடுத்து சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வது அவசியம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.

பாத சாரப்படி கேது தரும் பலன்கள்

கேது பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை குறிப்பிட்டபடி நிறைவேற்றுவீர்கள். கணிசமான தொகை கைகளில் புரளும். இந்த நேரத்தில் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆபரணங்களையும் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானம் பெருகும். பிரபலஸ்தர்கள் உங்களுக்கு பின் னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

கேது பகவான் ராகு சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): வேலைப்பளு கூடுதலாக இருக்கும். வீடு மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பழுது செலவுகளை முன்னிட்டு புதிய வாகனங்கள் வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். கல்வி முயற்சி கைகூடும்.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும். உடன்பிறப்புகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். ஆரோக்கிய தொல்லை அகல மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். இந்த நேரத்தில் அங்காரக ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால், தொழில் வளம் பெருகவும், பண வரவு திருப்தி தரவும், நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நன்மைகள் அதிகரிக்கவும், நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரவும், வாரந்தோறும் வெள்ளிக் கிழமை அன்று விநாயகப் பெருமானை வழிபட்டு வருவதோடு, சனிக்கிழமை அன்று வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரையும், பிரதோஷத்தன்று நந்தியம் பெருமானையும் வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வசந்தம் உருவாகும்.